கொழும் பிலுள்ள பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாடசாலை நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் மரணமான சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை மேலதிக நீதிவான் ஜிகான் ரணவக்க முன்னிலையில் நடைபெற்றது. 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியமை தொடர்பாகப் பாடசாலையில் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னர் குளியலறைக்குச் சென்று கழுத்துப்பட்டியைக் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
பின்னர் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கறுவாக்காடு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.