ஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.
முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?
“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”
புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?
“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.
கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?
“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.
நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?
“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”
`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?
“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”
`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?
“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”
`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?
“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?
“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”
கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?
“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”
முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?
“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”
இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.
மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
நன்றி: குமுதம்