இலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.
இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பி.பகல. 2 மணியளவில் மரணமடைந்தார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க உள்ளார்.
சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
நீதிமன்றத்தின் இவ்வுத்தரவைக் கண்டித்த பாரிஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Border) ‘இலங்கையில் ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் பெரும் கவலையளிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளையும் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசுரம் செய்யும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு.’ என அப்போது தெரிவித்து இருந்தது.
சண்டெ லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.
இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19 என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
Reporters Without Border அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.
சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையைக் கண்டித்தும் ஊடகங்கள் ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதலுக்கு மற்றுப்புள்ளி வைக்கவும் கோரும் அடையாளப் போராட்டம் ஒன்றை செய்வதற்கு தேசம்நெற் முயற்சிக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.