ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவையில் இடம்பெறாதமை குறித்து ஆச்சரியம்

arumugam.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஆறுமுகம் தொண்டமானுக்கு முக்கியமான அமைச்சுப் பதவி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்ற அமைச்சரவை பட்டியலில் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் ஆறுமுகம் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.அவரின் கட்சியைச் சேர்ந்த முத்துசிவலிங்கத்துக்கு முக்கிய பொறுப்பான பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லையா? என்று கேட்கப்பட்டபோது அவருக்கு முக்கியமான அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அவர் பதவியேற்பார் என்றும் அரச உயர்மட்டத்துடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் ஆறுமுகம் தொண்டமானுக்குக் கால்நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டதாகவும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சில வட்டாரங்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக இ.தொ.கா.வட்டாரங்களிடம் கேட்டபோது, முக்கிய அமைச்சுப்பதவி ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பெரும்பாலும் அடுத்த இரு தினங்களில் ஆறுமுகம் தொண்டமான் முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *