வெலிக்கடைக்குள் பொன்சேகா கைதி; நாங்கள் இலங்கைத் தீவுக்குள் அரசியல் கைதிகள் – ரணில்

ranils.jpgஎவருடைய வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கிஸை, ஸ்ரீ ரம்ய விகாரையில் சரத் பொன்சேகாவின் விடுதலையின் நிமித்தம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற மத வழிபாடுகளின் இறுதியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “சரத் பொன்சேகா எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றபோதும் அவர் ஆலோசனைகளை மீறியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆலோசனைகளை மீறுவதென்பது சட்டத்தை மீறுவதாகாது. அது மட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவுக்கும் ஹைகோப் நிறுவனத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லையென நிறுவனங்கள் பதிவாளர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கிறார்.

சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நிராகரித்து படையினர் அனைவரையும் காப்பாற்ற என்னால் முடிந்திருந்தது என்றால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படாதது ஏன் என்பது எமது கேள்வியாக இருக்கிறது. சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி நிலை, அவரது ஓய்வூதியம் போன்றவற்றைப் பறித்து, அவரை சிறை வைத்ததன் மூலம் அரசாங்கம் படையினரைக் கணக்கில் எடுக்காமல் மதிக்குகாமலுமே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இராணுவ சட்டத்தின் கீழ் இரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு எனது கையெடுத்திட்டு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதேபோல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்தி கையெழுத்திடும் மக்கள் மனுவுக்கு நான் உட்பட பலரும் கையெழுத்திட்டோம். அப்படி என்றால் சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானவையே. உண்மையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி இந்த நாட்டின் சகல மக்களுமே அரசியல் கைதிகள் தான். சரத் பொன்சேகா வெலிக்கடையில் அரசியல் கைதியாக இருப்பதுடன், நாம் அனைவரும் இலங்கை எனும் தீவினுள் அரசியல் கைதிகளாக இருக்கிறோம்  என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran .raja
    chandran .raja

    மக்களை கைதியாகிக்கியவர்கள் கைதியாக்கபடுவது தானே! நீதியானது. ஐக்கியதேசிய கட்சியும் தமிழரசுக் கட்சித் தலைமைகளும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களைவதைவிட இனக்கலவரங்களை தோற்றிவிற்பதிலும் கணிசமான பங்காற்றியுள்ளது. எம்மைப் பொறுத்தவரை அதுவெல்லாம் மேற்குலக நிகழ்சியிரகளுக்கு உட்படே நடந்தேறியிருக்கிறது.
    ஐக்கியதேசிய கட்சிக்கோ தமிழரசுதலைமைகளுக்கோ இலங்கைமக்களை பற்றி கதைப்பதற்கும் நாட்டைமுன்னோற்றைத்தைப் பற்றி கதைப்பதற்கும் எந்த அருகதையும் இல்லை. சுருக்கமாக சொன்னால் நான்குக்கு மேற்பட்ட இனக்கலவரங்களையும் இலங்கையை துண்டாட வழிவகுத்தவர்கள் மேற்சொன்ன இரு பகுதியாரும். நான் இங்கு மகிந்தாராஜய பக்சாவுக்கு வக்காளத்து வாங்க வரவில்லை. இலங்கை வரலாற்றில் அவரின் பாத்திரம் முற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறது.

    Reply