யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய 60 பில்லியன் ரூபா தேவை என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சியாவோ யூ. சர்வோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு வியாழன் மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.
இக்குழுவினர் யாழ். செயலகத்தில் யாழ். அரச அதிகர் இமெல்டா சுகுமார் தலை மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பேசிய யாழ். அரச அதிபர் கூறியதாவது,
யாழ். மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆறாவது திட்டமாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சிக்கிடையே யான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்திற்கு 20 ஆயிரம் பில்லியன் ரூபாவை ஒதுக்கி யுள்ளது. அத்துடன் அரச திணைக்கள புனரமைப்புக்கு 226 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 வீதிகள் புனரமைப்புக்கும் இறங்குதுறை புனரமைப்புக்கும் நிதி வழங்கி வருகிறது. நெடுந்தீவு – குறிக் கட்டுவான் இடையில் பயணிகள் சேவையிலீடுபடுத்துவதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதுதவிர சுகாதார சேவைகளுக்கு 160 மில்லியன் ரூபா, போதனா வைத் தியசாலைக்கு ஆயிரத்து 395.50 மில்லியன் ரூபா, விவசாயத்துறைக்கு 543.50 மில்லியன் ரூபா, சுயதொழில் கடன் தேவைகளுக்கு 100 மில்லியன் ரூபா, மின்சாரத் துறைக்கு ஆயிரத்து 123 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் துறைக்கு இரண்டாயிரத்து 810.38 மில்லியன் ரூபா, வீதி அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா. இன்னமும் தேவைப்படுவதாக அரச அதிபர் எடுத்து விளக்கினார்.