24

24

இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை : காங்கிரஸ்

pm-india.jpgபிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்துவரும் பதவிக்கு வேறு ஒருவர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு எந்த அவசியமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக நடந்தேறியுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் வீரப்ப மொய்லி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் பொறுப்புகளைக் கவனிக்க பிரணாப் முகர்ஜி செயல் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மொய்லி ,இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றார்.

பிரதமர் நாட்டில் இல்லாதபோது அவருடைய பொறுப்புகளை மூத்த அமைச்சர் கவனிப்பதுதான் மரபாக உள்ளது.பிரதமர் முழு உடல் நலம் பெற்று இரண்டு வாரத்தில் பணிக்குத் திரும்புவார் என்று மொய்லி மேலும் தெரிவித்தார். 

புலிகள் ஏற்படத்திய மினி சுனாமி! கல்மடு குளக்கட்டு குண்டு வைத்து தகர்ப்பு! இழப்புகள் வெளிவரவில்லை!!!

vanni-kalmadu.jpgதற்போதைய யுத்தத்தின் முன்னரங்க நிலையாக இருந்த விஸ்வமடு பகுதியில் உள்ள கல்மடு குளக்கட்டு இன்று (ஜனவரி 24) காலை குண்டு வைத்து தகர்க்ப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலால் குளக்கட்டு உடைக்கப்பட்டு விஸ்வமடு, தர்மபுரம், இராமநாதபுரம் பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது. ஏ35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் கல்மடு நெத்தலியாறு பகுதிகளில் நேற்று முதல் (ஜனவரி 23) விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் பாரிய மோதல் நடைபெற்று வந்தது. அதன் ஒரு கட்டமாக இராணுவ முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கல்மடுக் குளக்கட்டை குண்டு வைத்து தகர்த்து உள்ளனர்.

பாரிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டுடைத்து பாய்ந்த வெள்ளத்தால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டதாகவும் இராணுவத்தினருக்கெ இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மினி சுனாமியில் இடம்பெயராத தமிழ் மக்களும் அகப்பட்டுக் கொண்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள மனிதாபிமானமற்ற செயல் இதுவென்றும் அவர்கள் உயிர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையும் வழங்கவில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

விடுதலைப் புலிகள் இத்தாக்குதல் பற்றி உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு – டக்ளஸ் தேவானந்தா

epdp.jpgபுலித் தலைமையைக் காரணம் காட்டித் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்தாமல் இருந்து விட வேண்டாம் எனச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளதாகவும், நெருக்கமான நட்புறவு கொண்ட நாடாகவே தமிழ் பேசும் மக்கள் இந்தியாவை எண்ணியிருந்த போதிலும், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் இந்தியாவின் உறவுகளையும், வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுற எடுத்துக் கூறினார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான இந்தியத் தூதரகம் விடுத்திருந்த வேண்டுகோளைத் தன்னால் நிறைவேற்ற இயலாமற் போனமை தொடர்பாகத் தமது கவலையைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.குடா நாட்டு மக்களின் ஏகோபித்த வேண்டுகோளின் பேரில் தான் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதாகவும், மக்களுக்குரிய தேவைகள் மிக அதிகமாக இருப்பதால் அங்கிருந்து உடனடியாகக் கொழும்பு வர இயலாமல் இருப்பதை உணர்த்திய அவர்,  தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு என்பதைத் தான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளதாகவும், இந்தக் கருத்து தற்போது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நன்கு உணரப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்திற் கொண்டு புலித் தலைமை பலமிழந்து வரும் இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பாக இந்தியா அக்கறை செலுத்தாது இருந்து விடக் கூடாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதற்கு இந்திய அரசாங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, தமிழ் பேசும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்தியா உதவ முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஊழல், மோசடி நிறைந்த இடமாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை – அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

arjuna-ranatunga.jpgஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மிக மோசமான ஊழல், மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டதாக அரச தரப்பு எம்.பி. அர்ஜுன ரணதுங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க, விளையாட்டு அமைச்சர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அர்ஜுன ரணதுங்க மேலும் கூறியதாவது;

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளேன். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மிக மோசமான ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டது. நல்லவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். மோசடிக்காரர்கள் தான் தற்போது அங்குள்ளனர். இதனால், விளையாட்டுத்துறை சீரழிக்கப்படுகின்றது. எனவே தான் நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியேற்பட்டது. எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு நீதிமன்றத்தையே நான் நாட வேண்டியிருந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் பொது நிலைப்பாடு

president.jpgபரந்துபட்ட அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் இலங்கையும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடானது பேச்சுவார்த்தைக்கு இடமற்றது என்ற அமெரிக்க அரசின் தலையாய நிலைப்பாட்டை இலங்கை மக்களும் அரசாங்கமும் மிகவும் பாராட்டுகின்றன.

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதன் ஊடாகவும் இலங்கையில் சமாதானத்தை வென்றெடுக்க அமெரிக்கா ஆற்றிவரும் பங்களிப்பானது எம்மை கவர்ந்துள்ளதுடன் நன்றிக்கும் உரிய தோன்றாகும்.

ஜனாதிபதி பதவிக் காலத்தை வெற்றியுடன் நிறைவேற்ற எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் வாழ்த்துகிறேன். அத்துடன் தங்கள் பதவிக்காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் நெருக்கமடையுமென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். உலக சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் தங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிவது மகிழ்ச்சியானதாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

ஐ. நா. சபைக்கான தூதராக ரைஸ் நியமனம்: செனட் ஒப்புதல்

ஐ. நா. சபைக்கான அமெரிக்க தூதராக சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் அமெரிக்க கிளின்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறையில் அமெரிக்க விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இருந்தவர் சூசன் ரைஸ். இவரை ஐ.நா.வுக்கான தூதராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவியில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். போக்குவரத்து அமைச் சராக ரே லாகுத் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக ஷான் டோனோவன் ஆகியோரது நியமனத்திற்கும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

யசூசி அகாசி திருகோணமலைக்கு விஜயம்

yasusi.jpgஇலங் கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி திருகோணமலைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பிலிருந்து விசேட விமானமொன்றில் திருகோணமலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரையும் சந்திக்கும் யசூசி அகாசி பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்த ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகப் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பைபாஸ் ஆபரேஷன் வெற்றி – நலமாக இருக்கிறார் இந்திய பிரதமர்

pm-india.jpgஇதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு இன்று காலை ஏழே கால் மணிக்கு அறுவைச் சிகிச்சையை தொடங்கியது. தொடர்ந்து நடந்து வந்த அறுவைச் சிகிச்சை மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.

முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அடுத்து அதேபோல இரண்டு நடைமுறைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை ஆசிய இருதவியல் கழக டாக்டர் சுதிர் வைஷ்ணவ் தெரிவித்தார். முதல் அறுவைச் சிகிச்சைக்குத்தான் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது.

உலகில் எங்குமில்லாத சர்வாதிகார ஆட்சி இலங்கையில் – பாராளுமன்றத்தில் என் ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஉலக நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சியை விடவும் பயங்கரமான கொடுங்கோல் ஆட்சி தற்போது இலங்கையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகவும் விசனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகாரசபை தொடர்பான திருத்தச்சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறியதாவது;

வன்னியில் மிகப் பாரியளவில் இடம்பெற்று வரும் விமானக்குண்டுவீச்சு , ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் தினமும் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. வன்னியில் பொதுமக்களுக்கு அரச படைகளால் ஏற்படுத்தப்படும் உயிரழிவுகள் தொடர்பில் எம்மிடம் தேவையான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 3 தினங்களில் மட்டும் வன்னியில் இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சு, ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் 55 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 230 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 மாதக் குழந்தையும் சிறுவர்களும் கூட இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதுவொரு பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினை. போரில் சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்படுவது இலங்கை அரசைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணதொரு நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.

வன்னியில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலைகள், மக்களின் அவலங்கள் தமிழ் ஊடகங்களில் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஊடக சுதந்திரம் பற்றிப் பெரிதாக பேசிக்கொள்ளும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வன்னி மக்களின் உயிரழிவுகளை, அவர்களின் அவலங்களைத் திட்டமிட்டு இருட்டடிப்பிச் செய்கின்றன. தம்மைப் பெரிய ஊடகவியலாளர்களாக காட்டிக்கொள்பவர்கள் கூட இந்த அப்பாவித் தமிழ் மக்களின் மனிதாபிமான அவலங்களை வெளிக்கொண்டுவர விருப்பமின்றியுள்ளனர். இதுதான் தென்னிலங்கை ஆங்கில,சிங்கள ஊடகங்களின் நிலை.

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல்களை இந்த அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வன்னியில் அரச படைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டு கொன்றொழிக்கப்படுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை 115 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 410 பேர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர்.தமிழின அழிப்பை இந்த அரசு பகிரங்கமாகச் செய்து வருகின்றது.

இலங்கையில் இடம்பெறும் தமிழினப் படுகொலை தொடர்பாக தமிழகத்திலுள்ள 7 கோடித் தமிழ் மக்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். அங்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் போராட்டங்கள் உத்வேகம் பெற்று வருகின்றன. வன்னியில் மக்கள் வேட்டையாடப்படுவதை இனியும் தமிழினம் சலித்துக் கொள்ளாது. இலங்கைத் தமிழர் தொடர்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. இந்திய மத்திய அரசு நினைத்திருந்தால் இலங்கையில் போர்நிறுத்தத்தை கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், போர்நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதில் அது ஆர்வம் காட்டவில்லை. தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.

இந்திய மத்திய அரசின் இந்த இரட்டைவேடப் போக்கை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழின விரோதப் போக்கு குறித்து விசனமடைகின்றோம். தமிழினப் படுகொலையை வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் விரக்தியும் விசனமும் அடைந்துள்ளனர். இப்போது கூட போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இந்திய மத்திய அரசுக்கு உள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாகவும் ஜெனீவா உடன்படிக்கைக்கு விரோதமாகவும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு இலங்கை அரசு படைகள் வேட்டு வைப்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது சர்வதேச நாடுகள் தமது கண்களைத் திறந்து பார்த்து அழிவடைந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக் கோருகின்றோம். இலங்கை அரசிடமும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கேட்கின்றோம். போரில் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இலங்கையை தற்போது மனித உரிமைகள் தொடர்பாக கிஞ்சித்தும் கவலைப்படாத கொலை வெறிபிடித்த அரசாங்கமே ஆட்சிபுரிகின்றது. இதுவொரு கொலைகார அரசாங்கம். உலகில் நாம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கின்றோம். ஹிட்லர், பொக்காசோ போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியை விடவும் மிகவும் மோசமான கொடுங்கோல் ஆட்சியே தற்போது இலங்கையில் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் அநியாயங்கள் , அட்டூழியங்கள் , இனப்படுகொலையைப் போல் நாம் எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மக்கள் இந்த அரசின் முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள்.

அரசியல் தீர்வு என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. பேச்சுக்குமுன் யுத்த நிறுத்தம் அவசியம். அதன் பின் நிபந்தனையற்ற பேச்சு என்பதிலும் நாங்கள் உறுதியான நிலையில் உள்ளோம். இதனை பல தடவைகள் அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. இலங்கை அரசுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், எமக்குள்ள ஒரே நிகழ்ச்சி நிரல் போர் நிறுத்தம் ஒன்று மட்டுமே.

விடுதலைப் புலிகளிடமிருந்து நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என்று அரசு கூறி வருகின்றது. இது வெறும் பகல் கனவு. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டதாக கூறிய அரசுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியும். கிளிநொச்சியை பிடித்து விட்டோம். புலிகளை காட்டுக்குள் விரட்டி விட்டோம். விரைவில் அவர்களை கடலுக்குள் தள்ளி விடுவோம் என அரசு கூறி வருகின்றது. இப்படிக் கூறுபவர்கள் அறிவிலிகளாகவே இருப்பார்கள். விடுதலைப் புலிகளை எந்த சக்தியாலும் தோற்கடித்து விட முடியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக 25 வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் அமைப்பொன்றை அவ்வளவு எளிதில் எவராலும் அழிக்கவோ வெற்றி பெறவோ முடியாது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கின்ற அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்திய அரசால் ஏமாற்ற முடியாது. இவர்கள் மட்டுமென்ன வேறு எந்த அரசினால் கூட ஏமாற்ற முடியாது. இதனை இந்திய அரசு புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் 75 வீதமானோர் இந்துக்கள். நாம் மதத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பிரசாரத்தில் இறங்கினோம் என்றால் அங்கு நிலைமை எவ்வாறு மாற்றமடையும் என்பதை இந்திய அரசு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் தமிழினப் படுகொலை இடம்பெற்று வருகையில் வன்னியில் தினமும் மக்கள் செத்து மடிகையில் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அக்கறைப்படாத இடமாகக் காணப்படும் இந்த சபையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா?. நாம் இச் சபையில் தொடர்ந்தும் இருப்பது நியாயமாவென எம்மை எமது மனச்சாட்சி கேட்கத் தொடங்கி விட்டது. எனவே, நாம் மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் தமிழினப் படுகொலைகளை நிறுத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி பேச்சு மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என கேட்கின்றோம்.

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்

flag_uk.jpg
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் மாவட்ட மறைமாவட்ட ஆயர், மாவட்ட அரச அதிபர் உட்பட உயரதிகாரிகளையும் சந்தித்து அங்குள்ள தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அவர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.