2009

2009

மடுத்திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு…

கத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆகஸ்ட் மாத திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.  திருவிழாவுக்கு தனியார் வாகனங்களில் வருகின்ற யாத்திரிகர்கள் தமது அடையாள அட்டைகளின் இலக்கங்கள், பெயர் விபரங்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் அடங்கிய பட்டியல் பிரதிகளை எடுத்துவருமாறு ஆலய பரிபாலகர் அறிவித்துள்ளார்.

திருவிழா ஆரம்பதினத்திலிருந்து 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும் யாத்திரிகர்கள் இரவில் மடுவில் தங்கமுடியாது. இந்நாட்களில் மடு றோட் சந்தியில் இருந்து மடு ஆலயத்துக்கு காலை 6 மணிக்கு பின்னர் யாத்திரிகர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நாட்களில் காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் சிறப்புத் திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். ஆயினும் 12 ஆம் திகதி புதன்கிழமை முதல் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மடுவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நாட்களில் வழமைபோல மாலை 6.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும். இம்முறை மடுவுக்கு வருகின்ற யாத்திரிகர்கள் போதுமான அளவு உணவுப்பொருட்கள், விறகு, தண்ணீரை எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் மதுபானம், ஐஸ்கிறீம், விளையாட்டுப்பொருட்கள் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்படக் கூடிய அசௌகரியங்களை நல் மனதுடன் ஏற்று, திருப்பதியில் தங்கியிருக்கும் நாட்களில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுமாறு யாத்திரிகர்களை வினயமாக கேட்டுக்கொள்வதாக மடு பரிபாலகர் தெரிவித்துள்ளார்.

புகையிரத ஆணைச்சீட்டு பதிவுக் காரியாலயத்தை கல்முனையில் அமைக்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள்

train0000.jpgஅம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையாகவுள்ள புகையிரத ஆணைச்சீட்டை பதிவு செய்யும் காரியாலயத்தை கல்முனையில் அமைத்துத் தருமாறு பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீனிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களின் பின்னர் கிழக்க மாகாணத்தில் சுமுகமான நிலைமையொன்று தோன்றியுள்ளதனால் புகையிரதத்தின் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமது பயணத்தை மேற்கொள்வதற்காக ஏனைய புகையிரத நிலையங்களில் நடைமுறையிலுள்ள முன் கூட்டிய ஆசனங்களை பதிவு செய்வதற்காக பொத்துவில்,அக்கரைப்பற்று, நிந்தவூர், அம்பாறை, சம்மாந்துறை மற்றும் கல்முனையைச் சேர்ந்த பயணிகள் மட்டக்களப்பிற்குச் சென்றே ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.மேலும் ஒரு பயணி ஆசனம் ஒன்றை பதிவு செய்வதற்காக 10 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைமுறையிலுள்ளது.இதனால்,திடீரென பயணம் செய்யும் ஒருவரால் இவ்வாறான ஆசனப் பதிவை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான பயணச் சிக்கலிலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பல வருடங்களுக்கு முன் கல்முனையில் இயங்கிவந்த புகையிரத ஆசனத்தை முன் கூட்டியே பதிவு செய்யும் காரியாலயத்தை மீண்டும் இயங்கச் செய்து புகையிரத பயணத்தை சீர்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.

கிழக்கில் வீதிகள் வெறிச்சோட்டம்

sun.jpg‘சூரிய கிரகணம்’ அச்சம் காரணமாக அம்பாறை மாவ ட்டத்திலுள்ள முக்கிய வீதிகளும், பிரதேசங்களும் நேற்று புதன்கிழமை மு.ப. 8.00 மணிவரை வெறிச் சோடிக் காணப்பட்டன.

மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களின் வரவு குறைவ டைந்திருந்ததாகவும், அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகை கணிசமானளவு வீழ்ச்சி கண்டிருந்ததாகவும் அதிபர்களும், அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அதிகமான பாடசாலைகள் மு.ப. 8.00 மணிக்குப் பின்னரே ஆரம்பமாகின. இருந்த போதிலும் அச்சம் காரணமாக அதிகமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நேற்று பாடசாலைக்கு அனுப்பி வைக்கவில்லை. அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் நேரம் பிந்தி சமுகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

அதிகாலை தொழிலாளர்கள் உரிய நேரத்திற்குப் புறப்படாது வீட்டில் முடங்கியிருந்தனர். வர்த்தக நிலையங்களும், வழமையான நேரத்தை விடவும் பிந்தியே திறக்கப்பட்டன.

கடற்கரையை அண்டி வாழும் மக்கள் அச்சம் காரணமாக ஏற்கனவே இடம் பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டப் பள்ளிவாசல் களில் சூரிய கிரகணத் தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன் பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டன.

சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு 25ஆம் திகதி கொழும்பில்

saarc_colombo_2009.jpgசார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.

காலை 9.00 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளதோடு அன்றைய தினம் மாலை சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதன்(கேபி) சனல் 4 தொலைக்காட்சியில்

இன்று 22ம் திகதி மாலை 7மணி (சனல்4) CH4 தொலைக்காட்சியில் புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதனின் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் ஒளி பரப்பப்பட்டது. இதில் தாம் புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், இலங்கை அரசு இன்று வரையில் அரசியல்த்தீர்வு யோசனையில் இல்லை என்பதையும்,
தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்விற்காகவே தான் மீண்டும் இந்த அமைப்பை பொறுப்பேற்றுள்ளதாகவும், தமது 1500 பேர்வரையிலான போராளிகள் இன்னமும் இலங்கைக் காடுகளில் இருப்பதாகவும், புலிகளால் மீண்டும் ஒரு இராணுவ தயார்படுத்தலை செய்ய முடியும் என்பதை மறைமுகமாகவும் தெரிவித்தார்.

இன்றய இந்த தனது வெளிப்படுத்தலின் மூலம் புலிகளின் இருப்பை திரு செல்வராசா பத்மநாதன் நிரூபிக்க முயற்ச்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் புலிகள் இயக்கம் இல்லை. இலங்கையில் தமிழர்கள் முகாம்களில் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக ஆயுதங்களை வாங்கி புலிகளை பலப்படுத்தியவர் இன்று அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராகி தாம் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் என CH4 தொலைக்காட்சி தெரிவித்தது.

ஈ.பி.டி.பி.யுடன் தமிழ் மக்கள் அணி திரண்டால் ஒளிமயமான எதிர்காலத்தை விரைவில் பெற முடியும் – தேவானந்தா

Douglas Devananda“13 ஆவது அரசியல் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மேலதிக அதிகாரங்களை வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு ஏற்றுக்கொண்டு சர்வதேச சமூகத்திற்கும் எமது மக்களுக்கும் இதனை அறிவித்துள்ளார். அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்களுடைய அரசியல் அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக இந்த நகரசபைத் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் அரசுடன் பேரம் பேசக்கூடிய அளவிற்கு சக்தி கொண்டவர்களாக வரமுடியும்’ என்று சமூகசேவைகள் சமூக நலத்துறை அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் ஈ.பி.டி.பி.யின் ஆறு வேட்பாளர்களையும் ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு செல்வராசா சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

அமைச்சர் தொடர்ந்தும் இங்கு பேசுகையில் குறிப்பிட்டதாவது;  “ஜனாதிபதித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார்.  தமிழ் மக்களாகிய நாங்கள் பெருமளவு வாக்குகளை அவருக்கு வழங்குவதன் மூலம் அந்த உறுதி வெளிப்படுத்துவதன் ஊடாக எமது எதிர்கால அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஆயுதப் போராட்டத்திற்குரிய தேவை ஒரு கால கட்டத்தில் இருந்தது. அந்தப் போராட்டத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்றதொன்றை பெற்றிருந்தோம். அதனை நாம் சரிவரப்பயன்படுத்தவில்லை. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அதற்குப் பிறகும் பல வாய்ப்புகள் எமக்குக் கிடைத்திருந்தது. அதனையும் தமிழ்ச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் ஜனநாயக வழியூடாக வந்த தலைவர்களும் சரி அல்லது ஆயுதப் போராட்டத்தின் ஊடாக வந்த தலைவர்களும் சரி அதனை சரிவரப் பயன்படுத்தவில்லை.  மீண்டும் ஒரு சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்த வேண்டும். எமது மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளது. வீதிகள், குடிநீர்ப் பிரச்சினை, மின்சாரம், தடைகளற்ற போக்குவரத்து அவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளது. இதனை தீர்ப்பதற்காக திட்டங்களும் அதற்கான வலுவும் எங்களிடம் உள்ளது.

எங்களுக்கு தேவை மக்களுடைய ஆதரவு, பக்கபலம். இவை எங்களிடம் இருக்குமாக இருந்தால் நாங்கள் கடந்த 20 வருட தேவையற்ற யுத்தத்தில் அழிந்துபோன பிரதேசங்களை வரும் இரண்டு ஆண்டுகளில் கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்ய முடியும். எங்களோடு அணிதிரண்டு வந்தால் ஒரு விரைவான ஒளிமயமான எதிர்காலத்தை நாம் காண முடியும்’ என்றார்.

காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை

galle-district.jpgகாலி மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த செனவிரத்ன இன்று காலை பெலிகஹா சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  தமது பிள்ளைகளுக்கு காலை உணவை கடையொன்றில் வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை விட்டு இறங்கிய போது துப்பாக்கிதாரிகள் கழுத்து பகுதியில் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை

canada_flag.gifகனடாவில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கனடாவின் ஸ்கார்புறோ வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டெய்ஸி மார்ட் என்னும் கடைத் தொகுதிக்கு அருகாமையில் வைத்து நேற்று நள்ளிரவு 20 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறான மிலேச்சத் தனமான படுகொலைகள் தடுக்கப்பட வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். இன்னுமொரு இளைஞரை பரிதாபமாக பலிகொடுக்க நாங்கள் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990 மற்றும் 2000மாம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர் வன்முறைகள் அதிகமாகக் காணப்பட்டதாகவும் பின்னர் அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறைகளைத் தடுத்து நிறுத்த விசேட செயற் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் எவரும் படுகொலை செய்யப்படக் கூடிய சூழ்நிலை காணப்படவில்லை எனவும், உலகின் மிகவும் அமைதியான சூழ்நிலை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து கனடாவில் குடியேறியுள்ள சகல தமிழ் பெற்றோர்களும் தங்களது பிள்ளைச் செல்வங்களின் நலன் கருதியே இங்கு வந்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளியிடங்களுக்குச் செல்வதற்கானவாகன அனுமதி நடைமுறை கிழக்கில் நீக்கம்

images.jpgமட்டக் களப்பு ,மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்காக இதுவரை காலமும் அமுலிலிருந்த வாகன அனுமதி நடைமுறை (பாஸ்) இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு பாதுகாப்பு அமைச்சு வழங்கியதையடுத்து கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு உட்பட தென்பகுதிக்கு வாகனங்களில் வெடிப் பொருட்களும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்தே வாகன பாஸ் நடை முறை 2006 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது.  இதற்கென தெரிவு செய்யபடப்ட பொலிஸ் சோதனை மையங்களில் வாகனங்கள் புறப்படும் தினத்தில் சோதனையிடப்பட்டு பயணிகள் உட்பட சகல விபரங்களும் பதிவு செய்யப்பட்டு 3 பிரதிகளை உள்ளடக்கிய பாஸ் வழங்கப்பட்டு வந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புறப்படும் பயணிகள் 3 பிரதிகளில் ஓட்டமாவடி பாலம் பொலிஸ் சோதனைச் சாவடியில் முதலாவது பிரதியையும் இரண்டாவது பிரதியை மாவட்ட முடிவில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வழங்குவதோடு மூன்றாவது பிரதியை பயணம் முடியும் வரை வைத்திருக்க வேண்டும்

தற்போது இந் நடைமுறை நீக்கப்பட்டதையடுத்து இம் மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்கான வாகனப் பயணங்களுக்கு பாஸ் அனுமதி பெற வேண்டிய தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் இனிமேல் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிப் பத்திரங்களைப் பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – யாழ் விமான சேவை திங்களன்று ஆரம்பம்! வாரமொன்றுக்கு மூன்று சேவைகள்

flight_domestic.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்தக்கான  விமான சேவை அடுத்த திங்கள் முதல் நடத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது. வாரமொன்றுக்கு மூன்று சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு நடத்தப்படும் என்றும் திங்கள்,  புதன்,  மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலேயே இச்சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவழிப் பாதைக்குமான கட்டணம் 19 ஆயிரத்து 100 ரூபாவாகும்.

இதேவேளை, கொழும்பிலிருந்து சீகிரியவுக்கு வாரமொருமுறை ஒரு சேவை நடத்தப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கொழும்பிலிருந்து சீகிரியவுக்குச் செல்லும் விமானம் அன்றைய தினமே கொழும்பை வந்தடையும் இதற்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாவெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.