August

August

இந்திய வம்சாவளி இலங்கை பிரஜைகளின் பிரச்சினை – கொழும்பில் 22இல் உயர்மட்ட மாநாடு

sri-lanka-tea.jpgஇந்திய வம்சாவளி இலங்கைப் பிரஜைகளின் கல்வி நிலை மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றது. இதனை வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரஜைகளின் சர்வதேச அமைப்பான ‘கோபியோ’ ஏற்பாடு செய்துள்ளது.

ஐந்து அமர்வுகளாக நடைபெறும் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு எம். மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெறும். இவ் ஆரம்ப நிகழ்வில் ‘கருத்தரங்கின் குறிக்கோளும் அடிப்படை வசதிகளும்’ எனும் தலைப்பில் கோபியோவின் சர்வதேசத் தலைவர் பி. பி. தேவராஜ் உரையாற்றுவார். முதலாவது அமர்வு குமார் நடேசன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ‘அறிவுப் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

இரண்டாவது அமர்வு தெ. ஈஸ்வரன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பெருந் தோட்டப் பகுதிகளில் இந்திய வம்சாவழி இலங்கை பிரஜைகளின் தற்போதைய கல்வி நிலை குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் சமர்ப்பிப்பார். அத்துடன் என். வாமதேவன் ‘பெருந்தோட்ட சமூகத்திற்கு கல்வியுடன் கூடிய தேசிய சமூக அபிவிருத்தித் திட்டமும் நடவடிக்கை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

ராஜு சிவராமன் தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமர்வில் கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆழமாக குழுநிலையில் ஆராயப்படும். அத்துடன் ‘முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி’ எனும் தலைப்பில் சி. நவரட்ண உரையாற்றுவார். ரி. தனராஜ் ‘கல்வியாளர்களுக்கான முகாமைத்துவ தொழில்சார் அபிவிருத்தி’ எனும் தலைப்பில் உரையாற்றுவார். பேராசிரியர் எம். எஸ். மூக்கையா தலைமையில் பேராசிரியர் எம். சின்னத்தம்பி, டாக்டர். ஏ. எஸ். சந்ரபோஸ் ஆகியோர் கலந்துகொள்ளும் ‘மூன்றாம் நிலைக் கல்வி’ தொடர்பான குழுநிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும்.

நான்காவது அமர்வு டாக்டர். எஸ். செளலா தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் ‘தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சித் துறையிலுள்ள வசதி வாய்ப்புக்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

ஐந்தாவது அமர்வு எம். முத்துசாமி தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில் இந்திய தூதரகத்தின் முதலாவது செயலாளர் ஆர். ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு உரையாற்றுவார். அத்துடன் ஏ.கே. சுப்பையா மற்றும் ஆர். விஜயலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளும் கருத்தாடலும் இடம்பெறும்.

பஹ்ரைன் 20 மெ. தொன். பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு

புனித ரமழானை முன்னிட்டு பஹ்ரைன் அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்கென 20 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்களை அனுப்பி வைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பஹ்ரைன் பிரதமர் கலீபா பின் சல்மான் அலி ஹலிபா அவர்களிடம் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும் இலங்கை-பஹ்ரைன் நல்லுறவைப் பேணும் விதத்திலும் பஹ்ரைன் இதனை அனுப்பி வைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக பணிப்பாளர் மேலும் கூறினார்.

அப்பலோ மருத்துவமனை பணிப்பாளர்களில் ஒருவராக கோத்தபாய நியமனம்

gothabaya.jpgஇலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு அப்பலோ மருத்துவமனையின் பணிப்பாளர்களில் ஒருவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பலோ மருத்துவமனையின் உரிமையாளர்களான லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன் நிறுவனத்தினர், இந்த நியமனம் குறித்து கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் அதிகளவான பங்குகளைக் கொண்டுள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சார்பிலேயே கோத்தபாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தியமை தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், கூட்டுத்தாபனத்தை கடந்த ஜூன் மாதம் பிரபல வர்த்தகரான ஹெரி ஜெயவர்தனவிடம் இருந்து பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

இந்திய அப்பலோ நிறுவனம் நிர்மாணித்த அப்பலோ மருத்துவமனையின் அதிகளவான பங்குகளை கடந்த 2006 ஆம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை நிர்வகித்து வந்த ஹெரி ஜயவர்தன கொள்வனவு செய்திருந்தார். 

காதல் ஜோடியிடம் 10,000 ரூபா இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைதானார்

10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வியாழக்கிழமை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கெக்கிராவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இவர் காதல் ஜோடியிடம் இருந்து இதனை வாங்கும் போதே கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்தக் காதல் ஜோடி கலாஓயா குளக்கட்டில் தனிமையில் இருந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களின் அடையாள அட்டைகளைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவ்வாறு செய்யாதிருக்க 15 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாகத்தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

தம்மால் 15 ஆயிரம் ரூபாவைத் தர வசதியில்லை எனவும் 10 ஆயிரம் ரூபாவை தருவதாகவும் அந்த இளைஞனும் யுவதியும் தெரிவித்தனர்.

இதனையடுத்து இளைஞனின் வாகன அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் என்பனவற்றைப் பெற்றுக் கொண்டு 10 ஆயிரம் ரூபாவைத் தந்துவிட்டு அவற்றை மீளப்பெறுமாறும் பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த இளைஞனும் யுவதியும் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தனர். ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி இளைஞனும் யுவதியும் நேற்று வியாழக்கிழமை கெக்கிராவ நகரில் வைத்து அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் 10 ஆயிரம் ரூபாவைக் கொடுத்தனர்.

அங்கு ஏற்கனவே மறைந்து நின்ற இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தக் கான்ஸ்டபிளை கையும் மெய்யுமாகப் பிடித்தனர்.

வன்னி நடவடிக்கையின் போது அநாதரவான இரண்டு குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க பணிப்பு

வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து அநாதரவான நிலையில் யாழ். சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலுள்ள பெற்றோரிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கினார்.

சுமார் 3 வயது மதிக்கத்தக்க மைதிலி என்ற பெண் குழந்தையும், சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையும் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் நேற்றுவரை சாவகச்சேரி ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் புதிதாக கட்டப்பட்டுவரும் வார்ட் தொகுதியை பார்வையிடுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆளுநர் ஆஸ்பத்திரிக்குச் சென்ற போதே மேற்படி இரண்டு குழந்தைகளையும் கண்டார். இவ்விரண்டு குழந்தைகளும் வவுனியா செட்டிக்குளத்திலுள்ள தாய், தகப்பனுடன் இன்று இணைகின்றன.

வட பகுதி நெல்வயல்கள் இன்று விவசாயிகளிடம் கையளிப்பு!

douglas_deva-2009-08-14.jpgதென் மராட்சி தெற்கு, மறவன், புலோலி கைதடி மற்றும் நாவற்குழி பிரதேச மக்கள் இன்று தொடக்கம் தமது நிலங்களில் குடியேறுவதற்கும் நடமாடுவதற்கும் அனுமதிக்கப்படுவதுடன் மின்சாரம் குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்றம் மீள் விவசாயம் தொடர்பான இப்பகுதி மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து ஜனாதிபதியுடனும் பிரதேச இராணுவ அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக மெற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இப்பகுதி நெல் வயல்கள் விவசாயிகளிடம் இன்று கையளிக்கப்படுவதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். தென்மராச்சி பலநோக்குச் கூட்டுறவுச்சங்கத் தலைவர் நா.திருச்செந்தூர்நாதனின் தலைமையில் கைதடி நாவற்குழி முருகன் கோவிலுக்கு முன்பாக இன்று நடைபெற்ற நிகழ்வில் உரைநிகழ்தும் போதே அமைச்சர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரைநிகழ்த்திய அமைச்சர; தற்போதைய அமைதியான சுழ்நிலை ஏற்படுவதற்கு காரணமாகவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்பிரதேச மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தற்போதைய சுழலைப் பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மக்கள் முன்னேற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

12 அமைச்சர்கள் பொறுப்பாக இருந்தும் இலவசக் கல்விக்குப் பேராபத்து; எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

ranil0111.jpgநாட்டின் கல்வித்துறைக்குப் பொறுப்பாக 12 அமைச்சர்கள் இருந்தும் இலவசக்கல்வி முறைமைக்குப் பேராபத்து தோன்றியிருப்பதாக எச்சரித்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பரீட்சைக் கட்டணம் அறவிடுவது அரசியலமைப்பு விதியில் இல்லாததொன்றும் ஆதலால் அறவிட்ட கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை வினாத்தாள் தொடக்கம் கல்வித் துறையின் சகல மட்டங்களிலும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், மாணவர் பிரச்சினையானது எதிர்கால சந்ததியைப் பாதிக்கும் பாரதூரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் தேசிய ஊழியர் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

இன்று பரீட்சையின் தரம் கீழ் மட்டத்துக்குச் செல்லும் அதேநேரம், இலவசக் கல்வியும் இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். கல்வி தொடர்பில் 12 அமைச்சர்கள் உள்ள நிலையில் இலவசக்கல்வி இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது.

அதேநேரம், பரீட்சை வினாத்தாளில் பிழைகள் உள்ளன. ஒரு பரீட்சைக்கான தினத்தில் வேறு ஒரு பரீட்சை இடம்பெறுகிறது. ஒன்றுக்கு இரண்டு தடவை பரீட்சை நடத்துவோம். இது தவிர வினாத்தாளின் திருத்தத்தில் பிரச்சினை, வெட்டுப்புள்ளி ஒன்று இரண்டு தடவை அனுப்பப்படுகின்றது. மீள் மதிப்பீடுகளுக்கும் மதிப்பீட்டுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினையால் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

பரீட்சையை உரிய முறையில் நடத்த முடியாதிருப்பதற்குக் காரணம் தகுதியான அதிகாரிகள் இல்லையெனத் தெரிவிக்கின்றது அரசு. எனவே, திறமையானவர்களை நியமிக்காமையினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கமே பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளது.

பாடசாலைப் பரீட்சையின் போதே பாடசாலை ஆசிரியர்கள் எவ்வாறு திறமையாகச் செயற்படுகின்றார்களோ அதிலிருந்து மாணவர்களின் நிலை தெரியவரும். இந்நிலையில் பிழையிலிருந்து தப்புவதற்கு தர்க்கத்தில் அரசு ஈடுபடுகின்றது. தேசிய மட்டத்தில் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறுகின்றது.

பாடசாலை மட்டப் பரீட்சைகளை பிரதேச சபையோ அல்லது வலயப் பிரிவோ நடத்துகின்றது. எந்த மட்டத்திலான பரீட்சையாயினும் கல்வியமைச்சரே பிழைகளுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் இதிலிருந்து தப்புவதற்கு மாகாண சபையால் பரீட்சை நடத்தப்பட்டதாக கூறுகின்றார்.

அரசியலமைப்பின்படி பிரதேச சபைகள் பரீட்சை நடத்துவதற்கு பரீட்சை ஆணையாளரிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி பெறப்பட்டுள்ளதாவெனக் கேட்டால் பதில் இல்லை. அரசியலமைப்பு பிரகாரம் பரீட்சைக்கு மாணவர்களிடம் கட்டணம் அறவிட முடியாது. எனவே, மாணவர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.

பரீட்சைக் கட்டணமாக மாணவர்களிடம் சுமார் 9 கோடி ரூபா அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எந்தக் கணக்கும் இல்லை. இது குறித்துப் பாராளுமன்றத்திற்கு அமைச்சர்கள் எதுவும் தெரிவிப்பதில்லை. வினாத்தாளில் பிழைகள் தொடர்பில் எந்த விசாரணையும் இல்லாதுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தவுமில்லை.

சுயாதீன ஆணைக்குழு இதற்குத் தேவை. அவ்வாணைக் குழுவிருந்தால் உரியமுறையில் விசாரணை இடம்பெறும். ஆனால், அது உருவாக்கப்படாதுள்ளது. இதற்கு அமைச்சரும் ஜனாதிபதியும் பதில் கூற வேண்டும். இது தேசிய பிரச்சினையாகும். இதனால் நாட்டின் எதிர்காலமும் எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெறுவதற்கு தேசிய ஊழியர் சங்கம் அதன் கீழ் உள்ள கல்விசார் தொழிற்சங்கத்துடன் இணைந்து ஏனைய ஆசிரியர் சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஆசிரியர் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் உள்ளதால் அத் தொழிற்சங்கங்களையும் இதில் இணைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உரையாற்றுகையில்;

மாணவர்களிடமிருந்து அறவிட்ட பரீட்சைக் கட்டணம் சுமார் 9 கோடி ஆகும். இதனை மாணவர்களிடம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேசிய ஊழியர் சங்கம் நீதிமன்றம் செல்லும். இலவசக்கல்வியை இல்லாமல் செய்வதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

வன விலங்குகளை தின்றே ஒழிக்கும் வியட்நாமியர்

வியட்நாம் நாட்டு மக்கள் பல வன விலங்குகளை தின்றே அழித்து ஒழித்து விடப் போகிறார்கள் என்று வியட்நாமில் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் வன விலங்குகளின் வியாபாரம் குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் இருக்கும் மலைவாசி மக்களிடமிருந்து வன விலங்குகளின் இறைச்சியை உண்ணும் பழக்கம் நகரங்களில் வசிக்கும் வசதிபடைத்தோர் மத்தியில் பரவிவிட்டதாக வியட்நாம் விலங்கியல் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

அருகிவரும் 80 வகையான உயிரினங்களின் இறைச்சி அங்கு மக்களால் உண்ணப்படுகிறது. காண்டாமிருகங்கள், டபிர் என்ற பன்றி போன்ற விலங்கு மற்றும் ஒரு வகை குரங்குகளும் இதில் அடங்கும்.

டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார் முரளி

murali.jpgநியூஸி லாந்துடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முரளிக்கு பதிலாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இது தவிர, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாடாத விக்கெட் காப்பாளர் பிரஸன்ன ஜயவர்தன மற்றும் காயத்தினால் அவதிப்பட்டு வந்த டி.எம். டில்ஷான் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்புகின்றனர்.  இதில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்த சுரேவ் ரன்திவ், சுரங்க லக்மால் மற்றும் கௌஷல்ய சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 18 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்

குமார் சங்கக்கார (தலைவர்), மலிந்த வர்ணபுர, தரங்க பரணவிதான, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, திலகரத்ன டில்ஷா, அன்ஜலோ மத்தியூஸ், சாமர கபுகெதர, முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ், திலான் துஷார, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், பிரஸன்ன ஜயவர்தன (வி.கா.), ரங்கன ஹேரத்.

இந்தோனேஷியாவில் சட்டவிரோத குடியேற்றம் : இலங்கையர் நாடு திரும்புவர்

indonesia1111.jpgஇந்தோனே ஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட எட்டு சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களே இவ்வாறு இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, இந்தோனேஷியாவின் ஆச்சே தீவுகளில் கைது செய்யப்பட்ட 55 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.