2025

2025

மியன்மாரை உலுக்கிய பூகம்பத்தில் 1644 பேர் பலி! 

மியன்மாரை உலுக்கிய பூகம்பத்தில் 1644 பேர் பலி!

மார்ச் 28 வெள்ளிக்கிழமை மியன்மார் நாட்டின் மையப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆயிரணக்கானோர் பலியாகியுள்ளனர். இச் செய்தி எழுதப்படும் வரை 1644 பேர் பலியாகியுள்ளதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்துள்ளனர். மேலும் பூகம்பம் காரணமாக 2,376 பேர் காயமடைந்துள்ளதுடன் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் ஏற்பட்ட பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மியன்மார் பூகம்பத்தின் தீவிரம் தாய்லாந்து பாங்கொக் நகரிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பாங்கொக்கில் 6 பலியாகியுள்ளதாகவும் , 26 பேர் காயமடைந்தும் மற்றும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். எனவே அதற்கேற்ற வகையில் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !

வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் கடந்த மார்ச் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோகிராம் மற்றும் 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவை 46 பொதிகளாக கட்டப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

 

யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அக்கதிரைகள் கூட்டம் முடியும் வரை காலியாகவே இருந்தன.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஶ்ரீ பவானந்தராஜா, “அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, தான் கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக முற்கூட்டியே அறிவித்தலை வழங்கியிருந்தார். ஏனைய எவரும் முன்கூட்டியே அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.

 

8.2 இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகளை தாய்மார்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை பாலஸ்தீன சுதந்திர இயக்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோடார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி! 

மோடார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !

 

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதியமைச்சர் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார் . அவர் மேலும் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இதனை அவர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம் என்றார்.

அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மையை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம் . அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். எனவே இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.

வடக்கில் அத்துமீறும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எம்பி சிறீபவானந்தராஜா காட்டம் !

வடக்கில் அத்துமீறும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எம்பி சிறீபவானந்தராஜா காட்டம் !

 

பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் “அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்” என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அங்கு மேலும் பேசிய எம்.பி சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில், பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

 

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிவஞானம், “எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடனான சந்திப்பில் முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

படலந்த வதைமுகாம் உட்பட ஏனைய வதைமுகாம்கள் பற்றியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்

படலந்த வதைமுகாம் உட்பட ஏனைய வதைமுகாம்கள் பற்றியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்

பட்டலந்த வதை முகாம் போன்று பல வதைமுகாம்கள் இருந்தன. அவ்வாறான அனைத்து வதை முகாம்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க நேற்றைய தினம் மார்ச் 29 வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்த பின் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பிலும் கருத்து வெளியிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் காணிகள் விடுவிப்பு, வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் வடக்கின் கைத்தொழிற்ச்சாலைகளை மீள இயக்குதல் என படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அந்த நடைமுறைகளின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

அமைச்சர் பிமல் குறிப்பிடும் போது தெற்கில் ஜேவிபி, யுஎன்பி என்று பிரிந்து இருந்தது போன்று வடக்கு- கிழக்கில் எல்ரிரிஈ , புளொட் , ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், ரெலோ என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள். வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பூடகமாக தெரிவித்த வதைமுகாம்கள் விசாரணையில் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து இராணுவ துணைக்குழுக்களாக செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் நடத்திய வதைமுகாம்கள் தொடர்பான விசாரணகள் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக புளொட் மாணிக்க தாசன் தலைமையில் வவுனியாவில் வதைமுகாம் குறிப்பிடத்தக்கது.

ஆனையிறவு உப்பும் – உப்பு அரசியலும்: உப்பில்லா தமிழ் தேசியம் குப்பையில் !

 

நேற்றைய தினம் மார்ச் 29 ஆம் திகதி தேசிய உப்பு நிறுவனத்தின் அனுசரணையில் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்ச்சாலை திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்றைய தினம் மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்ச்சாலையில் 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்திற்கு 5 மெட்ரிக் தொன் மேசை உப்பை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டிலிருந்து ஆனையிறவு உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளதாகவும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் இவ் ஆரம்ப நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

 

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் , வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தனது உரையின் போது “ மன்னாரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை விட ஆனையிறவு உப்பே தரமானது “என குறிப்பிட்டார்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்தவகையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தேசிய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

 

மேலும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றும் போது “ எமது அரசாங்கம் பதவிக்கு வந்து 5 மாதங்களில் ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை விரைவாக திறந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்”. அவர் மேலும் குறிப்பிடும் போது “ கடந்த காலங்களில் ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பை வேறு தரப்புக்கள் கொள்வனவு செய்து, வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்தார்கள். ஆனால் இப்போது ஆனையிறவிலிருந்தே மக்களுக்கு உப்பை விற்பனை செய்யும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிட்டார்”.

 

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது உரையில், இன்றைய நாள் உங்களுகளும், எங்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். பல இன்னல்களைச் சந்தித்தாலும் எமது மண்ணின் வாசத்தை பரப்பியது ஆனையிறவு உப்புத்தான். பலரும் விரும்பிப் பயன்படுத்து ஆனையிறவு மேசை உப்பு மீண்டும் உங்கள் கைகளுக்கு வரப்போகின்றது. ஆனையிறவு உப்புக்கு தனியான ‘மவுசு’ உண்டு. விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் உலகம் எங்கும் இது விற்பனையாகும், என்று குறிப்பிட்டார்.

 

இதற்கிடையில் ஆனையிறவில் உற்பத்தி செய்யும் உப்பு “ ரஜலுணு” என்ற சிங்களப் பெயரில் சந்தைக்கு வருகிறது என சர்ச்சையை பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் கிளப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இந்த உப்பளம் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் கீழ் ஆனையிறவு உப்பு என்றே இயங்கியது. ஆனால் இப்போது ஏன் சிங்களப் பெயர். “ யாரோ பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதானால் அதை தமிழில் கூட வைக்க முடியாத நிலை” என சமூக வலைத்தளங்களில் உப்புக் காய்ச்சுகிறார்கள். உள்ளூராட்ச்சித் தேர்தல் சமீபத்தில் வர இருப்பதால் என்பிபி அதிரடியாக ஆனையிறவு உப்புத்தொழிற்ச்சாலையை திறந்து வடக்கின் வாக்குகளை அள்ளப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு “ உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தையே தொடங்குவார்கள் போலுள்ளது. காலனிய இந்தியாவில்ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்தி காலத்தில் கடல் நீரில் உப்புக் காய்ச்சுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

 

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ரஜ உப்பு என்ற பெயர் கடந்த கால ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டது. உடனடியாக அந்தப் பெயரை மாற்றமுடியாமையாலே தொடர்ந்தும் அதே பெயரில் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு “ ஆனையிறவு உப்பு “ என்ற பெயரிலேயே உலகெங்கும் விற்பனையாகும் என உறுதியளித்துள்ளார். இருந்தும் இந்த விடயம் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பெரிதாக்கப்படுகின்றது. இந்த பெயர் விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் போர்க் கொடி தூக்கியுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறிதரன் ஆனையிறவு உப்பளத்தை விரைவாக ஆரம்பிக்க கோரியதோடு , இந்தியாவுடன் தான் பேசியதாகவும் , ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை கையேற்க இந்தியா தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுக்கு உப்புத் தொழிற்ச்சாலையை தாரை வார்க்க விரும்பிய எம்பி சிறிதரன் பெயர் மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும் அமைச்சுக்கு கடிதம் எழுதியமை வேடிக்கையானது.

 

உப்புச் சத்தியாகிரகம் போல் ஒரு உப்பு எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வடக்கு கிழக்கை மீட்க வேண்டும் என சில சமூக ஊடகப்போராளிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருப்பதால் என்பிபி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வரும் போது உப்பைத் தெளித்து தமது எதிர்ப்பை காட்டும் படி அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் என்பிபி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளின் முன் உப்பு பைகளை வைக்கும்படியும் கோரியுள்ளனர். ஏனெனில் அவர்கள் உப்புப் போட்டு சாப்பிடாததால் ரோஷம் அற்று பெரும்பான்மை கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இப்படியாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வினோதமான போராட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

 

வடக்கு கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பாரிய பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, சட்டவிரோத மண் கடத்தல் , சுண்ணக்கல் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் தமிழ்ப் பாதாள உலக குழுக்களின் கொள்ளை மற்றும் கொலை அட்டகாசங்கள் என பல விடயங்கள் உள்ளன. ஆனால் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பெயரை வைத்து ‘ உப்பு அரசியல்’ ஒன்றை தொடங்கியுள்ளனர்.

 

“ஆனையிறவு உப்பு “ என்ற பெயரில் சுட்ட வேண்டியது ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கை. ஆனையிறவு உப்பளம் வடக்கின் அடையாளம். அது தன்னகத்தே பல வரலாற்று தடங்களை பதிவு செய்துள்ளது. ஆனையிறவு உப்பளம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான இடத்தினை வகித்துள்ளது. இந்த உப்புத் தொழிற்ச்சாலையை புனரமைக்க 2010 இல் 100 மில்லியனை அப்போதைய அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. பின்னர் 2015 இல் மேலதிகமாக 125 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டது. 2018 இல் 95 வீதமான புனரமைப்பு பணிகள் முடிவடைந்திருந்தாக கூறப்படுகின்றது. எம்பி சிறிதரன் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த போது ஏன் ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை திறக்க கோரவில்லை. 95 வீதமான வேலைகள் முடிவடைந்த நிலையில் இத் தொழிற்ச்சாலை 7 வருடங்களாக திறக்கப்படவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் என்பிபி உப்புத் தொழிற்ச்சாலையை இயங்க வைத்துள்ளது. ஆகவே வடக்கில் இயங்காதுள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளையும் மீண்டும் நல்ல நிலையில் இயங்க வைப்பதன் மூலம் வடக்கின் இளையோருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். “ யார் குத்தியும் அரிசியானால் சரி” . உசுப்பேத்தும் அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.