2010

2010

வன்னியில் கைவிடப்பட்ட தங்களது உடமைகளை மீட்டு வருவதில் சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Wanni_IDP_Homeவன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது தமது உடமைகளை கைவிட்ட மக்கள் அவற்றை மீட்கும் விடயத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியின் மேற்குப் பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் போது தங்களது உடமைகளையும் முடிந்தவரை எடுத்துச் சென்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடமைகள் விசுவமடுவிலிருந்து உடையார்கட்டு, சுதந்திரபுரம், இரணைப்பாலை என பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போர் நடைபெற்ற மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பகுதிகளில் பொதுமக்களின் வாகனங்கள் உட்பட குறைந்தளவு பொருட்களே கொண்டு செல்லப்பட்டன . வன்னியில் மீள்குடியேற்றம் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களால் கைவிடப்பட்ட பொருட்களை மீட்டுவர முயன்று வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் படையினரின் பாதுகாப்பு அனுமதி தேவை. இதனை அரசாங்க அதிபர்களுக்கூடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

Wanni_IDP_Homeகிளிநொச்சி மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும் பொதுமக்கள் தங்களது உடமைகள் வைக்கபட்டுள்ள பகுதிகளில் சென்று பார்வையிட்ட போது வீட்டுக்கூரைகள் உட்பட பல பொருட்கள் காணாமல் போன நிலையில் வெறும் கையுடன் திரும்பி வந்தனர். ஒருசில பொருட்கள் மட்டும் அவர்களால் மீட்டு வரப்பட்டன. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் உடமைகளை மீட்டுவர அப்பகுதிகளுக்குச் செல்கின்ற போது அவர்களின் உடமைகளை எடுத்து வருவதற்கு அங்குள்ள படையினர் தடைவிதிப்பததாக மக்கள் கூறுகின்றனர்.

முல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் விவசாயிகளின் நீர்இறைக்கும் இயந்திரங்கள், மண்வெட்டி போன்ற தங்களால் கைவிடப்பட்ட விவசாய உபகரணங்களை எடுத்துச்செல்ல அங்கிருக்கும் படையினர் அனுமதி மறுப்பதாகவும், இரும்புப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் விவசாய உபகரணங்களை எடுத்து வரவே மிகச் சிரமப்பட்டு MoD எனப்படும் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெறப்பட்டு, குறித்த இடங்களுக்கு தமது பொருட்களைக் கொண்டு வர வாகனங்களையும் வாடகைக்கு அமர்த்தி செல்கின்ற போதும்  அங்குள்ள படையினர் தங்களின் பொருட்களை எடுத்துச் செல்ல இடம்கொடுப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் கொள்ளை ஐவர் கொண்ட ஆயுதக் கோஷ்டி கைது

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த கிரானைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கையடக்கத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக கிரான் கும்புறுமூலை கிண்ணையடி பகுதிகளில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த இந்தக்கோஷ்டி தாங்கள் கொள்ளையடித்த கையடக்கத்தொலைபேசிகளை விற்பனை செய்யும் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் கடந்த 10 ஆம் திகதி இவர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 18 தொடக்கம் 25 வயதுடையவர்கள். திருமணமானவர்கள். கிரான் பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் உறவினர்கள். மேற்படி பகுதிகளில் இவர்கள் கொள்ளைகளை மேற்கொண்டு வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து ரி.56 ரகதுப்பாக்கி ஒன்றும் 25 ரவைகளும் கையடக்கத்தொலைபேசிகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் காலமானார்

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான எஸ்.விஜயகுமாரன் (வயது 55) நேற்று சனிக்கிழமை முற்பகல் மாரடைப்பினால் காலமானார். இவரது பூதவுடல் அட்டன் நகரிலுள்ள மல்லியப்பூ வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் திங்கட்கிழமை கொட்டகலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்தார். நெஞ்சுவலி காரணமாக அவர் நேற்று காலை உறவினர்களால் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முற்பல் 10 மணியளவில் காலமானார்.

லிந்துலை நாகசேனைதோட்டத்தில் பிறந்த இவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்விகற்ற பின் பட்டதாரியானார். இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாக பணியாற்றினார்.1993 ஆம் ஆண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்காக தோள்கொடுத்தவர். கடந்த நான்கு வருடமாக செயலாளர் நாயகமாக பணியாற்றிய இவர் இதற்கு முன் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் இருந்தார். இவரது திடீர் மறைவு கட்சிக்கும் மலையக மக்களுக்கும் பெரும் இழப்பாகுமென மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஒருநாள் போட்டியில் இருந்தும் முரளிதரன் ஓய்வு

muralidharan.jpgஇலங்கை அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு பிரவேசித்த முரளிதரன் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் கிரிக்கெட் உலகில் தனது இடத்தை நிலை நாட்டியிருந்தார். முரளிதரனைப் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் இலங்கை அணிக்கு மட்டுமல்ல உலக அணிக்கும் கிடைக்கமாட்டார்.

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் அதாவது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

இவரது ஓய்வு அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் காலத்தின் கட்டாயம் அவர் ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவரது உடற்தகைமை, குடும்ப நோக்கம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் எனப் பல காரணங்கள் உண்டு. எது எப்படியோ முரளிதரன் ஓய்வு பெற்றாலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவரை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

முஸ்லிம் கைதிகள் விவகாரம்: மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச் சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.

50 வருடங்களாக வசித்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு காணிகளுக்கான உரிமம் இல்லை.

Douglas_Devanandaசங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி ஊரத்தி, சங்கானை மத்தி ஆகிய பிரதேசங்களில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளான மக்களுக்கு இன்னமும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி உதவுமாறும் குறிப்பிட்ட மக்கள் வடமாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“சங்கானை மத்தியில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வாழ்நது வருகின்றோம். எம்முடன் வாழ்ந்த 21 குடும்பங்களுக்கு 1979 இல் உள்ளுராட்சி சபையின் விசேட ஆணையாளராக அப்போதிருந்த இராசு தணிகாசலம் என்பவரால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எமக்கு காணி உரிமம் எவையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்குமாறு மாகாணசபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். ஆனாலும், தீர்வு எதுவும் இது வரை எட்டப்படவில்லை. எனவே சங்கானை மத்தி, அராலி ஊரத்தியிலுமுள்ள 65 சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்கி, அவற்றுக்கான உரிமங்களையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்” என இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் பனை விதை நடுகை துரிதம்.

Panai_Marangalயாழ். மாவட்டத்தில் ஐந்து இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 21 குழிகளில் பனை விதைகளை நடும் பயனாளிகளுக்கு உலக உணவுத்திட்டத்தின் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இத்திட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக உலக உணவத்திட்ட நிறுவனம் 100 மெற்றிக் தொன் உலருணவை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பனை வளத்தை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பனை விதை நடுகைத் திட்டத்திற்காக பல இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பனைசார் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக வெடி பொருட்கள் அகற்றல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்வதற்காக அப்பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக துரிதமாக அப்பகுதிகளிலுள்ள மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க ‘ஹலோட்ரஸ்ற்’ மற்றும், இராணுவ பொறியியல் பிரிவு என்பன வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும், விரையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதுமலையில் இடம்பெற்ற கொள்ளை பிடிபட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இளம் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. இக்கொள்ளை தொடர்பாக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.சுதுமலை வடக்கில் வசித்துவரும் மருத்துவர் ஒருவர் மானிப்பாய் மத்திய சந்தைப் பகுதியில் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது வீட்டிலிருந்து ஆறு இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகை மற்றும்,  20 ஆயிரம் ருபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தது. 

இவர் தமது மருத்துவ நிலையத்திற்கு வந்துவிட்டு மாலையில் வீடு சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த நிலையில் இப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமையை அவதானித்துள்ளார். பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் மருத்துவரின் வீட்டின் ஒரு பகுதியில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்திவரும் 25 வயதான இளம் பெண் மீது சந்தேகம் கொண்டனர்.

அவரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணைக் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். 300 ஆண்களும், 200பெண்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியாவில் வைத்து இவர்கள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.