காசாவில் இஸ்ரேலிய இரானுவத்தின் தாக்குதலை வன்மையாக கண்டித்து உலகெங்கும் போராட்டங்கள் நடந்துவருகிறது. கடந்த 10ம் திகதி இரண்டாவது முறையாக ஆயிரக்கணக்கானவர்கள் லன்டனில் கூடி இஸ்ரேலிய தூதரகத்துக்கு எதிர்வரை சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அக்கூட்டத்தில் வளங்கிய பேச்சின் சுருக்கம்.
——
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து – கடந்த எட்டு வருடத்துக்குள் – மில்லியன் கணக்கான மக்களை நாம் யுத்தத்துக்கு இழந்துள்ளோம்.
கொங்கோவில் நாலு மில்லியனுக்கும் மேல், ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் மேல், டாபூர் சூடானில் அரை மில்லியனுக்கு மேல் என்று உலகெங்கும் யுத்தம் பலிகொண்ட மனித உயிர்களின் எண்ணிக்கையின் தொகை அதிகரித்துகொண்டு செல்கிறது.
தற்போது காசாவில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள்மேல் கற்பனை பண்ணமுடியாத கொடிய தாக்குதலை பார்க்கிறோம். மனிதர் படும் துன்பங்கள் புது எல்லைகளை தாண்டிக் கொண்டிருக்கிறது.
ஏன் இது? ஒரு சொற்ப – ஆயிரக்கணக்கான பணக்கார முதலைகளின் சொத்துக்களை பாதுகாக்கத்தான் இத்தனையும்.
சொத்துக்களை குவித்தலும் அதை பாதுகாத்தலும் முதலாளித்துவத்தின் இயல்பு என்பது எமக்கனைவருக்கும் தெரியும். தமது சொத்துக்களை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்துக்கு தாவுவதை வரலாறு முழுக்க நாம் பார்த்துள்ளோம்.
மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது பற்றி அமெரிக்க – மேற்கத்தேய பணக்கார ஆளும் வர்க்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது ஆச்சரியமான விடயமில்லை. உடனடி தீர்வை எடுக்க அவர்கள் வக்கற்றவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.
காசாவில் வறிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதே தருனத்தில் கவலை முக பாவனை காட்டி ‘மனித இனத்துக்கு கவலைப்படுவதாக’ ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அதிகார மூஞ்சிகளை நாம் ஒருபோதும் நம்புவதில்லை.
ஏனெனில் எமக்கு தெரியும் – எம் நலனில் இருந்து அவர்கள் நலன் முற்றிலும் மாறுபட்டது. எண்ணை வள மத்திய கிழக்கின் வளத்தை தமது கட்டுபாட்டில் தொடர்ந்து வைத்திருக்க இஸ்ரேலிய ஆளும் வர்க்க ஆதரவு தமக்கு தேவை என்பதில் அவர்கள் தெட்டதெளிவாக இருக்கிறார்கள். வாடும் வறிய மக்கள் நலன் சார்ந்து அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப் போவதில்லை. வளங்களை சுறண்டுவது சொத்துக்களை சேர்ப்பது என்பதை மடடும் குறிவைத்து இயங்குவதே அவர்கள் சிந்தனை.
முதலாளித்து பொருளாதாரம் உலகெங்கும் கடும் ஆட்டங்கண்டுள்ள நிலையில் ஆளும் வர்க்கத்தின் கோப நடவடிக்கைகளின் வேகமும் அட்டூளியமும் பல மடங்கு அதிகரிப்பதை நாம் பார்க்கடியதாக இருக்கிறது. பச்சை பொறுக்கித்தனமான செயல்களை – மிக கொடூரமான நடவடிக்கைகளை எந்த வெக்கமும் ஒளிப்பு மறைப்புமின்றி வெளிப்படையாக செய்வதில் ஆளும்வர்க்கத்தின் தெனாவட்டு அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தங்களை கேள்வி கேட்க ஆளில்லை – கதைச்சுபேசி சடைஞ்சு எப்பிடியும் தப்பிவிடுவோம் என்ற அபார நம்பிக்கையுடன் அவர்கள் இந்த அட்டூளியங்களில் ஈடுபடுகிறார்கள்.
அடுத்த தேர்தலை வெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக பல இஸ்ரேலிய பாலஸ்தீன உயிர்களை பலிகொடுக்க தயங்காது நிற்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம். உலகெங்கும் வாழும் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பிருந்தும் தான்தோன்றி தனமாக கடும் தெனாவட்டுடன் பட்ட பகலில் பச்சை கொலை செய்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.
ஆளும்வர்க்கம் உலகெங்கும் இதைதான் செய்துவருகிறது. அமெரிக்க – மேற்கத்தேய – இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் கடும் அட்டூளியங்களை செய்தபிறகும் கேட்பாரற்று தப்பிவிடுவதை படிப்பினையாக எடுத்து முன்றாம் உலக நாடுகளை உலுப்பும் ஆளும் வர்க்கங்களும் இதே பாணியை பின்பற்றுகின்றன.
நான் இலங்கையில் இருந்து வந்தவன். காசாவை இஸ்ரேலிய இராணுவம் கடுமையாக தாக்கும் இதே தருனத்தில் இலங்கை இராணுவமும் வடக்கில் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இராணுவம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் எங்கே. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கதையில்லை.
இலங்கை இரானுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் காசா மக்களை போல்தான் கடும் பயக்கெடுதியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. இவர்களிள் பெரும்பான்மையானவர்களை தீவிரவாதிகள் என்று இராணுவம் நம்புவதால் இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விரைவில் கொல்லப்படக்கூடிய சாத்தியமுண்டு. அது மட்டுமின்றி ஒரு சொற்பன் தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் மேல் கடும் தாக்குதல்களை செய்து வருகிறது அரசு. அண்மையில் ஒரு முக்கிய ஊடகவியலாளரை அரச கூலிகள் சுட்டு கொண்டுள்ளார்கள். வரும் இந்த கிழமை இலங்கை தூதரகம் முன்னாலும் இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்படவுள்ளது.
யுத்தத்தால் சிதைந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவன் என்ற முறையில் இன்று காசா மக்கள் படும் துன்பத்தை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
சா எப்ப வரும் என்று தெரியாமல் எந்த நிமிடமும் சாவை எதிர்நோக்கி வாழ்வது மிக கொடிய வாழ்வு. ஒவ்வொரு குண்டு சத்தத்திலும், ஒவ்வொரு துப்பாக்கி சத்தத்திலும், விமானம் பதிந்து பறக்கும் ஒவ்வொரு தருனத்திலும் சாவை எதிர்கொண்டு தப்பி துடிக்கும் அவர்களின் துன்பம் அளப்பரியது.
அத்துடன் அவர்களுக்கு குடிக்க தண்ணியில்லை – சாப்பிட எதுவுமற்ற கடும் பட்டிணி – இதற்குள் தமது உறவுகள் நண்பர்கள் சக மனிதர்கள் தமக்கு முன்னால் கோரத்தனமாக கொல்லப்படுவதை செய்ய வழியற்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் அடியில் நெருப்பாக துடிக்கும் இயலாமையை எம்மால் உணர முடிகிறது. இதை உணரும் இங்கிருக்கும் யாரும் அவர்களை தனியாக துன்பப்பட விடமாட்டோம்.
ஆனால் யு. என். இன் நீண்ட கொரிடோர்களில் அங்கும் இங்குமாக நடந்து விலைகூடின கமராக்களுக்கு போஸ் குடுக்கும் மேற்கத்தேய அரசியல்வாதிகளுக்கு இந்த உணர்வுகள் ஒருபோதும் புரியப்போவதில்லை. காசா மக்களின் அடி மன வேதனையை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. அவர்கள் சிந்தனை வேறு விதமானது. மக்கள் மேலும் மேலும் வறுமைப்பட அவர்கள் தமது சொத்துக்களை அதிகரித்துகொண்டு யுத்த நடவடிக்கைகளுக்கான செலவையும் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் அரை மில்லயனுக்கும் மேலான அமெரிக்க மக்கள் வேலை இழந்த நிலையில் அது பற்றி எந்த அக்கறையுமற்ற அமெரிக்க அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கை பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. மொத்த ஜி.என்.பி யில் கிட்டத்தட்ட 4 வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டில் அதிகூடிய ஆயுத விற்பனை செய்தது இந்த இங்கிலாந்து அரசுதான். மூன்றாம் உலக நாடுகளின் கொடிய ஆளும்வர்க்கங்களை ஆயுதமயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இஸ்ரேலிய அரசு.
நாம் இதை பார்த்து கொண்டிருக்க முடியாது. நாம் யுத்தத்துக்கு எதிராக –யுத்தத்தின் மூல காரணத்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். யுத்தத்தின் மூல காரணம் முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் யுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். யுத்த நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் நாம் முதலாளித்துவத்துக்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்.
மில்லயன் கணக்கான நாம் – தொழிலாளர்களான நாம் – உலக சொத்துக்களை சூறையாடும் ஒரு சிறு குழுவை விட மிகப் பலம் வாய்ந்தவர்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.
காசா – முழு பாலஸ்தீனம் – இஸ்ரேல் – அமெரிக்க – இலங்கை என்று ஆங்காங்கு போராடிவரும் தோழர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மனிதர் துன்பப்படாத – யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்.
நாம் எமது யுத்தத்தை – இறுதி யுத்தத்தை செய்தாக வேண்டும். மனித துன்பத்துக்கு நிரந்தர தீர்வு கட்டும் இறுதி போராட்டத்திற்கு இணைவோம். எமது யுத்தத்தில் இனைந்து கொள்ளுங்கள். சோசலிஸ்டுகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.