தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம், தொடர்ந்து இழுபறிபடுவதால் அரசின் பகிரங்க தலையீட்டை நாம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் கோரினோம். நானும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் ஜே.வி.பி.யின் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் இது தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், பகிரங்கமாக தலையிட்டு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனோ எம்.பி. மேலும் கூறுகையில்,
“கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், தொழிலாளர்களுக்கு 405 ரூபா சம்பள உயர்வு என்பதாக ஊடகங்களுக்கு இ.தொ.கா. அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்திற்கும், தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்குப் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளத்தை தோட்டக் கம்பனிகளால் வழங்க முடியாவிட்டால் மானியம் அல்லது வரிச்சலுகைகள் வழங்கி இந்த 500 ரூபா தொகையை நாட் சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் வழி ஏற்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு தலையீட்டையே நாம் அரசாங்கத்திடம் கோரினோம்” என்றார்