விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச மட்டத்திலும் அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட காலத் திட்டத்தின் விளைவாகவே கே.பி. கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கோதாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வானொலிக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே கே.பி.தொடர்பான தகவல்களை கண்காணித்து வந்திருந்ததாகவும் இதன் போது அவர் கூறியுள்ளார். அத்துடன், விசாரணைகளின் போது, கே.பி.விடுதலைப் புலிகளின் உலகளாவிய ரீதியிலான வலைப்பின்னல்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் கூட தாக்கமொன்றை ஏற்படுத்தக் கூடியளவிலான பலம்வாய்ந்த அமைப்பாக வளர்ந்து கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதேநேரம், இலங்கையானது மேலைத்தேய உலகத்திற்கும் அப்பாலான நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டமையானது பல வெற்றிகளை அடைய உதவியதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்திருக்கிறார்.