August

August

டெங்கு நுளம்பை அழிக்கும் (B.T. I) பக்ரியாக்கள் – கியூபா நிபுணத்துவ குழுவின் ஆய்வு அறிக்கை நேற்று சுகாதார அமைச்சில் கையளிப்பு

nimal_siripala_de_silva.jpgடெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பீ. ரி. ஐ. பக்aரியா நுண்ணங்கிகளை இலங்கை உபயோகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.

கியூபாவிலிருந்து வந்த நிபுணத்துவ குழுவினர் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை நேற்று சுகாதார அமைச்சில் கையளித்தனர்.

சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால, சுகாதார அமைச்சின் செயலர் டொக்டர் கஹந்த லியனகேயிடம் நேற்று கையளித்தார்.

சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் விசேட அழைப்பை ஏற்று டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான கியூபா பீ.ரி.ஐ. (B.T.I)  பக்aரியா நுண்ணங்கிகளை உபயோகிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வதற்கு கியூபா விலிருந்து இரண்டு நிபுணர்கள் வருகை தந்தி ருந்தனர்.

இவர்கள் இருவரும் மேற்படி நுண்ணங்கிகளை உபயோகிப்பது தொடர்பாக பல இடங்களில் தமது ஆய்வுகளை நடத்தினர். இதன்படி, அம் பாந்தோட்டை, கண்டி, கொழும்பு மாவட்டங் களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நுண்ணங்கிகளை பயன்படுத் தக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. மேற்படி சிபாரிசுகளடங்கிய அறிக்கை அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் ஒப்படைக்கப்படும்.

வெளிநாட்டில் நடபெறும் இரண்டு மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார். அதன்பின்னரே அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சாவகச்சேரி நகரசபை மைதானமும் இந்து மயானமும் பொது மக்களின் பாவனைக்காக வெள்ளி முதல் திறப்பு

சாவகச்சேரி, நகர சபைக்குரிய விளையாட்டு மைதானம் மற்றும் இந்து மயானம் என்பன வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தேவைகள் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பொதுமக்கள் நலன்கருதி அகற்றுவது தொடர்பில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் சாவகச்சேரி நகர சபைக்கு விஜயம் செய்திருந்த போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தி மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரும் ஆளுநரும் யாழ்.குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளை பார்வையிட உயர்மட்ட சபை நியமனம்

சிறைச் சாலைகளைப் பார்வையிடுவதற்கான உயர்மட்ட சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த சபையை நியமித்துள்ளார்.

முன்னாள் இராஜதந்திரியான நந்தா கோடெகே தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ராஜன் ஆசீர்வாதம், அர்ஜுன் தெரணியகல, எச். ஜீ. தர்மதாச, இம்தியாஸ் இஸ்மாயில் ஆகியோர் அடங்குகின்றனர்.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறைச்சாலை திணைக்க ளத்தின் நிர்வாகத்தில் உள்ள 25 சிறைச்சாலைகளின் நிர்வாகம், கைதிகளின் நலன் மற்றும் குறைபாடுகள், பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இச்சபை உறுப்பினர்கள் எந்நேரமும் சிறைச்சாலைக்குச் சென்று சுயாதீனமாக கைதிகளை பார்வையிடவும் முறைப்பாட்டு பதிவுப் புத்தகமொன்றையும் ஒவ்வொரு சிறையில் வைத்து அதில் பதியப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் சகல அதிகாரமும் இச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் மக்களுக்காக ஜப்பான் அரசு 117 மில் நன்கொடை

இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும்; இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குரியோ ரகஹாசி ஜப்பான் அரசாங்கத்தின் சார்பிலும்; இதற்கான ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஜப்பான் அரசாங்கம் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் மலசல கூட வசதிகளை செய்து கொடுக்கவென 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு இத்திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதுடன், செப்டெம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளது. 

மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மீட்க புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு – இராணுவத் தளபதி தகவல்

jagath_jayasuriyas000.jpgபுலிகளி னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை அவர்கள் காட்டி வருவதாகவும் இராணுவத்தளபதி ஜகத் ஜயசுரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்கள்  மறுவாழ்வு பெற்றுவருகின்றனர். இவர்கள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட  விசாரணைகளின் போது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் எதிர்வரும் காலங்களில் பாரியளவு ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாகவும்  இராணுவத்தளபதி மேலும்  தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காவலரண்களை நீக்கி போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை – நவீன நகருக்கான நகல்வரைவு 18இல் சமர்ப்பிப்பு

வவுனியா பிரதேசத்தில் கைவிடப்பட்ட பொலிஸ் காவலரண்களை நீக்கி நகரைச் சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார். இதற்கென வடமாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

வவுனியா பிரதேசத்தில் வீதிச் சோதனைக்காக சுமார் 40 முதல் 50 வரையான பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை யாவும், இறுதிக்கட்ட யுத்தத்துக்குப் பின்னர் கைவிட்டப்பட்டன. எனினும் காவலரண்கள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை நிவர்த்திக்கு முகமாக, கைவிடப்பட்ட அனைத்துப் பொலிஸ் காவலரண்களையும் நீக்கிவிட்டு, நகரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை, வவுனியா நகரை நவீனமயப்படுத்துவதற்கான இறுதி நகல் வரைவுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். முக்கிய அரச நிறுவனங்களின் கட்டடங்களை ஒரு புறமாக நிர்மாணிப்பதுடன், நகரை வர்த்தக மையப் பகுதியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

செட்டிக்குளம் – மனிக்ஃபாம் நிவாரண இடைநிலை கிராமங்களில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வலயங்களுக்குப் பொறுப்பான தளபதிகள், முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை நேற்று (14) வவுனியா அழைத்து அரச அதிபர் இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார். மழையின் காரணமாக கூடாரங்கள், மலசல கூடங்கள் மற்றும் சமையல் நட வடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணித்துள்ளார். இது தொடர்பில், வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடை பெற்ற சந்திப்பில் விரிவாக ஆராய்ந்து அறி வுறுத்தல்களை வழங்கியதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ்  தெரிவித்தார்.

நிவாரண இடைநிலை கிராமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தற்போது இடைக்கிடை மழைபெய்து வருகிறது. இதனால் அங்கு சிறு சிறு இடை யூறுகள் ஏற்பட்டுள்ளனன. எனவே, இந்தச் சிறு பாதிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு பாரிய மழை பெய்தால், ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அரச அதிபர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அங்கவீனர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், பல்கலைக் கழகங்களுக்குப் புதிதாகத் தெரிவான மாணவர்கள் ஆகியோரை முகாம்களிலிருந்து விடுவிப்பது தொடர்பில் விபரங்களைத் திரட்டி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்ப் பதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
 

“நீண்டகாலத் திட்டத்தின் பிரகாரமே கே.பி.யை கைது செய்தோம்’

pathmanathan.jpgவிடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச மட்டத்திலும் அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட காலத் திட்டத்தின் விளைவாகவே கே.பி. கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கோதாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வானொலிக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.  புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே கே.பி.தொடர்பான தகவல்களை கண்காணித்து வந்திருந்ததாகவும் இதன் போது அவர் கூறியுள்ளார்.  அத்துடன், விசாரணைகளின் போது, கே.பி.விடுதலைப் புலிகளின் உலகளாவிய ரீதியிலான வலைப்பின்னல்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் கூட தாக்கமொன்றை ஏற்படுத்தக் கூடியளவிலான பலம்வாய்ந்த அமைப்பாக வளர்ந்து கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதேநேரம், இலங்கையானது மேலைத்தேய உலகத்திற்கும் அப்பாலான நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டமையானது பல வெற்றிகளை அடைய உதவியதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்திருக்கிறார்.

யாழ்நகரில் வீதி விளக்குகள் எரிய வேண்டுமென பணிப்பு

யாழ்நகரப் பகுதியெங்கும் வீதி விளக்குகள் எரிய வேண்டும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறி பணித்துள்ளார். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனைக்கமைய இப்பணிப்புரையை விடுத்துள்ள ஆளுநர், யாழ்நகரப் பகுதிகள் தோறும் வீதி விளக்குகள் எரிய வேண்டும் என்றும் யாழ். உள்ளூராட்சி சபையும் மின்சார சபையும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களில் பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வம் உயர்தர பரீட்சைக்கு மாணவர் 100 வீத பங்களிப்பு

000stud.jpgக.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பமான தினம் முதல் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலுள்ள பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வமுடன் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் 100 வீதம் மாணவர்களின் பங்களிப்பு உள்ளது என்றும் வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். சரணடைந்தவர்களுள் 27 மாணவிகள் காமினி வித்தியாலயத்திலும் 138 மாணவர்கள் பம்பைமடு வளாக முகாமிலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இவர்களுடன் நிவாரணக் கிராமங்களில் 1190 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கலைத்துறையில் 771 மாணவர்களும், வர்த்தக துறையில் 230 மாணவர்களும், கணித துறையில் 64 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்தில் 125 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்

புதிய 6 உதவி ஆளுநர்களை நியமித்தது மத்திய வங்கி

மத்திய வங்கி 6 அதிகாரிகளை உதவி ஆளுநர்களாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் பதவி உயர்த்தியுள்ளது.  டபிள்யூ.எம்.கருணாரட்ண, பி.லியனகே, ஜே.பி.மாம்பிட்டிய, சி.கே.நாணயக்கார, பி.டி.டபிள்யூ.ஏ.சில்வா, பி.என்.வீரசிங்க ஆகியோரே உதவி ஆளுநர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  மத்திய வங்கியில் 30 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் பிராந்திய அபிவிருத்திப் பணிப்பாளர் கருணாரட்ணவுக்கு முகவர் செயற்பாடுகளுக்கு (பிராந்திய அபிவிருத்தி) பொறுப்பான உதவி ஆளுநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

30 வருடங்கள் சேவையாற்றியிருக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கான முன்னாள் பணிப்பாளர் லியனகே பொருளாதார விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் கொடுப்பனவுகள், செலுத்துகைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் மாம்பிட்டிய நிதிமுறைமை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியில் 34 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் செயலாளர் நாணயக்கார ஒருங்கிணைப்பு சேவைகளுக்கு (மனித வளமுகாமைத்துவம்) பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியில் 26 வருடங்கள் சேவையாற்றிய வங்கிமேற்பார்வை பணிப்பாளர் சில்வா, நிதி முறைமை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராகவும் 18 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் பிரதம பொருளியலாளரும் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளருமான வீரசிங்க பொருளாதார விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.