2022

2022

சிறுவர்களின் அழகான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகும் தொலைபேசிகள் – பெற்றோர்களே விழித்துக்கொள்ளுங்கள். !

அண்மையில் சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் ஒக்டோபர் முதலாம் தேதியன்று. கொண்டாடப்பட்டிருந்தது.

Better Future for Every Child ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த எதிர்காலம்  
என்ற மகுடவாசகம் 2022 ஆம் ஆண்டின் சிறுவர் தின மகுடவாசகமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் பல பாடசாலைகளில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறுவர் தின கொண்டாட்டங்கள் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பாடசாலை மட்டங்களில் பெரிதாக இடம்பெற்றிருக்காத நிலையில் இந்த வருடம் வெகுவிமரிசையாக பல பாடசாலைகளில் கொண்டாடப்பட்டிருந்தது.
உண்மையிலேயே எங்களுடைய குழந்தைகளுக்கு – எதிர்கால தூண்கள் எனப்படும் சிறுவர்களுக்கு நாம் வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை பெரியவர்களான நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் ஒரு பக்கத்தில் மாணவர்களிடையே வேகமாக பெருகி வரும் வன்முறை கலாச்சாரம், இன்னொரு பக்கமாக மாணவர்களிடையே வேகம் அடைந்து வரும் போதைப் பொருள் பழக்கம், சிறுவர்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் என  சிறுவர்களின் உலகம் மிகுந்த பாதுகாப்பற்ற ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவை தாண்டி இலங்கையில் இன்றைய தேதிக்கு சிறுவர்களை மிகவும் பாதிக்கக் கூடிய – நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தக்கூடிய ஒரு விடயமாக தொலைபேசி பாவனை உருவெடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதை அண்மையில் வெளியான மூன்று செய்திகள் தெளிவாக வெளிக்காட்டி இருந்தன.
செய்தி 01
கம்பளையில்  பேஸ்புக் பார்ட்டி ஒன்று இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்த அந்த பார்ட்டியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தோரில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் 14 தொடங்கி 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் என போலீசார் சுட்டிக் காட்டியிருந்தனர்.
செய்தி 02:
யாழ்ப்பாணம்- வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான். மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான். அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செய்திகளையும் இலகுவாக இன்றைய சமுதாயத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் சரி – பல பெற்றோரும் சரி இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர். இந்த செய்தி தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற தருணம் இது.
உண்மையிலேயே மேற்சொன்ன இரண்டு செய்திகளும் தொலைபேசி பாவனையால் இன்றைய சிறுவர்கள் எந்தளவு தூரத்திற்கு அச்சுறுத்தலான ஒரு உலகில் வாழ தலைப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கூறப்பட்ட இரண்டு செய்திகளிலும் உள்ள தவறுகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் சிறுவர்கள் அல்ல. பெற்றோர்களும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெரியவர்களுமே. சிறுவர்களின் கைகளுக்கு தொலைபேசிகளை கொடுக்கின்ற போது பெற்றோர் அவற்றின் நல்ல விடயங்களை – அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்க மறந்ததன் விளைவே மேற்கூறப்பட்ட இரு அபத்த சம்பவங்களும் ஆகும்.
கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தொலைபேசி – இணையம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் இடையேயான தொலைபேசி பாவனை இன்னும் தீவிர தன்மையினை எட்டி உள்ளது.
Mobile phone use by children – XpertSpeaks
சில பெற்றோர்கள் “என்னுடைய மகன் 24 மணி நேரமும் தொலைபேசியுடன் தான் இருக்கிறான். ” என சிலாகித்துக் கூறுவதையும் இன்றைய காலத்தில் காண முடிகிறது. சரி அந்த சிறுவர்கள் தொலைபேசிகளில் என்ன செய்கிறார்கள் என சற்று கூர்ந்து அவதானித்தால் அவர்கள் பெரும்பாலும்  Free fire,  pubG என வன்முறையை தூண்டக்கூடிய ஆபத்தான கேம்களை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது விளையாட்டு தானே என கடந்து செல்லக்கூடிய விடயம் அல்ல. இந்த விளையாட்டுக்கள் சிறுவர்களின் மனதில் ஏதோ ஒரு விதத்தில் வன்முறை குணத்தை விதைத்து விடுகின்றன. அத்துடன் தொடர்ந்து தொலைபேசி கேம்கள் விளையாடும் போது உடல் சார்ந்த – மனது சார்ந்த பல தாக்கங்களுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை தவிர கள்ளங் கபடமற்ற சிறுவர்களிடத்தில்  பாலியல் சார்ந்த விடயங்களை தவறான புரிதலோடு இந்த தொலைபேசிகள் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களில் ஆபாசமான பல இணைய  தளங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறுவர்களின் கைகளில் இருக்கக்கூடிய தொலைபேசிகளை பெற்றோர் கண்காணிக்காது விடுகின்ற போது ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற துர்ப்பாக்கியமான நிலைமையும் இன்று ஏற்படுத்துள்ளது. இது பாடசாலை காலங்களில் சக மாணவியையோ – சக மாணவனையோ – சக சிறுவனையோ –  சக சிறுமியையோ ஆபாசமான கண்ணோட்டத்தில் சிறுவர்கள் நோக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது. இயல்பாகவே பால் சமத்துவக்கல்வி நமது நாட்டில்  சிறுவர்களுக்கு முறையாக கற்பிக்கப்படுவதில்லை. இதனால் பால்நிலை சமத்துவம் தொடர்பான புரிதல் 20 வயதை தொட்ட இளைஞர்களிடம் கூட ஒழுங்காக இருப்பதில்லை. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் இன்னமும் அதிகம் இந்த தொலைபேசி பயன்பாட்டால்  முறையற்ற – புரிதலற்ற பாதையில் செல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
சிறுவர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட ஆரம்பித்ததை அடுத்து சிறுவர்கள் மைதானங்களை – ஓய்வு நேரங்களில் ஏனையவருடன் விளையாடுவதை முழுமையாக நிறுத்தி விட்டனர் என்றே கூற வேண்டும். கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் கூட தொலைபேசிகளில் கேம் விளையாடுவதிலும் – தொலைபேசியுடன் தனிமையில் இருப்பதிலுமே இன்றைய சிறுவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவுகளையே இன்றைய நாங்கள் பல பாடசாலைகளில் காண முடிகிறது. பல மாணவர்களின் உடல் எடை அதிகமாகி சிறுவயதிலேயே அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இதுவும் ஒரு வலமாக தொலைபேசி ஏற்படுத்திய ஆபத்தான விளைவு தான்.
இன்று சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கக்கூடிய அனைவருடைய கைகளிலும் இணைய வசதியுடன் கூடிய போன்களே காணப்படுகின்றன. வேலை முடித்து வந்ததிலிருந்து அடுத்த நாள் வேலைக்கு செல்லும் வரை குடும்பத்தின் அப்பா – அம்மா – அண்ணா – அக்கா என குடும்ப அங்கத்தவர்கள் பலர் தொலைபேசியிலேயே காலத்தை கழித்து விடுகிறார்கள். பெற்றோரும் தொலைபேசியில் பிள்ளைகளும் தொலைபேசியில் என்ற நிலையே அதிக குடும்பங்களில் காணப்படுகின்றது. குடும்ப அங்கத்தவர்களுக்கு இடையே சீரான ஒரு தொடர்பு அல்லது பிணைப்பு இன்று அதிக குடும்பங்களில் இல்லாமலேயே போய் விட்டன. இதனால் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள் – பிரச்சனைகளை கூட பெற்றோர் பெரியவர்கள் கவனிக்காது விட்டு விட்ட சோகம் பல இடங்களில் தொடர்கிறது.
இன்றைய நாட்களில் ஆண்ட்ராய்ட் போன்கள் சிறுவர்களின் கைகளில் அதிகமாக உலவ ஆரம்பித்துள்ளதன் விளைவு எப்படியிருக்கிறது என்பதை அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலை வெளியிட்டிருந்த ஒரு அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தது. அந்த அறிக்கையின்படி,
டிக்டொக் செயலிக்கு அடிமையாகியதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேவேளை, தரம் 09 ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ, பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர். 
குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.  இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால், நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.’
என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் வவுனியாவில் உள்ள ஒரு பிரபல பாடசாலை அதிபரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் மாணவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்டு இருந்த குறித்த பாடசாலையின் அதிபர் ” மாணவர்கள் முன்னைய காலங்களைப் போல மைதான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லை. தொலைபேசிகளை பார்க்கின்ற போது மட்டுமே அவர்களுடைய முகங்கள் சந்தோஷமடைகின்றன. இன்றைய தேதிக்கு சிறுவர்களை சந்தோஷப்படுத்த தொலைபேசிகள் மட்டுமே போதுமானவை. இரவு நேரங்களில் அதிகமாக தொலைபேசிகளை பாவிக்கும் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் சோர்வாகவும் – தூக்க மயக்கத்திலும் இருக்கிறார்கள்” என விசனப்பட்டு கொண்டார்.
இன்று பல சிறுவர்கள் அதிகம் எதிர்கொண்டுள்ள குறைபாடு பார்வை தொடர்பானதாகும். இதற்கான காரணம் மாணவர்கள் இடையே அதிகரித்த தொலைபேசி பாவனையாகும்.” ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் , நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.” என்கிறார்கள் கண் வைத்தியர்கள். இன்று சிறுவர்களை அதிகமாக கண்கிளினிக்குகளில் காண முடிகின்றது. சிறுவயதிலேயே அவர்கள் கண் வலி காரணமாக கல்வி கற்க முடியாத சூழலையும் எதிர்கொள்கின்றனர். இதைத் தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
How to use parental controls on a smartphone | Gadget Cover
எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து சிந்திக்கும் ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களிடம் தொலைபேசி பாவனையை குறைத்துக் கொள்வதற்கு வலியுறுத்த வேண்டும். அதே தொலைபேசிகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர் பிள்ளைகள் தொலைபேசிகளை பாவிக்கும் போதும் சரியான வகையில் அதனை பயன்படுத்துகின்றனரா..? அவர்களுடைய தொலைபேசி பாவனை முறையானதாக உள்ளதா ..? தவறானதாக இருப்பின் ஏன் தவறானது..? என்பவற்றை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி சொல்லி கொடுத்து  கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் ஒவ்வொருவருடைய பொறுப்பும் ஆகும். ஆனால் பெற்றோர்களும் பெரியவர்களும் பணம் , உழைப்பு, சொகுசான வாழ்க்கை இவை மட்டுமே தேவையானது என்ற கோணத்தில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ள இன்றைய சூழலில் சிறுவர்களுடன் குறிப்பாக தமது பிள்ளைகளுடன் தங்களுடைய நேரத்தை ஒதுக்க தயார் இல்லை என்பது தொலைபேசியில் தொடங்கி சிறுவர்கள் இன்றைய தேதிக்கு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகும்.
இன்றைய தினம் ஒவ்வொரு சிறுவர்களின் கைகளிலும் உள்ள ஆண்ட்ராய்டு போன்கள் அவர்களினுடைய எதிர்காலத்தினை மெல்ல மெல்ல சிதைத்து விடுகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோருமே நினைவில் வைத்திருக்க வேண்டும். காலம் வேகமாக நவீன உலகை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் நவீன உபகரணங்களை கையாள ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் சிறுவர்களின் கைகளில் உள்ள தொலைபேசி அளவான வகையில் தேவைக்கேற்றாற் போல் மட்டுமே இருந்தால் அது தேவையற்ற – எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது.
எங்களுடைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவதற்காக இந்த சிறுவர் தினத்தில் நாம் உறுதி பூணுவோமாக. மெல்ல மெல்ல சிறுவர்களை தொலைபேசி உலகில் இருந்து யதார்த்தமான உலகத்திற்கு கொண்டு வந்து வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை அவர்களை உணர வைப்பதற்கு பெற்றோர்களும் பெரியோர்களும் – ஆசிரியர்களும் வழிசெய்ய முன்வர வேண்டும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் தேசம் இணையத்தின்  இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் காங்கிரஸ் அரசும், பா.ஜ.க அரசும் ஒரே போக்கையே பின்பற்றுகின்றன – பழ.நெடுமாறன் விசனம் !

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்தமை கண்டிக்கத்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நேற்று முன்தினம் (06) சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது  இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை கண்டித்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக  தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு கையாண்ட நடைமுறையையே பாரதிய ஜனதாக் கட்சி அரசும் பின்பற்றுவதாகவும், தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை தமிழர்களை இந்திய அரசு கைவிட்டுள்ளதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

5,320 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த கப்பல் – கப்பலை கைப்பற்றிய இந்திய கடற்படை!

சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது நேற்று முன்தினம் (06) கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 1,200 கோடி இந்திய ரூபாய் (5,320 கோடி இலங்கை ரூபாய்) என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கப்பலுடன் ஈரான் நாட்டின் ஆறு பேரை இந்திய படையினர், கேரளாவின் மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இலங்கையின் கப்பல் ஒன்றுக்கு மேலும் சரக்குகளை வழங்குவதற்காக குறித்த கப்பல் இந்திய கடற்பரப்புக்கு புறப்பட்டபோதே இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இலங்கைக் கப்பலை அடையாளம் கண்டு இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்ததது ஏன்.? – இந்தியா விளக்கம் !

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருங்கள் – சுற்றுலாப்பயணிகளுக்கு அமெரிக்கா ஆலோசனை !

வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு ..? – வெளியாகியுள்ள அறிவிப்பு !

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்: புதின்  பிறந்தநாளில் விடுக்கப்படும் செய்தி என்ன?ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஹிஜாப் விவகாரம் – சிறுமியை கொலை செய்து ரகசியமாக புதைத்த பாதுகாப்பு படை !

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் திகதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஈரான் அரசு மற்றும் அதிபர் இப்ராகிம் ரைசிக்கு எதிராக திரும்பியுள்ளது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது. செப்டம்பர் 20ஆம் திகதி  அன்று தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற 17 வயது சிறுமி ஒருவர் மாயமானார் அவரது பெயர் நிகா ஷகராமி. அந்த சிறுமியை ஈரானிய பாதுகாப்புப் படையினர் கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலில் அவரது மூக்கு உடைக்கபட்டு இருந்தது. மண்டை ஓடு சிதைந்து இருந்தது. பின்னர் அவரது இறுதி சடங்கில் கூட்டம் கூடாமல் இருக்க அவரது உடலை திருடி ரகசியமாக புதைத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதிகாரிகள் நிகா ஷகராமியின் உடலை கைப்பற்றி 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக புதைத்துள்ளனர் என்று பிபிசி பாரசீக வட்டாரங்கள் தெரிவித்தன.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு !

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர்.

அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.  அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் போராட்டம் , ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு !

ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு அதிபர்  அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார். மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு – ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு !

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது.

இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

´அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக´ இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.