இதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு இன்று காலை ஏழே கால் மணிக்கு அறுவைச் சிகிச்சையை தொடங்கியது. தொடர்ந்து நடந்து வந்த அறுவைச் சிகிச்சை மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.
முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அடுத்து அதேபோல இரண்டு நடைமுறைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை ஆசிய இருதவியல் கழக டாக்டர் சுதிர் வைஷ்ணவ் தெரிவித்தார். முதல் அறுவைச் சிகிச்சைக்குத்தான் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது.