ஆசிய அளவில் மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் இம்மாதம் 17 ஆம் திகதி தொடங்கி 24 ஆம் திகதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
இவ்வகையான ஆசியக் கூடைப்பந்து போட்டிகள், தெற்காசியாவிலேயே முதல் முறையாக இப்போது இந்தியாவில் தான் இடம்பெறுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா இலங்கை உட்பட 12 அணிகள் பங்கு பெறுகின்றன. சீனா, ஜப்பான் உட்பட ஆசிய அளவில் முன்னணியில் இருக்கும் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.
பங்கு பெறும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன என்று போட்டிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்தும் குழுவின் இணைச் செயலரான ரகோத்தமன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா, இலங்கை போன்ற அணிகள் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கூறும் அவர், இப்படியான நாடுகளுக்கு இவ்வகையான போட்டிகள் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்றும் கருத்து வெளியிடுகிறார்.
ஜப்பான் மற்றும் சீன நாட்டு வீரர்களின் விளையாட்டு திறனும், மன உறுதியும் இந்திய மற்றும் இலங்கை வீரர்களை விட உயர்ந்து காணப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
கிராமப்புறங்களில் இருந்து இளம் வயதில் வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தாலே இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டு முன்னேற்றம் அடைந்து சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டிகள் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன.