2010 ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவு ள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களும் தமது பிரதான கட்சி அலுவலகத்தைத் தவிர ஏனைய பிரசார அலுவலகங்கள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்பதுடன் பிரசார கூட்டங்கள் நடத்துவதோ, சுவரொட்டிகள் ஒட்டுவதோ கட்டவுட்டுகள், பெனர்கள் போன்றவற்றை காட்சிக்கு வைப்பதோ தடை செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 26ஆம் திகதி தேர்தல் நடைபெறும் வரை வீடு, வீடாகச் சென்று பிரசாரங்களை செய்வதும் அச்சுறுத்தல் விடுப்பதும் சட்டவிரோதமானது என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரம் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகிறது. இப்பாதுகாப்பு வலயத்தினுள் எந்தக் கட்சி நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
குழப்பம் விளைவிக்க முற்படுவோர் கைது செய்யப்படுவார்கள்.
குழப்பம் விளைவிக்கும் வாக்குச் சாவடிகளின் வாக்களிப்புகள் ரத்துச் செய்யப்படுவதுடன் முடிவுகள் வெளியிடப்படும் பணி ஒருவார காலத்துக்கு பின் போடப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் நடப்பின் 011-2877629, 011-2877630, 011-2877631 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் தேர்தல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை தமது அனைத்து கட்சி அலுவலகங்களையும் சமாதான அலுவலகமாக செயற்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.