2010

2010

தேயிலை தோட்டத்தில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி காயம்

lightning-01.jpgதேயிலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த இரு பெண் தொழிலாளிகள் மீது மின்னல் தாக்கியதால் மிக ஆபத்தான நிலையில் பன்வில மக்கானிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.30 அளவில் இடம் பெற்றது. 39 வயதுடைய தனரோஜா 32 வயதுடைய நிலந்தி என்ற இரு பெண் தொழிலாளிகளுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்கானவர்களாவர்.

சார்க் உச்சி மாநாட்டில் எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி உரை

saarc-logo.jpgபூட்டானின் தலைநகர் திம்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 26 ஆம் திகதி உரையாற்றுவார்.

24 ஆம் திகதி சார்க் உச்சி மாநாடு ஆரம்பமாகிறது. மூன்று நாள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையாற்றுவாரென தெரிய வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை உயர் மட்டக் குழுவில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ¤ம் கலந்து கொள்கிறார்.

“ரணில் விக்கிரமசிங்க தலைவராக இருக்கும்வரை அக்கட்சியுடன் பேசத் தயாரில்லை” – மனோகணேசன்:

mano.jpgஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே. முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார். சமீப காலமாக தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்படும் நபராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் மனோகணேசன். ஐ.தே.கட்சியுடன் இணைந்து அக்கட்சி முன்னெடுத்த போராட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களுக்காக குரல் கொடுத்தவர் இன்று….

சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் களமிறங்கி வெற்றி பெற்றார்கள். கிட்டத்தட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரைப் போலவே அரசியல் செயற்பாடுகளில் பங்கெடுத்துக் கொண்ட நீங்கள் தற்போது அதுவொரு இனவாதக் கட்சியெனக் கூறுகிறிர்களே!

அதுவொரு இனவாதக் கட்சியென எமக்கு நன்றாகத் தெரியும். அப்போதைய காலகட்டங்களில் அக்கட்சியுடன் இருந்து பல விடயங்களைச் செய்திருக்கிறோம். முள்ளை முள்ளால் எடுப்பது போல ஒவ்வொரு விடயத்தையும் அங்கிருந்து கொண்டே அதனை மாற்றியிருக்கிறோம்.

இன்று ஐ.தே.கவுக்கோ அதன் யானைச் சின்னத்திற்கோ வாக்களிக்கக் கூடிய நிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த மாகாண சபைத் தேர்தலில்கூட ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட எமது உறுப்பினர்கள் வெற்றிபெற்றிருக்கும் அதேசமயம் ஐ.தே.க வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பதைப் பார்த்தோம். எமது உறுதியான பலத்தினால்தான் வெற்றிபெற எம்மால் முடிந்தது.

இந்நிலைமை மாறுவதற்கான காரணமென்ன? உண்மையில் என்ன நடந்தது?

கொழும்பு மாவட்டத்தில் நாம் சக்திவாய்ந்த கட்சியாக மாறி வருவதை ஐ.தே.கவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அது எப்போதும் எம்மை அழித்து விடும் நோக்கிலேயே செயற்பட்டிருக்கிறது. ஐ.தே.கவின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க கட்சியின் பேரினவாதப் பிரிவின் தலைவராக செயற்படுகிறார். இவருக்கு தனிப்பட்ட இலட்சியம் இருக்கிறது.

ஐ.தே.கவின் தலைவர், உப தலைவர் அல்லது பிரதித்தலைவராக வரவேண்டும் என்ற அவாவில் இருக்கிறார். ஆனால் அந்தளவிற்கு அவருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. கோட்டே தொகுதியில் ஆரம்பத்தில் அவருக்கு இரண்டரை இலட்சம் வாக்குகளாக இருந்த ஆதரவு படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது அங்கிருந்து விரட்டப்பட்டு வடகொழும்பு தொகுதியில் தஞ்சமடைந்திருக்கிறார்.

அத்தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அம் மக்களின் வாக்குகள் இல்லாமல் கொழும்பு மாவட்டத்தில் தனக்கு இடம் இல்லை என்பது நன்றாக அவருக்குத் தெரியும்.  ஜனநாயக மக்கள் முன்னணி இருக்கும் வரையில் அது இயலாத காரியமென எண்ணிய அவர் ஜனநாயக மக்கள் முன்னணியின் முதுகெலும்பை உடைத்துவிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். தேசியப்பட்டியல் மூலமாக நான் பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பை தலைவர் ரணில் மூலமாக தடுத்து நிறுத்தியுள்ளார். இதுதான் உண்மை.

எனக்குப் பதிலாக தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்டிருப்பவர் மீது எனக்கு தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபமும் கிடையாது. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் துன்பங்களுக்குள்ளான போது அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து நீதியை நிலைநாட்டியவன் நான்.

இன்று ஐ.தே.க. தேசியப்பட்டியல் எனக்கூறி பின்கதவு வழியாக வந்தவர்கள் கடந்த காலங்களில் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவ்வாறான பொம்மைகளையே ரணில், ரவி கருணாநாயக்க போன்றோர் மக்களின் தலைவர்கள் எனக்கூறிக்கொண்டிருக்கின்றனர். நேர்மையும் துணிச்சல் மிக்கவர்களாக இருந்த எம்மை சதித்திட்டத்தின் மூலம் புறந்தள்ளியுள்ளனர்.

தேசியப்பட்டியல் உறுப்புரிமை என்பது ஐக்கிய தேசிய முன்னணியின் நான்கு கட்சிகளுக்கும் உரித்துடையது. தேர்தலில் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும் கூட ஒரு உடன்பாட்டுடனேயே போட்டியிட்டோம். ஒவ்வொரு ஸ்தாபக கட்சிக்கும் குறைந்தபட்ச உறுப்புரிமை இருக்க வேண்டும் என்பது அடிப்படை நியதியாகும். அதற்கு மேலதிகமாக கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

சவாலை எதிர்கொள்ளுமுகமாகவே நான் கண்டிக்குச் சென்றேன். கொழும்பில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதல்ல காரணம். கொழும்பில் போட்டியிட்டிருந்தால் ரணிலுக்கு அடுத்ததாக நான் வெற்றி பெற்றிருப்பேன். அத்துடன் மேலும் இரு தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பார்கள். மூவரில் இருவராக குறைத்துவிட்டு நான் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன்.

கண்டி மாவட்டத்தில் போட்டியிடக் காரணமென்ன? உங்களது தனிப்பட்ட முடிவாக இருந்ததா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி எடுத்த முடிவா?

எனது பிறப்பிடம் கண்டி மாவட்டம், அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க நானாக விரும்பியே கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன. தேசியப் பட்டியல் உறுப்புரிமையில் எமது கட்சிக்கென ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

20 ஆம் திகதி நள்ளிரவு வரையில் 5 பேர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும்,  இரு இடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கும் எமக்கும் தலா ஒவ்வொரு ஆசனங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் ரணிலுடன் உரையாடும் போதும் கூட அதனை உறுதிப்படுத்தினார்.

21 ஆம் திகதி காலை வேளையில் எமக்கும் ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை திடீரென எதேச்சதிகார முறையில் அகற்றி தமக்கு வேண்டியவர்களின் பெயர்கள் திணிக்கப்பட்டு ஐ.தே.க. தலைவரின் உத்தரவின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் நம்பிக்கைத் துரோகம். பச்சைத் துரோகம்.  இது தனிப்பட்ட மனோகணேசனுக்கோ, ஜனநாயக மக்கள் முன்னணிக்கோ செய்த துரோகத்தைவிட ஐ.தே.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ் மக்களுக்குச் செய்திருக்கும் பச்சைத் துரோகமாகும்.

ஐ.தே.க எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் பெற்றுக்கொடுக்கவில்லை என ரவி கருணாநாயக்க கூறியிருக்கிறாரே?

ஐ.தே.முன்னணி என்பது ஒரு கூட்டணி அரசியல் என்பதை முதலில் ரவி கருணாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும். தனியொரு கட்சியாக இருந்து ஆதிக்கம் செலுத்திய ஐ.தே.கட்சியின் அரசியல் வரலாறு முடிந்து விட்டது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சிகள் ஒரு கூட்டமைப்புடனேயே செயற்பட முடியும். ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிறந்த கட்டமைப்பின் காரணமாகவே ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. அவ்வாறானதொரு அரசியல் கலாசாரமே தற்போது நமது நாட்டில் காணப்படுகிறது. எந்த அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஆசனம் ஒதுக்கப்படுகிறது என்ப தெல்லாம் ரவி கருணாநாயக்கவுக்கு தெரியாது. ஐ.தே. முன்னணியில் அவர் இல்லை. அவருடன் பேசவேண்டிய அவசியம் எமக்கில்லை.

எமது கட்சிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கிறது. இது ஐ.தே.கவிற்கு கிடைத்த வாக்குகளாகும். இந்த வாக்குகளின் அடிப்படையில்தான் தேசியப்பட்டியல் தீர்மானிக்கப்படுகிறது.

எமது கட்சி பெற்ற வாக்குகளை விட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட இ.தொ.கா கூட பெறவில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மனோகணேசன் யார்? ஐ.தே.முன்னணிக்குள் நாம் வைத்திருந்த பாத்திரம் என்ன என்பது அந்த முட்டாளுக்குத் தெரியாது.

10 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவன் நான். கடந்த காலங்களில் ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறி ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டனர். சிலர் மீண்டும் ஐ.தே.கட்சியில் சேர்ந்துகொண்டனர். ஆனால் நாம் அப்படியெல்லாம் செய்யவில்லை. மு.காங்கிரஸ் உறுப்பினர்களில் பலர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். ரவி கருணாநாயக்கவின் கடந்தகால அரசியலை எடுத்துப் பார்த்தால் புரியும் அவர் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஐ.தே.கட்சிக்கு வந்தவர்.

ஆரம்பகாலத்தில் லலித் அத்துலத்முதலி, சிறிமணி அத்துலத்முதலி மற்றும் சந்திரிக்காவுடன் சென்று எல்லாம் அனுபவித்துவிட்டு வந்தவர்தான் அவர். அவரை விட அக்கட்சியின் மீது பற்று கொண்டிருந்த விசுவாசமிக்க ஒருவனாக நான் இருந்திருக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சியின் தலைவராக இருக்கும் வரையில் அக்கட்சியுடன் பேசுவதற்கு நான் தயாராக இல்லை. ஐந்து சதத்திற்கு அவரை இனி நம்பமாட்டோம். நாம் நடத்திய அரசியல் போராட்டங்கள் ஊர்வலங்கள், பிரசாரங்கள் அனைத்தையும் ஐ.தே.க நன்கு பயன்படுத்திக்கொண்டு இப்போது உதறி எறிந்து விட்டது.

கண்டி மாவட்டத்தில் நீங்கள் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்கிர்களா?

கண்டி மாவட்டத்தில் நான் தோல்வியடைந்ததாக கருதவில்லை. வெற்றியடைந்திருக்கிறேன். தமிழ் மக்கள்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள்.  மனோகணேசன் தோல்வியடையவில்லை.  நான் தோல்வியடையவும் மாட்டேன். இரு காரணங்களுக்காக கண்டியில் போட்டியிட்டேன். அங்கே 1994 இல் தமிழ்ப் பிரதிநிதியொருவர் கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. இறுதியாக நடைபெற்ற தேர்தலில் கொழும்பில் இலகுவாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன்.  தமிழ் மக்களுக்கு எங்கெல்லாம் துன்பம் துயரம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதனை தீர்ப்பவனே தலைவன். எனக்கு ஒரு கடமை இருக்கிறது. பதவி பட்டங்களை சலுகைகளை வரப்பிரசாதங்களைத் தேடிச்செல்லும் நபரல்ல நான். அதனை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் நிரூபித்திருக்கிறேன்.  தமிழ் மக்கள் எனக்கு முழுமையாக வாக்களித்திருப்பார்களானால் நான் வெற்றிபெற முடிந்திருக்கும். இன்று கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தாம் விட்ட தவறை இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.

அது மாத்திரமல்லாமல் அச்சுறுத்தல்களையும் மீறி வாக்களித்திருக்கலாமோ தவறு செய்து விட்டோமா என்ற குற்றவுணர்வு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அதனையே நான் எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் மனோகணேசன் இல்லாவிட்டாலும் கூட எவரும் வந்து போட்டியிடக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் ஆரம்பித்த இந்த இயக்கம் நிச்சயம் வெற்றிபெறும்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதாக பரவலாக பேசப்படுகிறதே!

ஐ.தே. முன்னணியிலிருந்து நான் விலகிவிட்டதன் காரணமாக ஆளுங்கட்சியில் இணையப்போவதாக ஒரு கருத்து மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதனை நான் அமோதிக்கவுமில்லை. நிராகரிக்கவுமில்லை. ஐ.தே.மு.வில் இருந்து விலகியதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

நாங்கள் பாராளுமன்றத்திலும் மேல் மாகாண சபையிலும், மத்திய மாகாண சபையிலும் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்திருக்கிறோம். அதேபோல ஆளுங்கட்சியில் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. அவை கூடி வருமானால் நிச்சயம் சாதகமாக பரிசீலிப்போம். கடந்த காலங்களில் நாங்கள் செயற்பட்டதற்கு நியாயங்கள் இருந்தன. தொடர்ந்தும் இறந்த காலத்தில் வாழ்வதற்கு நாம் தயாராக இல்லை.  முற்போக்கு வாதிகள் என்ற அடிப்படையில் கடந்தகால படிப்பினைகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டு இனி எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஐ.தே.க தலைவர் ரணில் செய்த துரோகத்தின் காரணமாக சலிப்படைந்து விடுபவனல்ல நான்

எதிர்காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ர்கள்?

கட்சியின் உயர்பீடம் இது குறித்து ஆராய்ந்து வருகிறது. இன்றைய அரசியல் யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.

அதுபோல தென்னிலங்கையிலும் மலையகத்திலும் இருக்கும் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இறுதியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இந்தத் தேர்தலின் பின்னர் இ.தொ.கா தலைவர் நண்பர் ஆறுமுகன் தொண்டமானுடன் தொடர்புகொண்டு பேசினேன். அரசியல் ரீதியில் நாமிருவரும் இரு துருவங்களாக இருப்பினும் எம்மிடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்பு இருக்கிறது. பலருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

எதிர்வரும் காலங்களில் ஒன்றாக இணைந்து செயற்படுவது பற்றி ஆராய்வோம் எனக்கூறியிருக்கிறார். இதில் ஏனைய கட்சிகளையும் உள்வாங்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

நன்றி-தினகரன்

பேட்டிகண்டவர்:- பி. வீரசிங்கம்

13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு – தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனும் பேச டக்ளஸ் முடிவு

epdp.jpgஅரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனு பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று இஸிபத்தான மாவத்தையிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு நடைமுறைச் சாத்தியமான இறுதித்தீர்வை நோக்கிச் செல்லும் ஆரம்பமாகவே இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருக்கலாம். எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக்கழித்து விடக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டோம். இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த முயற்சிப்போம். நாம் இழந்தவைகள் இனியும் போதும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்

கண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை

keheliya-rambukwella.jpgகண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. குறிப்பாக தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்ற காரணத்தினால் அமைச்சுப் பொறுப்புக்களை தற்போதைக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
 
நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எவருக்கும் அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் “மினி பட்ஜட்” ஜுலையில்

parliament.jpgபுதிய அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான “மினி பட்ஜட்” எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக மூன்று மாத காலத்திற்குரிய ஒரு கணக்கறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிப்பாரென்றும் தெரிவித்த அமைச்சர் சில்வா, ஜுலை மாதத்தில் மினி பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்தே 2011 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படு மென்று கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கணக்கு அறிக்கையின் பின்னர், அரசாங்கம் இதுவரை செய்த செலவுகள், வரவுகள் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அடித்தளம் இடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் நிமல், எதிர்க்கட்சி குரோத அரசியலையிட்டு நாகரிக அரசியலுக்குப் பிரவேசித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.

அமைச்சரவையில் புதுமுகங்கள்

wimal-weerawansa.gifபுதிய அமைச்சரவையில் புதிய முகங்களாக பசில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

நேற்றுப் பதவியேற்ற அமைச்சரவையில் முன்னைய அரசாங்கத்தில் வகித்த பொறுப்புகள் மாற்றப்பட்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் பிரதி அமைச்சர்களாகப் பின்வரும் புது முகங்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிருபமா ராஜபக்ஷ, லலித் திஸாநாயக்க, சரண குணவர்தன, விஜிதமுனி சொய்ஸா, வீரகுமார திஸாநாயக்க.

அடுத்த சில மாதங்களுக்குள் அரசியலமைப்பில் மாற்றம்

parliament.jpgநாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரச சேவையை செயல்திறன் மிக்கதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் ஆணையாளர்கள் விளைதிறனுடன் பணியாற்றுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்படுமென அவர் கூறினார். கிராமத்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதியினை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இப்போது முழுப் பிரதேசத்திற்குமாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அந்த நிலையைத் தோற்றுவித்த விருப்பு வாக்கு முறைமை இல்லாமற் செய்யப்படுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நிறைவுற்றதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலாவது செய்தியாளர் மாநாட்டை நேற்று (23) கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடத்தியது. இதில் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, பொருளாளர் டலஸ் அழகப்பெரும உப தலைவர்கள் நிமல் சிறிபால டி சில்வா டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டு புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கினர்.

“நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் யாப்பு மறுசீரமைக்கப்படும். எந்த நிறுவனங்களினதும் தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுமென்றும், 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்து வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக் கப்படுமென்றும் அவர்கள் கூறினர்.

ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவையில் இடம்பெறாதமை குறித்து ஆச்சரியம்

arumugam.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஆறுமுகம் தொண்டமானுக்கு முக்கியமான அமைச்சுப் பதவி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்ற அமைச்சரவை பட்டியலில் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் ஆறுமுகம் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.அவரின் கட்சியைச் சேர்ந்த முத்துசிவலிங்கத்துக்கு முக்கிய பொறுப்பான பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லையா? என்று கேட்கப்பட்டபோது அவருக்கு முக்கியமான அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அவர் பதவியேற்பார் என்றும் அரச உயர்மட்டத்துடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் ஆறுமுகம் தொண்டமானுக்குக் கால்நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டதாகவும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சில வட்டாரங்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக இ.தொ.கா.வட்டாரங்களிடம் கேட்டபோது, முக்கிய அமைச்சுப்பதவி ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பெரும்பாலும் அடுத்த இரு தினங்களில் ஆறுமுகம் தொண்டமான் முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன

தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ

ranil-mano.bmp  தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ கணேசனின் கட்சி இன்று தீர்மானம் தனித்து செயற்படுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா? என்பது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவும் மத்திய குழுவும் இன்று சனிக்கிழமை கூடித் தீர்மானம் எடுக்கவுள்ளது.

“எமது இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக நாளை (இன்று) பிற்பகல் நாங்கள் சந்திக்கவுள்ளோம் ” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து தான் வெளியேறுவதாக ஜனநாயக மக்கள் முன்னணி வியாழக்கிழமை கூறியிருந்தது. ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உறுதியளித்ததன் பிரகாரம் தேசியப் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் வழங்காததால் ஐக்கிய தேசிய முன்னணியுடனான உறவை ஜனநாயக மக்கள் முன்னணி முறித்துக்கொண்டது