August

August

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 60 பில்லியன் ரூபா தேவை – அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவிப்பு

jaffna-town.jpgயாழ்.  மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய 60 பில்லியன் ரூபா தேவை என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சியாவோ யூ. சர்வோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு வியாழன் மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.

இக்குழுவினர் யாழ். செயலகத்தில் யாழ். அரச அதிகர் இமெல்டா சுகுமார் தலை மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பேசிய யாழ். அரச அதிபர் கூறியதாவது,

யாழ். மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆறாவது திட்டமாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சிக்கிடையே யான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்திற்கு 20 ஆயிரம் பில்லியன் ரூபாவை ஒதுக்கி யுள்ளது. அத்துடன் அரச திணைக்கள புனரமைப்புக்கு 226 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 வீதிகள் புனரமைப்புக்கும் இறங்குதுறை புனரமைப்புக்கும் நிதி வழங்கி வருகிறது. நெடுந்தீவு – குறிக் கட்டுவான் இடையில் பயணிகள் சேவையிலீடுபடுத்துவதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதுதவிர சுகாதார சேவைகளுக்கு 160 மில்லியன் ரூபா, போதனா வைத் தியசாலைக்கு ஆயிரத்து 395.50 மில்லியன் ரூபா, விவசாயத்துறைக்கு 543.50 மில்லியன் ரூபா, சுயதொழில் கடன் தேவைகளுக்கு 100 மில்லியன் ரூபா, மின்சாரத் துறைக்கு ஆயிரத்து 123 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் துறைக்கு இரண்டாயிரத்து 810.38 மில்லியன் ரூபா, வீதி அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா. இன்னமும் தேவைப்படுவதாக அரச அதிபர் எடுத்து விளக்கினார்.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் – உரியவர்களை அடையாளம் காணும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்

kilinochchi-district.jpgஇறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.

இதற்கான நடமாடும் சேவை இன்று (22) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  தெரிவித்தார்.

இன்றைய தினம் உரிமத்தை அடையாளம் காணும் பணியை நிறைவு செய்ய எதிர் பார்ப்பதாகவும் கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தமது உரிமத்தை உறுதிப் படுத்தியுள்ளனர். வாகனப் பதிவுச் சான்றிதழ், இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுமென்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கணக் காளர் ஜெயராசா  தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தேர்தலில் ஜூலியாவின் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை

அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்   தலைமையிலான தொழிற்கட்சி தோல்வியைத் தழுவும் சாத்தியம் காணப்படுகிறது.

12.5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜூலியாவின் தொழிற்கட்சி 49.2 சதவீத வாக்குகளையும் கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 50.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக அவுஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
2007 தேர்தலில் தொழிற்கட்சி பெற்றிருந்த வாக்குகளின் 3.5 சதவீதம் எதிரணிக் கூட்டணி வசம் சென்றுள்ளது. 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளால் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

பொன்சேகா மீது இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை

sf.jpgமுன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.  நேற்றைய அமர்வில் நான்காவது சாட்சியின் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியால் குறுக்கு விசாரணை இடம் பெற்றதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவலவை மேற்கோள்காட்டி இணையத்தள செய்திச்சேவை தெரிவித்தது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு இராணுவ நீதிமன்ற அமர்வு இடை நிறுத்தப்பட்டதுடன் நாளை திங்கட்கிழமை 2 மணிக்கு மீண்டும் அமர்வு இடம் பெறும் என்று பேச்சாளர் கூறியுள்ளார். பொன்சேகா இராணுவத்தளபதியாக இருந்த போது இலங்கை இராணுவத்துக்கு முறையற்ற விதத்தில் கொள்வனவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம் பெறுகிறது.

இந்தியா – இலங்கை இன்று மோதல் : யுவராஜ்சிங் உடல் தகுதி

randiv.gifஇந்தியா,  இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதுவரை 4 ஆட்டம் முடிந்துள்ளன. அதன்படி நியூசிலாந்து 7 புள்ளியுடனும், இலங்கை 6 புள்ளியுடனும், இந்தியா 5 புள்ளியுடனும் உள்ளன.

5-வது “லீக்” ஆட்டம் தம்புள்ளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிடும்.

கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாத யுவராஜ்சிங் உடல் தகுதி பெற்றுள்ளார். அவர் இடம் பெறும் பட்சத்தில் வீரட் கோக்லி அல்லது ரோகித் சர்மா நீக்கப்படலாம்.

நாடு முழுவதும் இன்று இடியுடன் கடும் மழை – பலத்த காற்று; மின்னல் தாக்கம்:

rain0000.jpgதென் மேற்கு பருவ காலநிலை தீவிர மடைந்திருப்பதால் நாட்டின் பல பகுதி களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதென காலநிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது. சில இடங்களில் இன்று 100 மி.மீற்றருக்கும் கூடுதலான மழை பெய்யுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக் கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மேற்கு, சப்ர கமுவ, மத்திய மாகாணங்களில் பரவலான மழை பெய்யும். யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, காலி, மாத்தறை மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதேநேரம், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் மழை பெய்யும்.

மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்குமென காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 90.6 மி.மீ மழை பெய்துள்ளது.

மலையகத்தில் நீரேந்து பகுதிகளிலும் கூடுதலான மழை பெய்துள்ளது. இதன்படி, லக்ஷபானவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக 141.8 மி.மீ மழை பெய்துள்ளது. நோட்டன் பிறிட்ஜில் 138 மி.மீ மழையும் கென்யனில் 112 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதற்கிடையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 139.9 மி.மீ மழை கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வைத்தியர்களின் இலவச வைத்திய முகாம் நிறைவுபெறுகிறது

இலங்கை யிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையில் புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அமெரிக்க வைத்தியர்களின் இலவச வைத்திய முகாம் இன்று நிறைவுபெறுகிறது

சிறைக்கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்

இன்று காலை போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கைதி சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்த வேளை சிறை காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மேர்வின் சில்வாவுக்கு எதிராக நேரடி முறைப்பாடு எதுவும் இல்லை”

mervyn.jpgமேர்வின் சில்வாவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் போது ஊடகங்கள் சாட்சியமாக பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நேரடியான முறைப்பாடுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. ஆயினும் ஊடகங்கள் சாட்சியமாக செயற்பட்டிருந்தன. ஒழுக்காற்று விசாரணையின் போது இவை பரிசீலனைக்கு எடுக்கப்படும். விசாரணையின் போது என்ன தீர்மானம் எடுக்கப்படுமோ அச்சமயம் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவை முக்கியவிடயமாகக் கவனத்திற்கு எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லையென்ற குற்றச்சாட்டில் சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்துடன் முன்னாள் பிரதியமைச்சர் கட்டிவைத்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியை இழந்ததுடன், சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் காணிகளை வெளியார் கைப்பற்றும் நிலைமை கிடையாது – கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணி உரிமையுள்ள மக்கள் உண்மையான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார்.

தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்குத் தென் பகுதியிலிருந்து செல்லும் சிலர் மக்களின் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அவ்வாறான தகவல்களோ முறைப்பாடுகளோ தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார். கடந்த சமாதான முன்னெடுப்பு காலத்தில் காணிகளை விற்றவர்கள், அதற்கான உரிமை மாற்றத்தைக் காணி உறுதிகளில் மேற்கொள்ளத் தவறியிருக்கிறார்கள். இதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறு சிக்கல்களை எதிர் நோக்குபவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரச அதிபர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தும் இன்னமும் மீளக்குடியமர முடியாமல் முகாமில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், அவர்கள் என்ன காரணத்தினால் மீளக்குடியமர முடியாதுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முழுமைப் படுத்தப்படாமையினாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் சில குடும்பங்கள் மீளக்குடியமர்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தவிரவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் தற்போது வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து மீளவும் வருபவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் கரைச்சி பகுதியில் 70 குடும்பங்கள் மீளக் குடியேறியதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தற்போது சொந்த இடம் திரும்பி வருவதாகவும் அவர் சொன்னார்.