யூன் 9 மற்றும் யூன் 11 – 15 வரை நோர்வேயில் இரு கருத்தரங்குகள் இடம்பெற்றது. பேராசிரியர் என் சண்முகரட்னம் இவ்விரு கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர் சண்முகரட்ணம் நோர்வேஜிய வாழ்வியல் விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் (University of Life Sciences) சர்வதேசச் சூழல் மற்றும் அபிவிருத்தி கற்கைகள் (International Environment & Development Studies) ஆய்வுத்துறையின் தலைவர் (Head of Research). இவர் நோர்வேயில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பற்றியும் அதுதொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் தொடர்பாகவும் தொலைபேசியூடாக வழங்கிய நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.
தேசம்நெற்: யூன் 9 மற்றும் யூன் 11 முதல் 15 வரையான கருத்தரங்குகள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடவும்.
பேராசிரியர் சண்: நீங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு நிகழ்வுகளைப் பற்றி கேட்கின்றீர்கள். யூன் 9ல் போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும் (Post War Relief and Development) என்ற அடிப்படையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை Norwegian Centre for Peacebuilding (NOREF) என்ற அமைப்பு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நோர்வேயில் உள்ள வடக்கு கிழக்கின் மனிதத்துவ மற்றும் அபிவிருத்தியில் அக்கறையுடைய தமிழ் அமைப்புகளையும் தமிழ் ஆர்வலர்களையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களும் கலந்து கொண்டனர். எல்ரிரிஈக்கு ஆதரவான கருத்துடையவர்களும் அதற்கு முற்றிலும் எதிரான கருத்து உடையவர்களும் கலந்துகொண்டனர். இவற்றிலிருந்து மாறுப்பட்ட கருத்துடையவர்களும் அங்கு இருந்தனர். ஆயினும் கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது. இதில் தமிழர்கள் 25 பேரும் முஸ்லீம் ஒருவரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய மற்றும் மனிதாபிமான மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இக்கலந்துரையாடலின் மையப்புள்ளியாக அமைந்தது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்பதும் ஆராயப்பட்டது. இக்கருத்தரங்கு மையப்புள்ளியில் இருந்து விலகாமல் செல்வதில் வெற்றியீட்டியதுடன் இதில் கலந்துகொண்ட பலரும் ஆரோக்கியமான பங்களிப்பையும் செய்தனர் என நான் நினைக்கின்றேன்.
யூன் 11 முதல் 15 வரை இடம்பெற்ற மாநாடு ‘சமாதானத்தில் நோர்வே’ – ‘Norway in Peace’ என்ற தலைப்பில் இடம்பெற்றது. விஞ்ஞானியாகப் பணிபுரிந்து மனித உரிமைகளை முன்னெடுத்த நான்சென் என்பவரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட Nansen Peace Centre – நான்சென் சமாதான மையம் என்ற அமைப்பினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 1938 ல் நான்சென் கல்வியியல் நிறுவனமாக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இந்த மாநாட்டில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நாடுகளின் தற்போதைய நிலை பற்றியும் அந்நாடுகளில் உள்ள முரண்பாடுகளின் எதிர்காலம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகள் தொடர்பாகவும் உங்களின் மதிப்பீடு என்ன?
பேராசிரியர் சண்: இரு நிகழ்வுகளும் வேறு வேறு தளங்களில் நடைபெற்றது. யூன் 9 நிகழ்வு குறிப்பாக இலங்கையின் போருக்குப் பின்னான மனிதாபிமான உதவி வாழ்வியலைப் பலப்படுத்துவது மற்றும் அபிவிருத்தி – இவற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாத்திரம் தொடர்பானது. இது இலங்கையின் வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
மற்றைய நிகழ்வு சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வேயின் சர்வதேசப் பங்களிப்பைப் பற்றியது. இது சர்வதேச ரீதியான நிகழ்வு. இலங்கையில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலும் தற்போது இலங்கை மீது சர்வதேசப் பார்வை திரும்பியுள்ள நிலையில் இலங்கை விவகாரம் அதில் ஒரு அம்சமாக அமைந்தது.
இரு நிகழ்வுகளுக்கும் நான் அழைக்கப்பட்டு இருந்தேன். முன்னைய நிகழ்வின் ஒரு பிரிவுக்கு நான் தலைவராகவும் பயிற்சிப் பட்டறையின் ஒரு பிரிவை முன்னெடுப்பதற்கும் அழைக்கப்பட்டு இருந்தேன்.
பின்னைய நிகழ்வில் பேச்சாளராக அழைக்கப்பட்டு இருந்தேன். ‘இலங்கையின் 5வது சமாதானச் செயற்பாடுகளுக்கு ஒரு மீள்விஜயமும் மத்தியஸ்தராக நோர்வேயின் பாத்திரமும்’ – ‘Revisiting Sri Lanka’s Fifth Peace Process and Norway’s Role as Mediator/Facilitator’, என்ற தலைப்பில் எனது உரை அமைந்தது. எனது உரைக்கு முன்னதாக சமாதான ஆய்வு நிறுவனம் Peace Research Institute Oslo (PRIO) இன் இயக்குனர் உரையாற்றி இருந்தார். அவர் கடந்த கால சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் சமாதனச் செயன்முறை வடிவம் Norway Model ஒரு பிரச்சினையானது என்ற கேள்வியை எழுப்பிச் சென்றார்.
அடுத்து உரையாற்றிய நான் நோர்வேயின் சமாதான நடவடிக்கைகளின் தோல்வியின் விளைவாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் எல்ரிரிஈ இன் தோல்வி பற்றியும் குறிப்பாக தற்போது சிலர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு “இலங்கையின் பயங்கரவாத அழிப்பு வடிவம்” ஒன்றை Sri lanka Model யை உருவாக்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். எனது உரையின் சாரம்சத்தை அருகில் உள்ள இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம்.
இக்கருத்தரங்கிற்கு நோர்வேயின் சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் காணப்பட்ட அறிவியல் விவாதம் என்னை வியப்படைய வைத்தது. இதில் பல பெண்களும் இளையவர்களும் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்தவர்கள் உலகின் பல்வேறு பாகங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகள் பற்றி மிகவும் அறிந்து கொண்டவர்களாக இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சமூக விஞ்ஞானத்துறையில் கற்கின்ற மூன்று மாணவர்களும் மருத்துவப் பிரிவில் கற்கின்ற ஒரு மாணவியுமாக நான்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடனான உரையாடல் மாறுபட்டதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.
தேசம்நெற்: இந்நிகழ்வுகளின் பின்னணியில் எல்ரிரிஈ அல்லது அதன் முன்னணி அமைப்புகளின் தொடர்புகள் இருப்பதாக சில குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பேராசிரியர் சண்: இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இவை சில தகவலறியாத கற்பனாவாதிகளின் கண்டுபிடிப்புகளே. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இவ்விரு நிகழ்வுகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. ஓன்று Norwegian Centre for Peacebuilding (NOREF) – நோரெப் இனால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. மற்றையது நான்சென் சமாதான மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டிலும் நான் உரையாற்றியது தான் குற்றம்சாட்டுபவர்களுக்கு இரண்டு நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக ஒன்றாகத் தெரியக் காரணம். அதைவிட அவர்களுக்கு எதுவும் தெரியாது.
நான்சென் சமாதான மையம் என்னை அழைத்ததற்குக் காரணம் அவர்கள் இலங்கை மற்றும் நாடுகள் தொடர்பாக எனது கல்வியியல் செயற்பாடுகள் பற்றி அறிந்திருந்தனர். நோர்வே, ஐரொப்பா, ஆசியா, ஆபிரிக்கா என உலகின் பல பாகங்களிலும் முரண்பாடுகளும் அபிவிருத்தியும் பற்றிப் பொதுவாகவும் சுடான், இலங்கை பற்றிக் குறிப்பாகவும் பல கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் நான் பேசியுள்ளேன். நான் இரு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன் என்பதற்காகவே சிலர் சம்பந்தமில்லாத இரு நிகழ்வுகளை ஒன்றாகப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.
‘போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலுக்கு நோரெப் பல்வேறு அரசியல் பின்னணியை உடையவர்களையும் அழைத்து இருந்தது. அந்த நிகழ்வில் எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகளும் எல்ரிரிஈ உடன் முரண்பட்ட கருத்துடைய அமைப்பினர் மற்றும் என் போன்ற தனிநபர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் இலங்கையில் செயற்படுகின்ற நோர்வேஜிய என்ஜிஓக்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர். நோர்வேஜிய வெளிவிவகார அமைச்சில் இருந்தும் சிலர் பார்வையாளராகக் கலந்துகொண்டனர்.
மொத்தத்தில் இச்சந்திப்பு ஆரோக்கியமானதாகவே அமைந்தது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் விசேட பிரிதிநிதியாகக் கலந்துகொண்ட எரிக் சோல்ஹெய்ம் போருக்குப் பின்னான வடக்கு கிழக்கின் மீள்கட்டுமானத்திற்கு நோர்வே உதவும் என்றும் அதேசமயம் மனித உரிமைகள் விடயத்தில் ஐ நா வின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் சோல்ஹெய்ம் தனது உரையின் முடிவில் வெளியேறிவிட்டார்.
‘சமாதானத்தில் நோர்வே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாடு உலகின் பல்வேறு பாகங்களிலும் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பற்றிய மீளாய்வாகவும் எதிர்காலத்தில் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாகவும் அமைந்தது. இதில் எல்ரிரிஈ இன் அல்லது அதன் முன்னணி அமைப்புகள் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதாக நான் அறியவில்லை. இங்கு அப்கானிஸ்தான், சறிஜேவோ, சேர்பியா மற்றும் முரண்பாடுள்ள பிரதேசங்களின் சூழ்நிலை, சமாதானத்தை ஏற்படுத்தும் அனுபவங்கள், நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கை என்ற விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. யூன் 12ல் நான் மாநாடு முடிவடைவதற்கு முன்னரேயே வேறு நிகழ்வு காரணமாக வெளியேற இருந்ததால் அதன் பின்னர் இடம்பெற்ற விடயங்களை அறிந்திருக்கவில்லை.
தேசம்நெற்: யூன் 9 நிகழ்வுக்கு உங்களை அழைத்திருந்தது யார்? உங்களை நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் கந்தையா பஞ்சகுலசிங்கம் அழைத்ததாக தமிழரங்கம் இணையத்தில் தீவான் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதே கட்டுரையில் வஇச ஜெயபாலன், இசையமைப்பாளர் ரவிக்குமார், சுவடுகள் தம்பா, இளவாலை விஜேயேந்திரன் போன்ற உங்களுடைய நண்பர்கள் பற்றியும் அவர்கள் எல்ரிரிஈ க்கு விலைபோய்விட்டதாகவும் கட்டுரையாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
பேராசிரியர் சண்: தீவான் என்ற பெயரில் கட்டுரையை எழுதியவர் மிக மோசமான பொய்யான விடயங்களை எழுதி உள்ளார். நோர்வே ஈழத் தமிழர் பேரவையோ அல்லது பஞ்சகுலசிங்கம் கந்தையாவோ இந்நிகழ்வுக்கான அழைப்பிதழில் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நாங்கள் நோரெப் இனாலேயே அழைக்கப்பட்டு இருந்தோம். அந்த அமைப்பின் பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வாறான நிகழ்வுகளையும் சமாதானத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளையும் நோரெப் ஒழுங்கு செய்த வருகின்றது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்கர் ஒருவரினாலேயே தலைமை தாங்கப்படுகின்றது.
எழுந்தமானமான குற்றச்சாட்டை வைத்துள்ள தீவான் எவ்வித ஆதாரங்களையும் வைக்கவில்லை. வைக்கவும் முடியாது. ஏனெனில் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அதில் சம்பந்தப்பட்டவருடன் தொடர்பு கொள்ளாமல் இதனை இணையம் வெளியிட்டது அதன் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயம். தீவானுக்கோ இதனை வெளியிட்ட இணையத்திற்கோ அடிப்படை விதியான தகவல்களில் இருந்து உண்மையைத் தேடிக்கண்டு பிடிக்கும் உணர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதுவே அடிப்படையற்ற ஊடகவியலுக்கு பொதுவான உதாரணமாக உள்ளது. இது அம்பலப்படுத்தப்படுவதுடன் கண்டிக்கப்பட வேண்டும்.
தீவான் யூன் 9 கருத்தரங்கை நோரெப் ஏற்பாடு செய்வதற்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவை நோரெப் க்கு நிதி வழங்கியதாக மிகமோசமான ஆதாரமற்ற தகவலை வெளியிட்டுள்ளார். மிகவும் அறியப்பட்ட அமைப்புக்கு எதிராக மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு இது. வஇச ஜெயபாலன், ரவிக்குமார், இளவாலை விஜேயேந்திரன் ஆகியோர் யூன் 9 நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் – சமாதானத்தில் நோர்வே – மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை. தம்பா யூன் 9 கருத்தரங்கில் மட்டும் கலந்துகொண்டார்.
தேசம்நெற்: எல்ரிரிஈ அல்லது அதன் முன்னணி அமைப்புகள் இவற்றின் பின்னணியில் இல்லாத நிலையில் இந்த நிகழ்வுகள் அல்லது குறிப்பாக யூன் 9ல் இடம்பெற்ற நிகழ்வு நீங்கள் எல்ரிரிஈ உடன் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் நீங்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் என அறியப்படும் நெடியவனுடன் செயற்படுவதாகவும் வந்துள்ள குற்றச்சாட்டுக்கள்….. ?
பேராசிரியர் சண்: இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமான விசமத்தனமான குற்றச்சாட்டுக்கள். எல்ரிரிஈ இன் சர்வதேச உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் வேண்டப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவதாக எவ்வித ஆதரமும் இன்றிக் குற்றம்சாட்டுவது உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும். ஆதாரத்தை வைக்க வேண்டிய பொறுப்பு குற்றச்சாட்டை வைப்பவருக்கே உண்டு.
நான் நீண்டகாலமாக எல்ரிரிஈ மீது விமர்சனம் கொண்டவன். ஏல்ரிரிஈ இனுடைய இராணுவவாதத்தையும் குழுவாதத்தையும் விமர்சித்துள்ளேன். எல்ரிரிஈ முற்போக்கு அரசியலை முன்நிறுத்தவில்லை. அதன் விளைவுகள் மிக அழிவுகரமானது. அதனை இப்போது உலகம் கண்டுள்ளது. அதனுடைய குறும் தேசியவாதம் காரணமாக அதனால் சர்வதேச ரீதியாக முற்போக்கு சக்திகளையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சக்திகளையும் வென்றெடுக்கும் ஆற்றல் அற்றதாக இருந்தது.
மேலும் எல்ரிரிஈ தமிழீழம் என்று அமைக்கும் விடயத்திற்கும் நான் ஆதரவாளனல்ல. ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன். இதனை நான் மிக அண்மையாக கடந்த மாதம் ரான்ஸ்கறன்ட் இணையத்திலும் எழுதி இருந்தேன். தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கேள்வியில் நான் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளேன் என்பது எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அறிவார்கள்.
தேசம்நெற்: தமிழ்நெற் இணையத்திற்கும் உங்களுக்குமான உறவு என்ன?
பேராசிரியர் சண்: தமிழ்நெற்க்கும் எனக்கும் எவ்வித உறவும் கிடையாது. நான் தமிழ்நெற்க்கு பேட்டி கொடுத்ததாக தமிழரங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நான் அவ்வாறு எந்தப் பேட்டியையும் தமிழ்நெற் க்கு வழங்கவும் இல்லை, அவர்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. இது மீண்டும் நிராகரிப்பை அடிப்படையாகக்கொண்டு மற்றுமொரு பொய்மையும் அல்லது அழமான வன்மத்துடன் வேண்டுமென்றோ அல்லது இரண்டுமாக சேர்ந்து எழுதப்பட்டு உள்ளது.
தேசம்நெற்: அவ்வாறு எனில் நீங்கள் தமிழ்நெற் இல் கருத்து வெளியிட்டதாக பி இரயாகரன் தமிழரங்கத்தில் மூன்று அல்லது நான்கு கட்டுரைகளே எழுதி உள்ளார்?
பேராசிரியர் சண்: இரயாகரனுடைய அறியாமைக்கு நான் பதிலளிப்பது சற்றுக் கடினம். ‘சமாதானத்தில் நோர்வே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் முன்னரே குறிப்பிட்டது போல உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தேன். அதற்காக நான் தயாரித்த உரையின் ஒளித்திரைக் குறிப்புக்கள் (powerpoint presentation) மாநாட்டு குழுவினரால் வெளியிடப்பட்டும் உள்ளது. அதனை வைத்துக் கொண்டு தமிழ்நெற் ஒரு கட்டுரையை எழுதி யூன் 17ல் வெளியிட்டு இருந்தது. தமிழ்நெற் எனது ஒளித்திரைக் குறிப்புக்கள் இல் இருந்து சில பகுதிகளைத் தெரிவு செய்து கட்டுரை எழுதியுள்ளது. எனது ஒளித்திரைக் குறிப்புக்களைப் பார்ப்பவர்கள், நான் எல்ரிரிஈ மீதும் விமர்சனம் கொண்டுள்ளதை காணலாம். அதே கட்டுரையில் தமிழ்நெற் ‘Tamil Circles’ – ‘தமிழ் வட்டங்கள்’ இனுடைய கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது.
தமிழ்நெற் கட்டுரையின் ஒரு பந்தியை மொழிபெயர்த்த இரயாகரன் ‘‘ ….. சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். ….. ’’ என்று நான் கூட்டிணைக்கும் ‘தமிழ் வட்டங்கள்’ கூறுவதாகக் கூறி என் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, தனிநபர் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
இரயாகரன் தனது கட்டுரையில் என் தரப்பில் இருந்து வந்ததாகக் கூறும் கருத்துக்கள் போன்று நான் ஓரிடத்திலும் எழுதவோ பேசவோ இல்லை. நான் கூறியதாக இரயாகரனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நெற்றில் ‘தமிழ் வட்டாரங்கள்’ (Tamil Circles – இது இரயாகரன் நடத்தும் இணையத்தைக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.) குறிப்பிட்டதாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தமிழ் வட்டங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இரயாகரன் என்னைத் தாக்கி உள்ளார். எனக்கு அந்த தமிழ் வட்டாரங்கள் யார் என்ன என்பது தெரியாது.
இரயாகரன் தமிழ்நெற் இல் இருந்த கட்டுரையை சரியாகப் விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டார் (மொழிப் பிரச்சினையாகவும் இருக்கலாம்?) அல்லது வேண்டுமென்றே அடிப்படையற்று, தனது வாசகர்களைத் திசை திருப்புவதற்காக நான் ஒருபோதும் சொல்லாத எழுதாத கருத்துக்களை, எனது கருத்துக்களாக்க முயன்றிருக்கிறார்.
இராயாகரன் திறந்த மனதுடன் தமிழ்நெற் இல் உள்ள கட்டுரையை மீண்டும் ஒரு தடவை கவனமாக வாசிப்பாரேயானால் அவரால் அதனை விளங்கிக்கொள்ள முடியும். கருத்துக்களின் மூலத்தையும் விளங்கிக்கொள்வார். தமிழ்நெற் கட்டுரையையும் எனது ஒளித்திரைக் குறிப்புக்களையும் பார்ப்பவர்கள் (ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள்) தமிழ்நெற் கூறும் தமிழ் வட்டங்களின் கருத்துக்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
இராயாகரனுடைய சிறுபிள்ளைத்தனமான எழுத்துக்களுக்கும் மூன்றாம்தர விமர்சனங்களுக்கும் பதிலளிப்பது அர்தமற்றது. தகவலையும் தகவல் மூலத்தின் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டிய குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாது செயற்படுபவர்களை என்னவென்பது.
தமிழ்நெற், தமிழரங்கம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள் ஏற்படுத்திய குழப்பமும் சர்ச்சையும் பற்றி என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக்களையும் பதில்களையும் நீங்கள் பதிவு செய்கின்றீர்கள். அதனை நான் மதிக்கின்றேன். ஆனால் தீவானோ அல்லது இராயாகரனோ என்னையோ அல்லது அர்களுடைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மற்றவர்களையோ தொடர்புகொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை. இதிலிருந்து அவர்களுடைய நோக்கம் சேறடிப்பதே என்பது தெரிகின்றது. அவர்கள் இந்த வகையான ஊடகத்துறையை வைத்துக் கொண்டு வெகுதூரம் செல்ல முடியாது. தமிழ் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதற்கு இது எவ்வகையிலும் பயன்தராது.
தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்த நோர்வே அரசின் நோக்கம் அல்லது மறைமுக நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
போராசிரியர் சண்: நான் முன்னமே குறிப்பிட்டது போல் இரு நிகழ்வுகளும் வோர்வேஜிய அரசால் ஏற்பாடு செய்யப்படவில்லை. இது இரு வேறு சட்ட ரீதியாகவும் அதற்கு வழங்கப்பட்ட ஆணைப்படியும் வேறுபட்ட அரசசார்பற்ற அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
நோர்வேஜிய அரசாங்கத்துக்கு மறைமுகமான நிகழ்ச்சிநிரல் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, ஓவ்வொரு அரசாங்கமும் தனக்கான வெளிப்படையான நிகழ்ச்சி நிரலையும் வெளித் தெரியாத நிகழ்ச்சிநிரலையும் கொண்டிருக்கும். எந்த ஒரு அரசாங்கத்தினதும் அரசியலை விமர்சன ரிதியாகப் பார்க்கின்ற சிந்தனை ஒருவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
என்னால் சொல்லக் கூடியது, நான் விரிந்த ஜனநாயகத் தளத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் கேள்விக்கு பேச்சுவார்த்தை, விவாதம் ஊடாக எவ்வாறு தீர்வுகாணலாம் என்பதிலேயே ஆர்வமாக உள்ளேன். மேலும் தாயகத்தில் சமூக, பொருளாதார பாதுகாப்பு, மக்களுடைய சுதந்திரம் – ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் (தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் மற்றும் ஏனையவர்கள்) தொடர்பாகவே எனது ஆர்வம் உள்ளது. இந்த வகையில் எங்களுடைய பணி ஐரோப்பாவில் உள்ள சம்பந்தப்பட்ட அரசுடன் அரசு சார்மற்ற முகவர்களுடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடவது.
தேசம்நெற்: இறுதியாக இன்றைய இலங்கை நிலைமைகள் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
பேராசிரியர் சண்: இலங்கையில் இன்னமும் போருக்குப் பின்னான சூழலையே (post war situation) காண்கின்றோம். இது முரண்பாட்டுக்கு பின்னான சூழலாக (post conflict situation) இல்லை. இவ்விரு சொல்லாடல்களுக்கு இடையேயும் பெரும் இடைவெளி உள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து உள்ளதே அல்லாமல் இலங்கையின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் ரீதியில் முடிவுக்கு வரவில்லை. இலங்கை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அதனுள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அதனுள் அடக்கிவிடலாம் என்ற போக்கில் செயற்படுகின்றது. இது மிகவும் ஆபத்தானது.
நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச ரீதியாகவும் பெருமளவிலான தமிழர்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். காணி குடியேற்றம் போன்ற அரசின் கொள்கைகள் தேசிய இனப்பிரச்சினை கேள்வியை வேறொரு தளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு நகர்த்தி உள்ளதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 30 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு இருந்த தேசிய இனப்பிரச்சினைக்கான கேள்வியின் நிலை இன்றில்லை. இது இன்னுமொரு நேர்காணலுக்கோ அல்லது கருத்தரங்கிற்கோ உரியவிடயம். நான் இப்போது அதற்குள் செல்ல விரும்பவில்லை.
தமிழ் பகுதிகளில் அப்பகுதி மக்களின் ஈடுபட்டுடன் ஜனநாயக ரீதியான அபிவிருத்தி அவசியம். அதேசமயம் ஜனநாயக ரீதியாக தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசு முன் வைக்க வேண்டும். இவையிரண்டும் நிகழும் பொழுதே இனங்களிடையேயான மீளுறவு ஏற்பட்டு நிரந்தர சமாதானம் சாத்தியமாகும்.