ஜனாதி பதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு:
* வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது மூன்று வேட்பாளருக்குத் தமது விருப்பத் தெரிவின் ஒழுங்கில் வாக்களிக்க முடியும்.
* ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிக்க விரும்பும் வாக்காளர் தமது வாக்குச் சீட்டில் தான் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கும் சின்னத்துக்கும் அருகில் உள்ள கூட்டில் ‘X’ அடையாளத்தையிடலாம். அல்லது ‘1’ என்ற அடையாளத்தையோ இடுவதன் மூலம் தமது வாக்கை அளிக்க முடியும்.
* ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்புத் தெரிவின் அடிப்படையில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில் அந்த விருப்பத் தெரிவின் ஒழுங்குப்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கு எதிரே உள்ள கூட்டில் ‘1’, ‘2’, ‘3’ என்ற இலக்கங்களை வரிசைப்படி இடவேண்டும்.
அந்த வாக்காளர் ‘1’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் (அந்த வாக்காளரின்) முதல் தெரிவாகவும், ‘2’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் இரண்டாவது தெரிவாகவும், ‘3’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வாக்காளர் மூன்றாவது தெரிவாகவும் கருதப்படுவர்.
இதைவிட, முதலாவது தெரிவை ‘1’ எனக் குறிப்பிடாது விட்டுவிட்டு, ‘2’ மற்றும் ‘3’ தெரிவுகளை மட்டும் வாக்குச் சீட்டில் குறிப்பிட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதேசமயம், ஒரு வாக்காளர் தமது முதலாவது மற்றும் இரண்டாவது தெரிவைக் குறிப்பிட்டுவிட்டு, மூன்றாவது தெரிவைக் குறிப்பிடாமல் விட முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் வாக்கு எண்ணிக்கையில் அந்த வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் வாக்கு செல்லுபடியற்றதாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
* வாக்குச் சீட்டில் வேட்பாளர் எவருக்கும் வாக்களியாது விட்டால்.
* முதலாம் தெரிவைக் குறிப்பிடாது இரண்டாம், மூன்றாம் தெரிவைக் குறிப்பிட்டிருந்தால், இவ்வாறு தேர்தல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.