தமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசித் தளமான முல்லைத்தீவு நகருக்குள் இன்று (ஜன:25) பிற்பகல் பிரிகேடிய நந்தன உடவத்த தலைமையிலான 59வது டிவிசன் படைப்பிரிவினர் உட்புகுந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நந்திக்கடல் ஏரி ஊடாக திடீர் தாக்குதல் நடத்திய 593வது பிரிகேட் படைப்பிரிவின் 7வது கெமுனு படைப்பிரிவினரே முல்லைத்தீவு நகருக்குள் உட்புகுந்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு நகரம் நந்திக்கடல் ஏரிக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நிலத்தொடராகும். 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமை கைபற்றி இதை அவர்களின் பிரதான தளமாக பாவித்து வந்தனர்.
1996ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவைக் கைப்பற்றியுள்ளது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் படையினரின் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் இப்பகுதியை விடுவித்துள்ளதாக அறிவிக்கப்படும் என களவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை
இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி (sri lanka time -6.40 PM) விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவு நகர் சிறிலங்கா படையினரால் இன்று கைப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் நேற்று முல்லைத்தீவு நகரை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார். 13 வருடங்களுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகரை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். இந்தச் செய்தியை தொலைக்காட்சிகள் ஊடாக நேற்று மாலை அவர் தெரிவித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:- மிக நீண்ட காலமாக சகலரும் எதிர்பார்த்திருந்த பாரிய வெற்றி தொடர்பாக மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை இராணுவம், தீவிரவாதிகளின் பலமான கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவு நகரை கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று (25) கைப்பற்றியுள்ளனர்.
இந்த வெற்றி தொடர்பாக இராணுவத் தளபதி என்ற வகையில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். பூநகரி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம் என்ற முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் முல்லைத்தீவு அமைந்துள்ளது.
முல்லைத்தீவிலுள்ள காட்டுப்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் கைப்பற்றி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்தனர். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து விடுவிக்கும் படை நடவடிக்கைகளை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் ஆரம்பித்தனர். ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் 40 கிலோ மீற்றர் பரப்பைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக நாங்கள் பெருமை அடைகின்றோம்.
புலிகள் தற்பொழுது 25 கிலோ மீற்றர் நீளமும் 15 கிலோ மீற்றர் அகலமும் பரப்பைக் கொண்ட மிகச் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தையும் வென்றெடுத்து புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ள ஒன்றரை இலட்சம் மக்களை காப்பாற்றுவேன் என்று உத்தரவாதம் வழங்குகின்றேன்.
இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினதும் சரியானதும், சிறப்பானதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே பிரதான காரணமாகும். அதேபோன்று இந்த நடவடிக்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரர்களையும் எமக்கு இந்த சந்தர்ப்பத்தில் மறக்க முடியாது.
முல்லைத்தீவை விடுவிப்பதற்கான ஒருவருட கால படை நடவடிக்கைகளில் தாய் நாட்டுக்காக தனது உயிர் நீத்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடனும், கெளரவத்துடனும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். அதேசமயம் எமது இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான இறுதிக் கட்டத்தில் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கி படை முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய விமானப் படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆரம்பத்திலிருந்து எமக்கு மக்கள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பும் மக்களது பிரார்த்தனைகளும் இந்த வெற்றிகளுக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் 2 வருட காலத்திற்குள் 80 ஆயிரம் வரையான இளைஞர்கள் படையில் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டிலுள்ள சகல இளைஞர்களும் இன்னும் முன்வர வேண்டும் என்றும் இறுதி நடவடிக்கைகளில் இராணுவத்தில் இணையுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.
முல்லைத்தீவைக் கைப்பற்றியமை தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டதாவது:-
இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள இராணுவத்தின் 59வது படைப்பிரிவின் கட்ட ளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமை யிலான படையினர் தற்பொழுது முல்லைத்தீவு நகரு க்குள் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி பிரதேசத்தை பாதுகாப்புப் படையினர் கடந்த 2ம் திகதி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றி 23 நாட் களில் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியமை படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும்.
593 படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜயந்த குணரத்ன தலைமையிலான படையினர் நந்திகண்டல் ஏரியை ஊடறுத்து திடீர் தாக்குதல்களை நடத்தயுள்ளனர். புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களை வெற்றிகர மாக முறியடித்துக் கொண்டு 7வது கெமுனு படைய ணியின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த லமாஹேவா தலைமையிலான படையினர் நகரை நேற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விசுவமடு நகரை நேற்று முன்தினம் கைப்பற்றிய 58வது படைப்பிரிவினர் அங்கிருந்து தொடர்ந்தும் முன்னேறுவதற்கான நடவடிக்கை களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். முல்லைத்தீவை கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் படையினரின் நடவடிக்கைகளுக்கு விமானப் படை விமானங்கள் நேற்றும் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.