ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகை யில்:-
அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளது.
27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர்.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி ஆகிய பிரதேசங்களிலேயே இம்முறை முதற் தடவையாக தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள வீதிகளின் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை இம்முறை தேர்தல் முடிவுற்ற பிறகும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா கவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பொலிஸ் மா அதிபர், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினதும் வழிகாட்டலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை சில பிரதேசங்களில் அடையாள அட்டைகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் எக்காரணத் தைக் கொண்டும் அடையாள அட்டைகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களது அடையாள அட்டைகளை தாங்கள் பாதுகாத்து தங்களது வாக்குரி மைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் கட்சி பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.