இலங்கை யின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறும் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை பான் கீ மூன் நியமித்துள்ளார். இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் எம்.டரஸ்மன், அமெரிக்காவின் சட்டத்தரணி ஸ்ரிபன் ரட்னர், தென்னாபிரிக்காவின் சட்ட நிபுணர் ஜஸ்மின் சூகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இக்குழுவின் தலைமைப் பொறுப்பு எம்.டரஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அமுலாக்கத்துக்கு இந்நிபுணர் குழு செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு நான்கு மாதங்கள் வரை செயற்படும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.