கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் பெரும் அவலத்திற்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களின் துயர்துடைக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வன்னி நிலப்பரப்பில் பயங்கரவாதத்திற்கெதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தம் காரணமாக பயங்கரவாதம் ஒழிக்கப்படுகின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதில் இலங்கைப் பிரஜை ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதம் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டும்.
இதேவேளை, பயங்கரவாத அழிப்பு என்னும் பெயரில் கொழும்பில் ஊடகத்துறை திட்டமிட்டு அளிக்கப்படுவதும், மட்டக்களப்பில் கடத்திக் கொலை செய்யப்படுவதும், குண்டுவைத்து அப்பாவி மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், வன்னி நிலப்பரப்பில் ஷெல் தாக்குதல் காரணமாக மக்கள் இடம்பெயர்வு, தங்குமிடமின்றிப் பரிதவித்தல் , பட்டினிச்சாவு, குழந்தை தொடக்கம் முதியோர் வரை ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணிப்பதும் அங்கவீனமாக்கப்படுவதும் , கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருளாதாரம் அளிக்கப்படுவதும் , கல்வி முற்றாகப்பாதிப்படைந்து மாணவர்கள் பரீட்சை எழுதமுடியாத நிலை தோற்றுவிக்கப்படுவதும், ஒட்டுமொத்தமாக தமிழின அழிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.
இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களை சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் , பயங்கரவாதச் செயலெனக் கூறுவார்கள். இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் எமது அரசும் பயங்கரவாதச் செயலில் இறங்கியுள்ளதா? தமிழினச் சுத்திகரிப்பில் இறங்கியுள்ளதா? எனும் சந்தேகம் சகல சக்திகளுக்கும் தோன்றி உள்ளது.
வன்னியில் உலருணவு கொண்டு சென்ற ஐ.நா.வின் பிரதிநிதிகளையும் வாகனங்களையும் புலிகள் தடுத்தி நிறுத்தி வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இத்தோடு இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதப்படுகிறது.
புலிகள் தங்களது பயங்கரவாதச் செயலைக் கைவிட்டு ஜனநாயக சூழலுக்கு வருவதற்கு இன்னும் காலம் போகவில்லை. உயிரழிவுகளைத் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரசினூடாகவோ அல்லது ஏனைய சக்திகளினூடாகவோ, ஜனநாயக வழிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அரசைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை இறைமை உள்ள அரசு என்ற அடிப்படையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு அவசியமாகும்.இத் தீர்வை முன்வைப்பது அரசின் தலையாய கடமையாகும். இது சர்வதேச அவதானிப்புடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும்.
வன்னியிலுள்ள மக்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். வேலியே பயிரை மேயக் கூடாது. இல்லாத பட்சத்தில் சர்வதேசம் தலையிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பயங்கரவாதத்தை அழிப்பதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் சக சக்திகளும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும்.