August

August

உடப்பு திரெளபதை அம்மன் வருடாந்த ‘தீ’ மிதிப்பு இன்று

உடப்பூர், அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த ஜுலை 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 18 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தளம் மாவட்டத்திலமைந்துள்ள உடப்பு தமிழ்க் கிராமத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் அருள்மிகு திரெளபதிஅம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

தீ மிதிப்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆலயத்தின் பஸ் வண்டிகள் உட்பட போக்குவரத்து சபை, தனியார் விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன. நாளை தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் நிகழ்வும், துவஜாவரோஹனமும் நடைபெறும். நாளை மறுதினம் காலை பால்குட பவனியுடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.

தாண்டிக்குளம் சாவடி அகற்றப்பட்டது

police-traffic-stop00.jpgவவுனியா வடக்கு ஓமந்தை வரையிலான பகுதிகளிலுள்ள சுமார் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் தாண்டிக்குளம் சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 20 கிராம சேவகப் பிரிவுகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ள பகுதிகளிலுள்ள தமது வீடுவாசல்களை சென்று பார்வையிடவும், அதிகாரிகள், இலகுவாக இப்பகுதிக்கு சென்றுவரவும் ஏதுவாக இச்சோதனைச் சாவடி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ். நோக்கி செல்பவர்கள் இனிமேல் ஓமந்தை சாவடியை மட்டுமே கடந்து செல்ல வேண்டும். இதுவரை காலமும் தாண்டிக்குளம் சோதனை சாவடியை கடந்தும் செல்ல வேண்டியிலிருந்தது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கு தாண்டிக்குளம் சோதனைச் சாவடி நீக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் பசில் ராஜபக்ஷ எம்.பி தலைமையில் வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது தீர்மானிக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

480 கிலோ கிளேமோர்கள், ஆயுதங்கள் பெருமளவு மீட்பு

07-srilanka-army.jpg480 கிலோ எடையுள்ள அதி சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொன்றும் 10 கிலோ எடையுள்ள அதி சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-10, 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-76, சிறிய ரக கிளேமோர் குண்டுகள்- 20, ரி-56 துப்பாக்கி ரவைகள்-300, படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இணைப்பு இயந்திரம்- 01 மற்றும் பல்வேறு ஆயுதங்களையும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரதான கட்சிகளும் இத் தேர்தலுக்கான தத்தமது இறுதி பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ஊவா மாகாண சபைத் தேர்தலும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றன. இதற்கான பிரசார நடவடிக்கைகளுக்கான காலம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதாகத் தேர்தல்கள் திணைக்களம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கமையவே அனைத்துக் கட்சிகளும் தத்தமது இறுதி பிரதான பிரசார கூட்டங்களை இன்று நடத்தத் தீர்மானித்துள்ளன.

இதன் பிரகாரம் ஊவா மாகாண சபைக்கான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பதுளையில் நடைபெறவுள்ளது.  இதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரதான பிரசாரக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பசறையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், ஜே.வி.பி.யின் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம்  வெளிமடவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான இறுதி பிரசாரக் கூட்டங்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாசையூரிலும் சுண்டுக்குளியிலும் நடத்தவுள்ளது. அத்துடன், வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசாரக் கூட்டம் இன்று கற்குளியில் நடைபெறவுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐ.தே.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவுள்ளன.

இதேநேரம், இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதால் அதன் பின்னர் தேர்தல் பிரசாரங்களைச் செய்யும் வகையிலான ஊடகங்களுடனான விவாதங்களைக் கூட அரசியல் கட்சிகள் நடத்துவதில்லையென்ற இணக்கப்பாடு இம்முறை எட்டப்பட்டிருப்பதாக மேலதிகத் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமனசிறி தெரிவித்தார்.

கிழக்கைச் சேர்ந்த 1445 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பணி இன்று ஆரம்பம் – வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgவவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1445 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நாளை (இன்று) ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 190 பேரும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 329 பேரும் திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 292 பேரும் மற்றும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 634 பேருமே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதப் பிடியில் சிக்குண்டு,  பின்னர் மனிதநேய நடவடிக்கைகளால் மீட்கப்பட்ட பொது மக்களை அவரவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்..

இதனையடுத்து வடக்கின் மீள் குடியேற்றம்,  அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்குப் பொறுப்பான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின்படியே இந்த மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை,  யாழ் நலன்புரி நிலையங்களிலுள்ள 650 குடும்பங்களைச் சேர்ந்த 3020 போரும் வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள குடாநாட்டைச் சேர்ந்த 52 குடும்பங்களும்  இன்று யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் மீள் குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களின் அரச அதிபர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த சகல உத்தியோகஸ்தர்களும் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் என்றும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். 

இதுவரை 225 டெங்கு நோயாளர்கள் மரணம் – சுகாதார அமைச்சு தகவல்

mosquitfora.jpgநாட்டில் இதுவரை 225 டெங்கு நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டிவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு நோயால் பாதிப்புள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

முகாம்களிலிருக்கும் சிறுவர்களுக்கு தனியான புனர்வாழ்வு நிலையம் – நீதியமைச்சு தீர்மானம்

school-children000.jpgவவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கென தனியான புனர்வாழ்வு நிலையமொன்றை அமைப்பதற்கு நீதியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் 400 சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான செயற்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாக நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.  புலிகளின் செயற்பாடுகளில் சிக்கியிருந்த 13 வயது முதல் 18 வயதுவரையான சிறுவர்கள் இப்போது வவுனியா முகாம்களில் தங்கியிருக்கின்றர். இவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

இவ்வாறான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியா வைத்தியசாலையின் கண்காணிப்பின் கீழ், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கல்வி அதிகாரிகளின் உதவியுடனும், யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த செயற்குழு நியமிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.  இந்த சிறுவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் வவுனியா விவசாயக் கல்லூரியில் அமைக்கப்படவிருப்பதாகவும் நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மாணவி தற்கொலை நீதிமன்ற விசாரணை

hand-phone.jpgகொழும் பிலுள்ள பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாடசாலை நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் மரணமான சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை மேலதிக நீதிவான் ஜிகான் ரணவக்க முன்னிலையில் நடைபெற்றது.  9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியமை தொடர்பாகப் பாடசாலையில் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னர் குளியலறைக்குச் சென்று கழுத்துப்பட்டியைக் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து சிலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கறுவாக்காடு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

வடக்குக்கு மின்சாரம் வழங்க 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கில் உள்ள சகல கிராமங்களுக்கும் அடுத்த இரண்டு வருடத்துக்குள் மின்சார வசதிகளை வழங்குவதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டி. ஜே செனவிரத்தன தெரிவித்துள்ளார்.

வடபகுதிக்கு மின்சார வசதிகளை வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய வேலைத்திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது. 

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா சுற்று வட்டத்திலுள்ள 35 கிராமங்களுக்கு அடுத்த சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைவுள்ளதுடன் அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கிடைத்துவிடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு சுமார் 2 இலட்சத்து 43 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர்

000stud.jpgஇந்த வருடம் நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 மாணவர்கள் தோற்றுகின்றனர்.  இவர்கள் இயல்பு நிலையில் பரீட்சை எழுதுவதற்கு வசதியாக ஆயிரத்து 827 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 22 தினங்கள் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் பாடசாலை பரீட்சார்த்திகளாக ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 755 பரீட்சார்த்திகளும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 43 ஆயிரத்து 336 பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 991 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

ஆயிரத்து 827 பரீட்சை நிலையங்களுக்கும் 267 விநியோக நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற்படவுள்ளன. பரீட்சைக் கடமையில் 25,000 பேர் வரையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  பரீட்சைகள் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 7 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.