சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.
ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிலாரி அமைச்சரானார்:
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.