மட்டக் களப்பு ,மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்காக இதுவரை காலமும் அமுலிலிருந்த வாகன அனுமதி நடைமுறை (பாஸ்) இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு பாதுகாப்பு அமைச்சு வழங்கியதையடுத்து கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு உட்பட தென்பகுதிக்கு வாகனங்களில் வெடிப் பொருட்களும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்தே வாகன பாஸ் நடை முறை 2006 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது. இதற்கென தெரிவு செய்யபடப்ட பொலிஸ் சோதனை மையங்களில் வாகனங்கள் புறப்படும் தினத்தில் சோதனையிடப்பட்டு பயணிகள் உட்பட சகல விபரங்களும் பதிவு செய்யப்பட்டு 3 பிரதிகளை உள்ளடக்கிய பாஸ் வழங்கப்பட்டு வந்தது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புறப்படும் பயணிகள் 3 பிரதிகளில் ஓட்டமாவடி பாலம் பொலிஸ் சோதனைச் சாவடியில் முதலாவது பிரதியையும் இரண்டாவது பிரதியை மாவட்ட முடிவில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வழங்குவதோடு மூன்றாவது பிரதியை பயணம் முடியும் வரை வைத்திருக்க வேண்டும்
தற்போது இந் நடைமுறை நீக்கப்பட்டதையடுத்து இம் மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்கான வாகனப் பயணங்களுக்கு பாஸ் அனுமதி பெற வேண்டிய தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் இனிமேல் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிப் பத்திரங்களைப் பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.