30

30

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

redcrose2801.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்து நோயாளர்களில் ஒரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (29) இவர்களை மீட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின அமைப்பின் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துளளார்.

விடுதலைப் புலிகளுடனும் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து குறித்த இந்த 226 நோயாளர்களையும் போர் தணிந்திருந்த சிறிய இடைநேரத்தில்  அழைத்துவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீட்கப்பட்ட நோயாளர்களில் 50 சிறுவர்கள் அடங்கியுள்ளதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நோயாளர்களை அழைத்துவருவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் பல தடவைகள் மேற்கொண்டிருந்த போதிலும் அது கைகூடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலைய அலுவலகத்தை சுற்றிவளைத்த மாணவர்கள் கைது

சென்னை உயர் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவேளையில் இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்; இன்று முற்பகல் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை; சுற்றி வளைக்க முற்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள பிரதி உயர் ஸ்தானிகர் பி.எம். ஹம்சா தெரிவித்தார். இதனையடுத்து 35 மாணவர்களை பொலிசார் கைதுசெய்ததாக பிரதி உயர் ஸதானிகர் குறிப்பிட்டார்.

அத்துடன் சென்னையில் அமைந்திருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநில அதிகாரிகள் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது குறித்து தமிழ் நாடு மாநில பொலிஸ்மா அதிபருடன் தாம்; இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் ஹம்சா மேலும் தெரிவித்தார்.

முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

muthukumar-30011.jpgமுத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

anbhazagan.jpgஇலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது. புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.

16,000மில். ரூபாவை பெற்றுக் கொள்ள பாராளுமன்றில் குறைநிரப்பு பிரேரணை

yappa.jpg16,000 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆலோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தின் துரிதமான வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் அவசியத்தை கருத்திற் கொண்டு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளவும், சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக 16,000 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையூடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக ஏற்றுமதிக் கைத்தொழில், உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், விவசாய உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதி வழங்கப்படவுள்ளது. மேற்படி துறைகளின் உற்பத்திச் செலவினை குறைப்பதன் ஊடாக போட்டித் தன்மையை அபிவிருத்தி செய்தல், ஏற்றுமதி வருமானம் மேற்படி துறைகளின் பாதுகாப்புத் தன்மையை பலப்படுத்துதல், போன்றவற்றை உள்ளடக்கியதாக பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தையில் தேயிலையின் விலையை உறுதிப் படுத்துவதற்காக இலங்கைத் தேயிலைச் சபையின் மதிப்பீட்டின் கீழ் அரச நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தலுக்கும் ஏல விற்பனையில் தேயிலையின் விலையை கிலோ ஒன்றுக்கு 300 ரூபா வரை தக்க வைத்தலுக்குமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை தேயிலைச் சபைக்கு 1500 மில்லியன் ரூபாவை வழங்கவும். தேயிலை கைத்தொழில் தொழிற் சபைகளுக்கு ஒரு மாதத்திற்கான தொழில் மூலதனத்தினை சலுகை அடிப்படையிலான வட்டி விகிதாசாரம் ஒன்றின் கீழ் வழங்குவதற்காக நிதி திட்டமிடல் அமைச்சு, அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.

50 கிலோ எடைகொண்ட தேயிலைக்கான கலப்பு உரம் 1000 ரூபாவுக்கு வழங்குவதற்காக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சுக்கு 2500 மில்லியன் ரூபாவும், பஸ் வண்டிகள், டிரக் வண்டிகளுக்கு அவசியமான டயர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு 200 மில்லியன் ரூபாவும் இறப்பருக்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்துக்கு கடன் வழங்குவதற்காக மேற்படி அதே அமைச்சுக்கு 450 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.

கறுவாவிற்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்துக்காக நிதி திட்டமிடல் அமைச்சு அபிவிருத்தி நிதித் திணைக்களம் என்பவற்றுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்படும். 2008ம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் ஊழியர்க ளின் எண்ணிக்கை மற்றும் அத்துறைகளுடன் தொடர்பான பொருத்தமான பெறுமதிச் சேர்ப்பை பேணும் ஏற்றுமதியாளர்களுக்கு 5 சதவீத ஏற்றுமதி ஊக்குவிப்பை வழங்குவதற் காக 8000 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக் கப்படும்.

தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை பேணும் சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்துள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் மற்றும் கடனை மறு சீரமைத்தலுக்காக 200 மில்லியன் ரூபாவும் அரசினால் வழங்கப்படும் ஏனைய மானியங்களுக்காக நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 3000 மில்லியன் ரூபாவும் வழங்குவதற்கான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

தமிழகத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயம்

tamilar-phathukappu.jpgஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணத்தால் எந்தவொரு பயனும் இலங்கைத் தமிழர் தொடர்பாக ஏற்படவில்லையென அதிருப்தியடைந்திருக்கும் தமிழகக் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்து வரும் நிலையில், “தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க.பெப்ரவரி 3இல் செயற் குழுவை கூட்டி முக்கிய தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா புலிகளின் ஆதரவைத் தவிர இலங்கைத் தமிழர் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தனது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென தனது கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புதன்கிழமை உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக இரவு ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவுநர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயமாகியுள்ளது. உடனடியாகவே (இன்று) வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் மௌனவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதையடுத்து இப்பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியுமே தினமும் போராட்டம் என்று அறிவித்து சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன

ஈராக்கில் 440 மாகாண ஆசனங்களை தெரிவு செய்யும் முக்கிய தேர்தல் நாளை

iraq-elections.jpgஈராக்கில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்துவதன் மூலம் ஈராக் அரசும் இராணுவமும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளதை உலகுக்கு எடுத்துக்காட்டவுள்ளது.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் வாக்களிப்பில் பங்கேற்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள், வைத்தியசாலைகளில் உள்ளோர் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் இவர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்தனர். வைத்தியசாலைகளிலுள்ளோர், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறைக்கைதிகள் ஆகியோரிடம் வாக்குச் சீட்டுகள் அவர்களது காலடிக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரமான ஈராக்கைத் தெரிவு செய்யவும் பங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவும் நாங்கள் வாக்களித்ததாக அவர்கள் கூறினர்.

பின்னர் வாக்குப் பெட் டிகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட் டன. இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடை பெறவுள்ளது. ஈராக்கில் மொத்தமாகவுள்ள 18 மாகாணங்களில் 14 மாகாணங்களுக்கு நாளை தேர்தல் இடம்பெறுகிறது. இதுவரை ஆபத்தான தாக்குதல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஈராக் அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். வீதியோரக் குண்டுத் தாக்குதல்களைத் தவிர்க்க பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான நிலலயங்களும் இன்றும், நாளையும் மூடப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் தலைமையிலான ஷியா அரசுக்குச் சவாலாக உள்ள ஈராக் கெளன்ஸில் குர்தீஷ்க ளைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சுயாட்சியை வட ஈராக்கில் கோருகின்றது.

ஈரான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஈராக் கொன் ஸிலின் இக் கோரிக்கையை அமெரிக்காவும், ஈராக்கும் நிராகரித்துள்ளன. மாகாண ரதியான அதிகாரங்களைக் கைப்பற்றுவதனூடாக தங்களது இன அடையாளங்களை ஓங்கச் செய்ய ஷியா, சுன்னி, குர்தீஷ் இனங்கள் கடும் பிரயத்தனங்களில் இறங்கியுள்ளன. ஈராக்கில் தற்போதுள்ள மத்திய அரசு ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஈராக்கில் நடைபெறும் 14 மாகாணங்களுக்கான தேர்தல்களில் மொத்தம் 14 ஆயிரத்து நானூறு வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூவாயிரத்து தொளாயிரம் பேர் பெண்களாவர். 440 மாகா ண சபை ஆசனங்களுக்கு இத் தேர்தல் நடைபெறு கின்றது. ஈராக் அரசின் நாகரிக சர்வாதிகாரம் இது வென இஸ்லாமிய அமைப்பு விமர்சனம் செய்துள்ளது

வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்

Jan31_London_Protestவன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.

குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.

இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.

ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.

போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே  ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.

புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.

யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.

நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.

இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.

.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:

STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
      MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009

in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)

இராணுவம் கூறும் “டபிள் கப்’ எமக்குச் சொந்தமானதல்ல

unicef_2301.jpgவிடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதாகக் கூறும், “டொயோட்டா டபிள் கப்’ வாகனம் தமக்கு சொந்தமானதல்ல என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்த வாகனம், யுனிசெப்புக்குச் சொந்தமானதென இராணுவம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளதாகவும் யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான டபிள் கப்வாகனம் எதனையும் யுனிசெப் தனது நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை. ஆயினும், கடந்த காலங்களில் அரச நிறுவனங்களான சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை, சமூக சேவைகள் நலன்புரி அமைச்சு என்பனவற்றுக்கு பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இந்த வாகனங்களை தாம் வழங்கியிருந்ததாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்கவென அரச நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடுமெனவும் அதற்காக தாம் மிகவும் வருத்தமடைவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.