2010

2010

வெலிக்கடைக்குள் பொன்சேகா கைதி; நாங்கள் இலங்கைத் தீவுக்குள் அரசியல் கைதிகள் – ரணில்

ranils.jpgஎவருடைய வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கிஸை, ஸ்ரீ ரம்ய விகாரையில் சரத் பொன்சேகாவின் விடுதலையின் நிமித்தம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற மத வழிபாடுகளின் இறுதியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “சரத் பொன்சேகா எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றபோதும் அவர் ஆலோசனைகளை மீறியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆலோசனைகளை மீறுவதென்பது சட்டத்தை மீறுவதாகாது. அது மட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவுக்கும் ஹைகோப் நிறுவனத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லையென நிறுவனங்கள் பதிவாளர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கிறார்.

சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நிராகரித்து படையினர் அனைவரையும் காப்பாற்ற என்னால் முடிந்திருந்தது என்றால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படாதது ஏன் என்பது எமது கேள்வியாக இருக்கிறது. சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி நிலை, அவரது ஓய்வூதியம் போன்றவற்றைப் பறித்து, அவரை சிறை வைத்ததன் மூலம் அரசாங்கம் படையினரைக் கணக்கில் எடுக்காமல் மதிக்குகாமலுமே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இராணுவ சட்டத்தின் கீழ் இரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு எனது கையெடுத்திட்டு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதேபோல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்தி கையெழுத்திடும் மக்கள் மனுவுக்கு நான் உட்பட பலரும் கையெழுத்திட்டோம். அப்படி என்றால் சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானவையே. உண்மையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி இந்த நாட்டின் சகல மக்களுமே அரசியல் கைதிகள் தான். சரத் பொன்சேகா வெலிக்கடையில் அரசியல் கைதியாக இருப்பதுடன், நாம் அனைவரும் இலங்கை எனும் தீவினுள் அரசியல் கைதிகளாக இருக்கிறோம்  என்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

sri.jpgசட்ட விரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

போதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி நாடெங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பணிப்பு

mahinda.jpgபோதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு விசேட நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய நேற்று பணிப்புரை விடுத்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் கள், பிரதேசங்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 425 பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டு மேற்படி விசேட வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போதே பொலிஸ் மா அதிபர் மேற்படி பணிப்பை விடுத்தார். கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த உயர் மட்ட மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான என். கே. இளங்ககோன், காமினி நவரட்ண, கே. பி. பி. பத்திரண, கொழும்பு பிராந் தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச். எம். டி. ஹேரத் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 35 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது. நாட்டிலுள்ள 39 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் மூலம் 425 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக இந்த விசேட திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. நாட்டில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் வெகு விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினது ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டங்களை தீட்டியுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு விசேட பொலிஸ் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை தரும் லேகியம் போன்ற போதைப் பொருளின் பாவனைகளே இலங்கையில் அதிகம் காணப்படுகின்றன.

போதைப் பொருள் பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களும் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் முற்றுகையிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை வெற்றியடைய குறுகிய காலத்தில் சிறந்த பெறுபேறுகளை காண பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.சுமார் ஒருவார காலத்தில் உயர் அதிகாரிகளுடன் இது போன்ற சந்திப்பை ஏற்படுத்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாதாந்தம் இந்த திட்ட நடைமுறை தொடர்பாக மீளாய்வுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜீ.எல். இன்று பிரித்தானியா பயணம்

g-l-peiris.jpgவெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.லண்டன் நகரில் சர்வதேச மூலோபாய கற்கை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்வில் அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வு நாளை 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைப்பின் செயலாளர் வில்லியம் ஹெக்கின் விசேட அழைப்பின் பேரில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்படி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவில் புதிய அரசு ஆட்சியமைத்ததன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

அங்கு தங்கியுள்ள காலங்களில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் உட்பட மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மாவுடனும் அவர் விசேட கலந்துரை யாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 இடங்களில் இன்று மின்வெட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 18 ஆம் திகதி 42 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்சா சபை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வாழைச்சேனை, கருவாக்கேணி, சுங்காங்கேணி, கிண்ணையடி, கும்புறுமூலை, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்பட்டிச்சேனை, கறடியனாறு, மரப்பாலம், ராஜபுரம், கித்துள், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பங் கேணி, ஐயங்கேணி, மிச்நகர், தளவாய், மீராகேணி, சதாம்குசைன் கிராமம், ஹிஸ்புல்லாஹ் கிராமம், வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, களுவண்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, வுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, பிள்ளையாரடி, ஊறணி ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

obamas.jpgஅடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா அதிக ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மும்பை, அமிர்தசரஸ், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், “அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்:- கனடாவில் கலந்துரையாடல்

Senthiveel_Si_Kaதீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்: ஒரு போராளியின் பார்வையில் என்ற தலைப்பில் தோழர் சி கா செந்திவேல் அவர்களின் உரையும் கலந்துரையாடலும் கனடா ஸ்காபொறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேடகம் – தமிழர் வகைதுறைவள நிலையம் இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிலும் இரண்டறக்கலந்தவர் தோழர் சி. கா. செந்திவேல். 1963ல் தனது இருபதாவது வயதிலேயே கொம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், 1965ம் ஆண்டு முதல் தன்னை கட்சியின் முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் 1989ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தேடகம் குழுவினர் அனைவரையும் அழைத்துள்ளனர்.

சி.கா.செந்தில்வேல் எழுதிய நூல்கள் :
1. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்
2. புதிய ஐனநாயகமும் போராட்ட மார்க்கமும்
3. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்.
4. கைலாசபதியும் சமூகப் பங்களிப்பும்.
5. மனிதரும் சமூக வாழ்வும்.

Senthiveel_Si_Kaகுறிப்பு: 45 வருட இடதுசாரி அரசியல் வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் கொண்ட ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவம் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானதாகிறது. அந்த வகையில் தோழர் சி. கா. செந்தில்வேல் அவர்களின் இந்நேர்காணல் ஜனவரி 6, 2008ல் தேசம்நெற் இணையத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. அதன் pdf இணைப்பு: Senthiveel Interview_Book

நிகழ்வு விபரம்:
Saturday, October 23rd 2010 @4:30P.M
Mid Scarborough Community Centre
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)

Contact:
thedakam@gmail.com
0014168407335

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு யூரேன் (U-turn)

TNAநல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நல்லிணிக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீ ஆனந்தசங்கரி ஆகியோரின் வழியைக் கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளது. வழமையாக காலம் கடந்து ஞானோதயம் பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தடவை குறித்த காலத்திற்குள் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சிபார்சுகள் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இல்லாத போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணமாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னதாக லண்டனில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த வீ ஆனந்தசங்கரி நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தோன்றிச் சாட்சியளிக்க ததேகூ தயங்கலாம் எனவும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். சில சமயம் நேரில்சாட்சியம் அளிக்காமல் எழுத்தில் தங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்பி விட்டு இருந்துவிடுவார்கள் எனவும் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சாட்சியங்களில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று சனிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள், தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இன்னல்கள், தமிழ் மக்களின் வரலாறு, அவர்களின் அபிலாசைகள் ஆகிய விடயங்கள் கூட்டமைப்பின் சாட்சியங்களில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ததேகூ நேரடியாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போதும் ஏன் அவர்களை விடுவிக்கும்படி ததேகூ கோரவில்லை போன்ற கேள்விகள் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்கப்படும். மேலும் புலிகளுக்கும் ததேகூ க்கும் இருந்த உறவு பற்றியும் பல சிக்கலான கேள்விகள் கேட்கப்படலாம்.

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பம்! பிரபா கணேசன்.

Praba_Ganesan_MPகொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோருகின்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு செட்டியார்தெரு தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது.  மேலும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடமோ மக்கள் பிரதிநிதிகளிடமோ சென்று முறைப்பாடு செய்ய அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தைரியமாக செயற்பட்டால் தான் இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் செட்டியார்தெரு வாத்தகரை கடத்திச் சென்று கப்பம் கோரியவர்களை குற்றப்புலனாய்வப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், இவ்வாறு கப்பம் கோருபவர்களை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முன்வரவேண்டும் எனவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் தமிழ் வர்த்தகர்களை கடத்திச் சென்று கப்பம் கோரும் சம்பவங்கள் தங்களது கடும் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.