மத்திய வங்கி 6 அதிகாரிகளை உதவி ஆளுநர்களாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் பதவி உயர்த்தியுள்ளது. டபிள்யூ.எம்.கருணாரட்ண, பி.லியனகே, ஜே.பி.மாம்பிட்டிய, சி.கே.நாணயக்கார, பி.டி.டபிள்யூ.ஏ.சில்வா, பி.என்.வீரசிங்க ஆகியோரே உதவி ஆளுநர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியில் 30 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் பிராந்திய அபிவிருத்திப் பணிப்பாளர் கருணாரட்ணவுக்கு முகவர் செயற்பாடுகளுக்கு (பிராந்திய அபிவிருத்தி) பொறுப்பான உதவி ஆளுநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
30 வருடங்கள் சேவையாற்றியிருக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கான முன்னாள் பணிப்பாளர் லியனகே பொருளாதார விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
28 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் கொடுப்பனவுகள், செலுத்துகைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் மாம்பிட்டிய நிதிமுறைமை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கியில் 34 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் செயலாளர் நாணயக்கார ஒருங்கிணைப்பு சேவைகளுக்கு (மனித வளமுகாமைத்துவம்) பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியில் 26 வருடங்கள் சேவையாற்றிய வங்கிமேற்பார்வை பணிப்பாளர் சில்வா, நிதி முறைமை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராகவும் 18 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் பிரதம பொருளியலாளரும் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளருமான வீரசிங்க பொருளாதார விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.