புலித் தலைமையைக் காரணம் காட்டித் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்தாமல் இருந்து விட வேண்டாம் எனச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளதாகவும், நெருக்கமான நட்புறவு கொண்ட நாடாகவே தமிழ் பேசும் மக்கள் இந்தியாவை எண்ணியிருந்த போதிலும், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் இந்தியாவின் உறவுகளையும், வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுற எடுத்துக் கூறினார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான இந்தியத் தூதரகம் விடுத்திருந்த வேண்டுகோளைத் தன்னால் நிறைவேற்ற இயலாமற் போனமை தொடர்பாகத் தமது கவலையைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.குடா நாட்டு மக்களின் ஏகோபித்த வேண்டுகோளின் பேரில் தான் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதாகவும், மக்களுக்குரிய தேவைகள் மிக அதிகமாக இருப்பதால் அங்கிருந்து உடனடியாகக் கொழும்பு வர இயலாமல் இருப்பதை உணர்த்திய அவர், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு என்பதைத் தான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளதாகவும், இந்தக் கருத்து தற்போது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நன்கு உணரப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்திற் கொண்டு புலித் தலைமை பலமிழந்து வரும் இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பாக இந்தியா அக்கறை செலுத்தாது இருந்து விடக் கூடாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதற்கு இந்திய அரசாங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, தமிழ் பேசும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்தியா உதவ முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
indiani
நாங்களும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் என்ன அரசியல்த் தீர்வை கொண்டு வருவீர்கள் என்று – புலிகளின் அழிவில் மகிந்தா உங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது எமக்கு வெள்ளிடை மலை.
palli
உன்மைதான் நல்லாய் சொன்னீங்க. ஆனால் உங்க நினைப்பும் வேறாகதான் இருப்பதாக மக்கள் பேசிக்கிறார்கள். உங்க நிர்வாகத்தில் அமைப்பினர் உள்ளனரா?? அல்லது பொது மக்கள் (கல்விமான்கள்) உள்ளனரா??? இதையும் தோழர் கவனத்தில் எடுக்கலாமே.
பல்லி.
msri
குடாநாட்டு மக்களின் ஏகோபித்த வேண்டுகோளின்பேரில் டக்ளசு யாழப்பாணத்தில் தங்கியிருக்கிறாராம்! > குடாநாட்டு மக்கள் எப்ப இந்த வேண்டுகோள் விட்டவர்கள்? இது யாருக்கு காதிலை பூ வைக்கிறார்! அவருடைய கொள்கை பரப்பும் பத்திரிகையை ராணுவம்தான் யாழ்ப்பாணத்தில் லிற்பனை செய்கின்றது! இந்த லட்சணத்திலை அவருக்கொரு ஏகோபித்த வேண்டுகோள்!
xxd
சரியாகச் சொன்னீர். இதேவேளையில் புலியெதிர்ப்பாளர்களாகிய உங்களின் பிரச்சனை என்பது வேறு தமிழ் மக்களின் பிரச்சனை வேறு என்பதையும் நீங்களும் மனதில் கொள்ள வேண்டும். வர்க்கப் புரட்சிபேசும் போது அங்கு மக்களுக்கான தேவையைக் கொண்ட தாக இலக்குகள் அமைந்திருந்தது. ஒடுக்கும் அரச இயந்திரத்தில் அங்கமாக இருக்கின்ற போது அங்கு சுரண்டும் இயந்திரத்தின் ஒரு நீங்களும் ஒரு அங்கமே. ஆக உங்கள் பிரச்சனை என்பது வேறு.