உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார். 15 வது உலக ஆண்கள் குத்துச்சண்டை போட்டி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து வருகிறது.
இதன் மிடில் வெயிட் (75 கிலோ) பிரிவில் அரையிறுதியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்போஸ் அடோவ்வை எதிர்கொண்டார்.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் விஜேந்தர்சிங் 10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார்.
ஆனால் 2 வது சுற்றில் நிலைமை தலைகீழாக மாறியது. லைட் ஹெவிவெயிட் முன்னாள் உலக சம்பியனான அப்போஸ் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டார்.
அவர் 2 வது சுற்றில் 5-0 என்ற புள்ளி கணக்கில் தனதாக்கினார். 2 வது சுற்றில் விஜேந்தரால் ஒரு புள்ளி கூட பெற முடியவில்லை. 3 வது, 4 வது மற்றும் கடைசி சுற்றில் இருவரும் சம தாக்குதலில் ஈடுபட்டனர். இருவரும் கடைசி இரண்டு சுற்றுக்களில் 2-2 என்ற கணக்கில் சமபுள்ளிகளை பெற்றனர். முடிவில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் 3-7 என்ற புள்ளி கணக்கில் அப்போஸ் அடோவிடம் தோல்வி கண்டார்.
23 வயதான விஜேந்தர்சிங் அரையிறுதியில் தோல்வி கண்டாலும் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
இதன் மூலம் உலக குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர்சிங் வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.