இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்ததது ஏன்.? – இந்தியா விளக்கம் !

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *