இறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.
இதற்கான நடமாடும் சேவை இன்று (22) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் உரிமத்தை அடையாளம் காணும் பணியை நிறைவு செய்ய எதிர் பார்ப்பதாகவும் கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தமது உரிமத்தை உறுதிப் படுத்தியுள்ளனர். வாகனப் பதிவுச் சான்றிதழ், இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுமென்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கணக் காளர் ஜெயராசா தெரிவித்தார்.