தமிழர்கள் பிரிவினைவாதிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் நாட்டை நாசம் செய்வோர் என்றும் பலபட்டம் கட்டி ஒரினத்தின் ஐந்தில் ஒருபங்கை பயங்கரவாதச் செயல்களால் கொன்று குவித்துவிட்டு ஒற்றுமையைப் பற்றியும், காருண்யத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு வெள்ளரசங் கிளைகளுடன் பௌத்த மதத்தைக் கொண்டு வடக்குக் கிழக்கு எங்கும் வந்திருக்கிறார்கள் கிட்லரின் வாரிசுகளான பெரும்பான்மையின் இருபெருங்கட்சிகள். இவர்கள் வடக்கில் இருந்துதான் வெள்ளரசு தெற்கே போனது என்பதை அறியாதவர்கள். வரலாற்று ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் மூத்தமுன்னோடிகளாய் மனிதநாகரீகத்தின் நாகர்கள் என்பதை அறியாதவர்கள் இவர்கள். நாகத்தில் சயனம் செய்வது விஸ்ணுபகவான் மட்டுமல்ல தியானம் செய்வது புத்தனும்தான். ஈழத்தமிழர்களின் சரித்திரம் மகாவம்பான மகாவம்சத்தால் மட்டுமல்ல அரசியல் கத்துக்குட்டிகளாலும் தான் திசைமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தமிழுக்கு அணிகலனாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்கள் இரண்டில் ஒன்று மணிமேகலை. இந்த மணிமேகலை எனும் புத்தபிச்சுணி யார்? காவியநாயகி கண்ணகியின் சக்களத்தியான மாதவியின் மகள் தான். இவள்தான் புத்தமதத்தையும் அரசமரத்தையும் நாடெங்கும் கொண்டு திரிந்தவள். இவளுடைய இரத்தம்தான் சங்கமித்திரை எனும் பிச்சுணி. சங்கமித்திரை மாதகலுக்கருகிலுள்ள சம்பில்துறை எனும் துறைமுகத்தில் இறங்கி முதன் முதலில் நட்ட அரசமரந்தான் இன்றும் சுழிபுரத்திலுள்ள பாராளாய் முருகமூர்த்தி கோவிலில் இன்றும் நிற்கிறது. இராஜபக்சவும் மகனும் மனைவியும் பரிவாரங்களும் புதிதாக யாழ்பாணத்திற்கு அரசமரம் கொண்டு வருகிறார்கள். வேரூன்றி விழுதுவிட்ட அரசமரங்கள் எம்தமிழ் தேசத்தில் போதியளவு உண்டு. கண்கெட்டுத் திரிகிறார்களோ கருத்தற்றவர்கள்? எமக்கு அரசமரம் தெற்கில் இருந்து தேவையில்லை. காகம் தின்றுவிட்டுப் போடும் எச்சத்துடன் விழும் அரசமரவிதைகள் பனம்வட்டுக்களில் முளைக்கிறது. இதுதான் எமது மனிதநேய பௌத்த ஒருமைப்பாட்டின் குறியீடாகும். நாம் தமிழர்கள் பௌத்தத்தை எதிர்த்தவர்களல்ல ஏற்றவர்கள். பௌத்தவர்களாக வாழ்ந்தவர்கள். சிங்களப் பௌத்தத்துக்கு முன்னோடிகளான நாங்களா பிரிவினைவாதிகள்?
வெள்ளையர்கள் எமது நாட்டைக் கொள்ளையடிக்க வந்தபோது நாடு துண்டாடப்பட்டு இருந்ததை சரித்திரங்கள் சொல்லும். வெள்ளையன் ஆட்சியை இலகுவாக்க எல்லாச் சிற்றரசுகளையும் பிடித்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தான். இங்கே ஒருவிடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது இலங்கை நாட்டின் கடைசி மன்னனும் அரசும் தமிழனுக்குரியது என்பதை எந்த மன்னர்களாலும் மறுக்க முடியாது. இன்று சிங்களமாக இருக்கும் கண்டி அரசுதான் இலங்கையின் கடைசி அரசாகவும் அதை ஆண்டவன் தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கனாகவும் இருந்தான். கண்டியரசு கைமாறும்போது எழுதப்பட்ட சாசனம் இன்றும் தமிழில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. கண்டியின் கடைசி வாரிசு தமிழன் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் தமிழா?
தமிழர்களின் அரசியல் வாழ்க்கை வட்டுக்கோட்டையில்தான் ஆரம்பித்தது என்று வட்டுக்கோட்டையைக் கொண்டு திரிவது வேதனைக்குரியதே. நாம் பிரிவினைவாதிகள் அல்ல தேசியவாதிகள் ஒற்றுமைவாதிகள். ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் வேளை சரித்திரத்தைத் தொட்டுப்பார்ப்பது அவசியமானது என்பதால்தான் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இலங்கையெனும் தேசத்தை தமிழர்களிடம் கைப்பற்றிய வெள்ளையர் அதைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியது தமிழரிடம் தானே. வெள்ளையன் வெளியேறும் போது நாட்டை எடுத்தமாதிரியே கொடுக்கவா என்று திண்டாடியபோது நாம் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக ஒருநாடாய் வாழ்வோம் என்று ஒற்றுமையை முன்னிறுத்தி ஐக்கிய இலங்கையை மனமார ஏற்றவர்கள் எமது முதுபெரும் தமிழ் தலைவர்களான சேர்.பொன். இராமநாதன் போன்றோர். நாமா பிரிவினைவாதிகள்? நாமா நாட்டைத் துண்டாட எண்ணினோம். நாம் பிரிந்து வாழத் தூண்டப்பட்டோம், தள்ளப்பட்டோம். ஒதுங்கி, பதுங்கி வாழநினைத்தோமே அன்றி உறுமி உதைத்து வாழவிரும்பவில்லை. எமக்குச் சொந்தமான எடுக்கவேண்டிய உரிமைகளை கேட்டே வாங்க முயன்றோம்.
சுமார் 1915ல் வெள்ளையனின் ஆட்சியின் கீழ் இருந்தபோது முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இனக்கலவரம் ஏற்பட்டபோது அது கட்டுமீறியது. இவர்களின் ஒற்றுமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தைச் சுமந்து சேர்.பொன். இராமநாதன் இலங்கை வந்தபோது குதிரைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு அவரைத் தேசியச்சின்னமாய், ஒற்றுமையின் கொற்றவராய் தம்கையால் வடம்பிடித்து இழுத்தவர்கள் சிங்களவர்களும் முஸ்லீம்களும். இப்போ சொல்லுங்கள் நாமா பயங்கரவாதிகள்? பிரிவினைவாதிகள்? நாம் ஏன் பிரிவினை கோரினோம்? நாம் அழிவது எமக்கு ஆசையல்ல? போரில் பேராசை கொண்ட மனநோயாளிகளும் அல்ல. சேர்ந்து வாழமுடியாத போது ஒதுங்கி வாழ முயற்சித்தோம். ஒதுக்கி வாழவில்லை. இது எப்படித் தப்பாகும்?
வெள்ளையன் ஆட்சியில் இருந்தபோது கிறிஸ்தவத்தால் புத்தமதம் புறக்கணிக்கப்படுகிறது என்று பிக்குகளைத் தூண்டியும், மக்களின் மனங்களில் மதப்பிரிவினையை ஊன்றியும் வெகுண்டு எழச்செய்தவர் அனாகரிக தர்மபாலா எனும் சிங்களவர். இதன் விளைவுதான் பௌத்த ஏகாதிபத்தியப் பேராண்மை இன்றும் தலைவிரித்தாடுகிறது. இதைத் தொடர்ந்து தம்மதங்களும் அழிந்து விடக்கூடாது என்பதால் இந்துக்களும் முஸ்லீம்களும் மதப்பாதுகாப்புக்கான படைக்கலங்களைத் தூக்கினார்கள். அதில் இந்துக்களுக்கு முக்கியமானவர் நல்லூர் ஆறுமுகநாவலர். கிறிஸ்தவ அரசுகளால் இந்துமதம் அழிக்கப்பட்டு வந்தது. கோவில்களை உடைத்தே யாழ்பாணக்கோட்டை கட்டப்பட்டது. மதச்சடங்குள் மறுக்கப்பட்டன. எமது கரையோரமக்கள் பலாற்காரமாக மதம்மாற்றப்பட்டார்கள். கிறீஸ்தவம் சிலைவணக்கத்தையோ பொட்டு, பிறை, தாலி போன்றவற்றையோ ஏற்றதில்லை. அது பைபிளுக்கும் பொருந்துவதில்லை. ஆனால் ஈழத்தில் கத்தோலிக்கர்கள் இவற்றைச் செய்தார்கள். காரணம் இதையும் மறுத்தால் மக்கள் புரட்சி செய்வார்கள் என்பதை போத்துக்கேய ஒல்லாந்தார் உணர்ந்திருந்தார்கள். இவர்கள் நிலைகொண்ட இடங்கள் கரையோரமாக இருந்ததனால் கரையோரமக்களை மதரீதியாக மாற்றுவதனூடு நிலத்தைத் தக்கவைக்க முனைந்தார்கள்.
இப்படியாக கிறிஸ்துவத்துடன் வந்த வெள்ளையரசுகளால் பௌத்த இந்து இஸ்லாம் புறக்கணிக்கப்பட்டு அழிய ஆரம்பித்த போதும் கூட எம்மக்கள்தான் மதத்தால் பிரிந்தார்கள் ஆனால் இனத்தால் ஒற்றையாக இருக்க விவிலியம் எனும் பைபிளை எம்முறவுகளுக்குத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவர் ஆறுமுகநாவலர். இங்கேயும் தமிழர்களாகிய நாம் பிறமதம் புகுந்தாலும் நாம் மதரீதியாக ஒற்றுமையாகத்தான் வாழ விரும்பியிருக்கிறோம் என்பதைக் காட்டவில்லையா? நாங்களா பிரிவினைவாதிகள்? பயங்கரவாதிகள்?
சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்து கண்ணகிக்குக் கோவிலமைத்து விழாவெடுத்தபோது இலங்கை மன்னனான சிங்கள கயபாகுவையும் அழைத்துக் கௌரவித்தான். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் கண்ணகிக்குச் சிலைவடித்து மாளிகைக்கு அருகில் கோவிலமைத்தான். இதுதான் இன்றும் சிங்களத்தில் பத்தினி தெய்யோ என்று அழைக்கப்படும் பத்தினித் தெய்வமான கண்ணகியாகும். இங்கேயும் இந்தியத் தமிழனாக இருந்தாலும் மதரீதியாக நாம் ஒற்றுமையையே விரும்பினோம். இதனால் இந்துக்கள் தான் தமிழர்கள் என்று அல்ல, அன்று தமிழர்கள் பெரும்பான்மையினர் இந்துமதத்தையே தழுவியிருந்தார்கள்.
வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் சுதத்திரத்துக்காகப் போராடியவர்கள் முக்கியமாக சிங்கள இடதுசாரிகள். இவர்களில் முக்கியமானவர்கள் கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.எம். பெரேரா, பிலிப்குணவர்த்தனா போன்றோரைக் கூறலாம். இவர்களுடன் இளைஞனாக தோளோடு தோள் சேர்த்து நின்ற ஒரு தோழன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்றால் எல்லோரும் வாயில்தான் கைவைப்பீர்கள். கியூபாவின் இடதுசாரிப் புரட்சிவாதியும் முன்னைய நாட்டுத் தலைவனுமான பெடல் கஸ்ரோவுடன் தொடர்புகளையும் உறவுகளையும் ஜே.ஆர் கொண்டிருந்தார் பேணிவந்தார். இடதுசாரி நூல்மையம் ஒன்றை உருவாக்கி ஜே.ஆர் தான் நடத்தினார் என்றால் நம்புவீர்களா? இதே ஜே.ஆர் தான் இனவெறியனாக, இடதுசாரித்துவம் தொட்டுப்பார்க்காத துவேசத்தை ஈழமண்ணில் ஊற்றி அரசியல் இலாபங்களுக்காக இனவெளியைத் தூண்டி விட்டு தமிழர்களைக் கொன்று குவித்தார். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று போருக்கு சவால் விட்டவரும் இவரே. இவரது இயற்பெயர் ஜீனியர் ரிச்சட் ஜே.ஆர் ஜெயவர்தனா பெயரில் இருந்து மதத்தை அறிந்து கொள்ளுங்கள். இவர் அரசியல் இலாபத்துக்காக விழுந்து கும்பிட்டது பௌத்தத்திடம். 1944 என்று எண்ணுகிறேன் சிங்கள தமிழ் இடதுசாரி முன்னணி ஒன்றை அமைக்க முயன்றார். இதே ஜேஆர் ஏன் இடதுசாரித்துவம் கொண்டு ஈழஒற்றுமையை நிலைநிறுத்த முயற்சிக்கவில்லை? வலதுசாரித்துவ ஐ.தே.கட்சியில் சேர்ந்து மேலாண்மை ஆதிக்கத்தை பிரதிபலித்தார். எங்கே ஒற்றுமை? தேசியம்? மனிதம்? கொள்கை? இடதுசாரித்துவம்?
இது ஒருபுறமிருக்க எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவிடம் வருவோம். இவர் ஒரு கிறீஸ்தவர், கேம்பிரிச்சில் பட்டப்படிப்பு முடித்தவர், முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாயான சிறீமாவோவை மணந்தவர். இந்த சிறீமாவோ திராவிட தெலுங்கிய உயர்குல நாயக்கவம்சத்தைச் சேர்ந்தவர். 1935ல் இந்த பண்டாரநாயக்காதான் தமிழர்கள் இலங்கையின் தனித்தேசிய இனம் என்றும், அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சுயநிர்ணய உரிமைப்படி சமஸ்டி முறையிலான ஆட்சியமைப்பு அவர்களுக்குத் தேவை என்றும் எழுதினார். இவர் முதலாளித்துவ, பிரபுத்துவக் கட்சியான ஐ.தே.கட்சியில் இருந்தபோது டி.எஸ் சேனநாயக்காவிடம் இருந்து அவரின் பரம்பரை வாரிசான டட்லி.சேனநாயக்காவுக்கு கட்சி போகப்போகிறது என்பதை அறிந்து காழ்ப்புணர்வில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். நீதி, நேர்மை நிலைபெறாது என்றுணர்ந்தவர் அரசியல் இலாபங்களுக்காக கிறீஸ்தவரான இவர் பௌத்தத்தின் காலடியில் விழுந்து பௌத்த அங்கியணிந்து துவேசச் சேற்றில் புரண்டு சுமார் 1956களில் 24 மணித்தியாலத்துக்குள் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்தார். இப்போ சொல்லுங்கள் பிரிவினைவாதிகள், துவேசிகள் நாங்களா? சிங்கள அரசில்வாதிகளா?
இந்தக் காலத்தில்தான் தமிழ் சிங்களம் எனும் இருமொழிகளும் அரசகரும மொழிகளாக இருந்தன. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக மாறியபோது சிங்களத்தில் சித்தியடைந்தவர்களுக்குத்தான் பதவி உயர்வு சம்பள உயர்வு என்றாகியது. இதை எதிர்த்து, மறுதலித்து கோட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அதைக் கோடீஸ்வரன் வழக்கு என்பார்கள். என் தந்தையான திருச்செல்வத்தின் பெயரிலேயே வழக்கு நடந்தேறியது. அநியாயத்துக்கு எதிராக எம்தமிழுக்காக பேராடியவர் என்தந்தை என்பது எனக்கு மட்டுமல்ல எம்தமிழுக்கும் பெருமையானது தான். இவ்வழக்கின் பதிவேடுகள் இன்றும் இலங்கையில் உள்ளது. இத்தனைக்கும் உயிருடன் இன்றைய வாழும் சாட்சியாக கனடாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பெருமைக்குரியது கூட. உரத்தை போட்டு விட்டு மரத்தை வளரவேண்டாம் என்றால் எப்படி? நாம் இயக்கம் அமைத்து போராடியபோது அதை எதிர்த்தவரும் அவரே. நாம் பார்த்துத்தான் வளர்கிறோம். நாம் இன்று செய்தவற்றை நாளை எம்மினம் பன்மடங்காகச் செய்யும். ஆகவே எமது செயற்பாடுகள் சரியாக இருந்தல் அவசியம். எமது பரம்பரைகள் அதைச் செய்யும்போது ஏற்கத்தயாராக இருப்பதும் அவசியமே.
புலிகள் பிரிவினை கோரினார்கள். தமிழர் விடுதலை கூட்டணியினர் பிரிவினை பாடினார்கள் என்று எம்தலையில் நாம் மண்ணையள்ளிப் போடுவது தவறானது. மங்கையற்கரசி அவர்கள் சிங்களவன் தோலில் செருப்புத் தைத்துப் போட்டு நடப்பேன் என்று பலாற்காரத்துக்கு வித்திட்டார் என்று பலரும் குறைப்பட்டனர். நானும் சிறுவனாக இருந்தபோது இவற்றைக் கேட்டிருக்கிறேன். இரத்தத்திலகமிட்டு வீரகாவியம் பாடிய காண்டங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் எமக்குத் தெரிந்தது இவ்வளவுதான். சுமார் 1955-58ல் கே.பி. ராஜரட்னா என்பவர் காலிமுகத்திடலில் மேடையில் கர்ச்சித்தார் தமிழர்களின் முதுகுத் தோலை உரிப்போம் என்று. இங்கே துவேசத்தையும் பிரிவினையையும் ஆரம்பித்து வைத்தது யார்? தமிழர்களா? சிங்கள அரசியல்வாதிகளா?
இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. பிரிவினையை விரும்பியது சிங்களவர்களா என்ற அடுத்த கேள்வி எழும்பலாம். ஆம் இல்லை என்று இரண்டு பதில் இருந்தாலும். பிரிவினைக்கும், போருக்கும், துவேசத்துக்கும் காரணகர்த்தாக்கள் சிங்கள அரசியல்வாதிகளே என்பதை யாரும் மறுக்க இயலாது. சுய அரசியல் இலாபங்களுக்காக கொள்கை மாறி, நேர்மை மீறி, மனிதத்தை மறுத்து காலத்துக்குக் காலம் கலவரங்களை உருவாக்கி தம்வாக்கு வங்கிகளை நிரப்பியவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. இதன்வழியில் தமிழர்கட்சிகளும் தொடர்ந்தன என்றாலும் சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவே. அன்று சிங்கள மக்களை ஏவி தமிழர்களைக் கொன்று குவித்து உடமைகளை பெண்மையைச் சூறையாடியவர்கள் இன்று தாமே படைநடத்தி எம்மக்களைக் கொன்று குவித்துவிட்டு நான் தான் கொன்றேன் என்று மார்புதட்டிக் கொண்டு எம்மக்களின் வாசல்களில் ஒற்றுமை கொண்டு வந்திருக்கிறார்களாம். நம்பச் சொல்கிறீர்களா? எப்படி நம்புவது? நம்புவதற்கான ஒருசாட்சி சொல்லுங்கள். நாம்கடந்து வந்த சரித்திரத்தில் எந்த ஒற்றுமைச் சுவடுகளையும் காணவில்லையே. எம்மக்கள் என்ன செய்யப் போகிறார்களோ பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?
ஜனாதிபதித் தேர்தல் முறை முழுமையாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. பிரதமர் ஆட்சிமுறையில் தமிழர்களின் வாக்குகளை நம்பி அரசியல் நடத்தவேண்டிய அவசியம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு இருக்கவில்லை. இதனால் அவர்கள் தமிழர்களைக் கொன்றொழிப்பதையே உள்நோக்காகக் கொண்டிருந்தார்கள். இன்று அப்படி அல்ல சிறுபான்மை இனத்தின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கிறது. ஆனால் ஜனாதிபதியின் அதிகாரவலு குறைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருந்து இருக்க இயலாது. தமிழரை நாசம் செய்ய எண்ணிய ஜே.ஆர். மறைமுகமாக தெரியாமல் செய்த நன்மையே இது. எல்லாம் நம்மைக்கே மக்காள்.
புலிகள் பிரிவினையாளர்கள் பிரபாகரன் தமிழீழம் கோரி ஆயுதம் ஏந்தினான் என்று எம்மை நாமே கடிந்து கொள்வது தவறானது. பிரபாகரன் என்பவன் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு, தயாரிப்பு. அவனுக்கு ஒரு அரசியல் தாக்கம் இருந்தது. பலாற்காரத்தினால் வெற்றிகளையும் அடக்கு முறையில் ஆதிக்கத்தையும் சிங்கள அரசு கொண்டு திரிந்தபோது சிவகுமாரன் போன்றவர்கள் அதே பலாற்காரத்தைதான் அரசின் மேல் திரும்பப் பாவித்தார்கள். பலாற்காரம் பலன் செய்தபோது அதையே தொடர்ந்தது எப்படித்தப்பாகும். நாம் புதிதாக எதையும் தூக்கவில்லை சிங்கள ஏகாதிபத்தியம் எதைச் சொல்லித்தந்ததோ அதையே தான் திருப்பிச் சொன்னோம். இதே பிரபாகரனை தெய்வம் என்றும் தேவன் என்றும் தலையில் தூக்கித் திரிந்தவர்கள் இன்று தூற்றுகிறார்கள். அன்று பிரபாகரனும் புலியும் செய்த பிழைகளை சுட்டிக்காட்ட வக்கில்லாதவர்களும் துதிபாடியவர்களும் பிரகாரன் இறந்ததன் பின் அவர் பிணத்தின் மேல் தப்பிப்பிழைப்பதற்காக ஏறி நின்று கூத்தாடுகிறார்கள். தூக்கித் திரிந்தவர்கள் எல்லாம் பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தால், உண்மை நிலையை உணர்த்தியிருந்தால் முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்திருந்தால் பிரபாகரனுக்கோ புலிகளுக்கோ எம்மக்களுக்கோ இன்நிலை வந்திருக்காது. ஈழத்தமிழர்களின் வரலாற்றுப்பாதையில் சரியோ தவறோ பிரபாகனும் புலிகளும் ஒருசரித்திரமே. சரித்திரங்கள் எமக்கு என்றும் ஒருபாடமே. இன்றும் தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள அரசு சரிவரத்தீர்க்காது போனால் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதை யாரும் தடுக்க இயலாது. பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படப்போபவர்களும் இருசாராருமே. 1972ல் செகுவேரா போட்ட துப்பாக்கிகளை பிரபாகரன் துரையப்பாவுக்கு எதிராகப் பாவித்தார். சிவகுமாரன் முடிக்காததை தம்பி முடித்தார். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் பிரதிபலிப்புக்களே. நீதி கிடைக்காதவரை துப்பாக்கிகள் கைமாறும், தூங்கும், பின் துடித்தெழும். நிரந்தரமாகத் துப்பாக்கிகள் தூங்கவேண்டுமானால் தமிழர்களுக்கான சரியான தமிழர்கள் ஏற்கக்கூடிய நீதியான ஒரு அரசியல் தீர்வே முடிவாகும்.
இனியாவது சரித்திரத்தை, வரலாறுகளைத் திரும்பிப்பாருங்கள். புலம்பெயர்ந்தவர்களே! புலன் பெயராது நாட்டிலுள்ள எம்மக்களின் விருப்பு வெறுப்புக்கு செவிசாய்த்து, பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடாது நேர்மையுடனும், மனச்சுத்தியுடனும் அங்குள்ள மக்களுடைய விருப்பு வெறுப்புகளை ஏற்று அவர்களின் நிம்மதியான அமைதியான வாழ்வைக் கருத்தில் கொண்டு அதற்கிசைவாக நடப்பதே எமது பணி.
எரிகுண்டு விழுந்து
குடியிருந்த கோவில்குடிசை
எரிந்தபோதும்
எரியாது இருந்தது
தாயின் இதயம்.
கண்ணுருகிக் கரைந்தது தேசம்
விறைப்பூசியின்றி
குண்டடிபட்ட பாலகனின்
கால்களட்ட
வீறிட்டழுதது ஐரோப்பியத் தெருக்கள்.
விறைத்துப் போன கண்கள் முன்
வல்லுறவின் பின்
மார்புதட்டி
தாயின் மார்பு தொட்டு
வோட்டுப்பால் கேட்கின்றன
சிங்கக் குட்டிகள்.
நச்சுப்பாலாய்
நனையாதே
நாக்கு
– நட்புடன் நோர்வே நக்கீரா