27

27

விடுதலைப்புலிகள் மீது கருணை கிடையாது – பிரணாப்

pranaf.jpgவிடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம்.  இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார்.

பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன்.

mahinda20-01.jpg
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன். அதை ஏற்றுத்தான் அவர் கொழும்பு வருகிறார் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்

அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்துவதற்காக தான் செல்லவில்லை என்றும், புலிகள் மீது இந்திய அரசுக்கு ஒருபோதும் இரக்கம் பிறக்காது என்று அறிவித்துவிட்டே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் பிரணாப்.

இந்நிலையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய இறுதித் தீர்மானத்தை மதித்துதான் பிரணாப் இலங்கை வருகிறார் என்று செய்திகள் பரப்பப்பட்டன. மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் கருணாநிதியிடமும் இதே தகவலைத்தான் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இதையே முதல்வரிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கூறியுள்ளார். இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

stop-violance.jpg
ஊடகவியலாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலையும் கண்டித்து கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடக அமைப்புகள், இலங்கை ஆசிரியர் சங்கம், இடதுசாரி முன்னணி, புதிய சமசமாஜக் கட்சி, சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன பங்கு பற்றின.

இதன் போது, தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இது அரசின் பொறுப்பு, ஊடக அடக்கு முறையை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை வைத்திருந்ததுடன் அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

கருணாநிதியுடன் போனில் பிரணாப் ஆலோசனை

pranab.jpgமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்தத் தகவலை இன்று காலை சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி, பிரணாப் முகர்ஜியிடம் பேசியதாகவும், அதற்கு பிரணாப் முகர்ஜி, இன்று மாலை தான் இலங்கைக்குச் செல்வதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை பயணம் குறித்த அறிவிப்பையும் சட்டசபையில் அன்பழகன் வெளியிட்டார்.

புலிகள் வன்னி மக்களை கேடயங்களாக வைத்திருக்கவில்லை. அந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர் – பா.நடேசன்

nadesan.jpg.வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரபாகரன் எங்கும் தப்பி ஓடவில்லை. மக்களுடனேயே இருந்து போராடி  மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக  விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பா.நடேசன் அளித்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின்வாங்கிச் செல்வதும் – பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், “எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக இலங்கை அரசாங்கம் இதனைச் சொல்கின்றது. எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்.

உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் அலையும் இந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும்.

பிரபாகரன் எங்கும் ஓடவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம். சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்” என்று நடேசன் கூறியுள்ளார்.

பிரபாகரன் தப்பி ஓடி விட்டார் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறி வரும் நிலையில், பிரபாகரன் எங்கும் போகவில்லை, மக்களுடனேயேதான் இருக்கிறார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நடேசன்

பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார்.  ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார். அரசின் “பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன” என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

“போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் கூறினார்.  “வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது. உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

புலிகளின் குரல் வானொலிக்கான அனுமதிப் பத்திரத்தை ரத்தாக்க நடவடிக்கை

puli-kural.jpgபுலிகளின் குரல் வானொலிக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.  புலிகளின் குரல் வானொலிக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுமதி தர்மவர்தன இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு முன்னைய அரசு வானொலி அனுமதிப்பத்திரம் வழங்கியமை சட்ட விரோதமாதெனக் கூறி கலாநிதி பியசேன திஸாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன், 2009 ஜனவரி 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால சட்ட விதிகள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலின் கீழ் இந்த அனுமதியை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். இந்நிலையில், இது சம்பந்தமான மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணம்

r-venkatraman.jpg
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் இலட்சியத்துக்கு சாதி, மத, பிராந்திய வேறுபாடுகள் பெரும் தடை- பாரத ஜனாதிபதி

republic-day.jpgநாட்டு நலன்களுக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படும் அனைத்து குடிமக்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் எதிரிகளைத் தோற்கடித்து இந்தியாவின் இறைமையைப் பாதுகாக்கப் போராடும் படை வீரர்களுக்கு தனது விசேட ஆசிர்வாதங்கள் உண்டாகட்டும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவின் அறுபதாவது குடியரசு தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்கள், இடங்கள் என்பவற்றில் கடுமையான பாதுகாப்புகள் போடப்பட்டன. நாட்டின் ஜனாதிபதியென்ற வகையில் பிரதீபா பட்டீல் குடிமக்களுக்கு விசேட உரையாற்றினார். அதில் கூறியதாவது, நாட் டின் அறுபது வருடகால குடியரசு வரலாற்றில் நாம் சாதித்தவை ஏராளம். நீதி சுதந்திரம், சமத்துவம் என்கின்ற தார்மீகப் பொறுப்பில் இந்தியா தனது பயணத்தைத் தொடர்கின்றது. அன்னியர்களிடமிருந்து பெறப்பட்ட சுதந்திரத்தின் பூரண வடிவம்தான் குடியரசு தினம்.

வெளிநாட்டாரின் ஒருவித அழுத்தங்களின்றி முடிவெடுக்கவும், செயலாற்றவும் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தைக் கூறுபோடவும், ஒற்றுமைக்கு உலைவைக்கவும் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் படையினரை இந்தியர்கள் மறக்க முடி யாது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய் மண்ணுக்கும் பெருமை தேடித்தரும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் அரசுகள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

அயல் நாடுகளில் அமைதியின்மையைத் தூண்டி உள்ளூர் அரசியல் தேவைகளை நிறைவேற்ற எண்ணும் அரசுகளையோ, அமைப்புகளையோ ஜனநாயகவாதிகள் என்றழைக்க முடியாது. மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக் குதலில் அரசு சாராத தனி நபர்களுக்கே தொடர்பு உள்ளது என்றும் இதில் தங்களை குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறி கைகழுவிக் கொள்கிறது பாகிஸ்தான். அதன் இந்த நிலை ஏற்கத்தக்கதல்ல. உலகின் ஸ்திரத்தன்மைக்கு உலைவைப்வதாக உள்ளது பயங்கரவாதம். எனவே பயங்கரவாதத்தை இருக்கும் இடம் தெரியாமல் விரட்ட உலக நாடுகள் ஒன் றுபட்டு நின்று தெளிவான நடவடிக் கையை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்தின் மையம் நிலைகொண்டுள்ள பிராந்தியத்தில் இந்தியா அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாத கொடூரங்களுக்கு இந்தியா ஆளாகி வருகிறது. பயங்கரவாதம், வன்முறைகள், இயற்கைப் பேரிடர்கள், கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருள் விலையேற்றம், உலகப் பொருளாதாரத் தேக்க நிலை என கடந்த ஓராண்டில் நாட்டைத் துண்டாடும் நோக்கத்தில் சில சக்திகள் செயற் படுகின்றன. அவற்றை மக்கள் புரிந்து கொண்டு ஒரே இந்தியா, நாம் இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் செயற்பட வேண் டும். பிராந்திய, மத, சாதி கண்ணோட்டம் நம்மிடம் இருக்கக் கூடாது. சுதந்திர இந்தியா என்ற இலட்சியத்தை நோக்கி நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். அந்த இலக்கை அடைய நாம் கையாளும் கொள்கைகளுக்கு பிராந்திய, மத, சாதி கண்ணோட்டம் எதிரானவை.

சிவிலியன்கள் மத்தியிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் புலிகளிடம் யாழ். ஆயர் வேண்டுகோள்;

thomas-sawndaranayakam.jpgபாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் மத்தியிலிருந்து இராணுவத்தின் மீது புலிகள் ஆட்லறி தாக்குதல்கள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படியான செயல்கள் சிவிலியன்களின் மரணத்தை மேலும் மேலும் அதிகரிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் நன்மைகருதி முல்லைத்தீவின் மேற்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் உருவாக்கியமைக்காக ஆயர் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பகுதியில் மேலும் சிறிய கவனம் செலுத்தி அதனை விஸ்தரிக்க வேண்டும். மாதலான் வளையார் மடம், முள்ளிவாய்க்கால், இரணைபளை மற்றும் புதுக்குடியிருப்பின் கிழக்கு ஆகிய பகுதிகளை சிவிலியன் பாதுகாப்பு வலயத்தினுள் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வலயத்தினை மேலும் விஸ்தரிக்குமாறும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார்.

பொதுமக்களின் நன்மைகருதி இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ‘நாங்கள் யுத்தத்திற்கு எதிரானவர்களல்ல. ஆனாலும் யுத்தப் பிரதேசங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமையாகும்’ எனவும் ஆயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த 25ம் திகதி எழுதிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, யுத்தம் நடைபெறும் பகுதியில் சிவிலியன்களின் நலனில் அக்கறை செலுத்துவதை நாங்கள் நன்றியுடன் நோக்குகிறோம். பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஒரு சிறிய பிரதேசத்தினுள் கூடுதலானோர் தங்கியுள்ளனர்.

ஏராளமான மக்கள் தேவாலயங்களுக்குள் வந்து சேர்வதாக சில பாதிரியார்களும், அருட்சகோதரிகளும் எனக்குத் தெரிவித்த வண்ணமுள்ளனர். இவைகள் அனை த்தும் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியிலாகும். இவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், ஐ.சி.ஆர்.சியும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் தஞ்சமடையும் அப்பாவிச் சிவிலியன்களைக் கருத்திற்கொண்டே அதிகெளரவத்திற்குரிய ஜனாதிபதியாகி உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். எங்களது பங்குத்தந்தையர்களும், கன்னியாஸ்திரிகளும் மக்கள் செல்லும் இடங்களெல்லாம் சென்று அவர்களின் துன்பங்களில் பங்கெடுக்கின்றனர். அவர்களைக் கைவிடவில்லை.

அதேநேரம், மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் புலிகள் தங்களது ஆட்லெறி நிலைகளை ஏற்படுத்தி அங்கிருந்து இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடாது. அப்படியான செயல் மேலும் மேலும் உயிரிழப்புக்களையே ஏற்படுத்தும். சிவிலியன்களின் பாது காப்பில் இரு தரப்பும் அக்கறைகொள்ள வேண்டும். ஆகவே அதிகெளரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, முல்லைத்தீவின் மேற்குப் பிரதேசத்தையும் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆயர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

‘முல்லைத்தீவில் 26 பொதுமக்கள் பலி’- B.B.C தமிழோசைக்குவழங்கிய செவ்வியில் டாக்டர். டி. சத்தியமூர்த்தி

truck.jpgஇலங்கையின் வடக்கே கடுமையான மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று  நடந்த தாக்குதல்களில் பலியான 26 பொதுமக்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை முதல் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உடையார் கட்டு, சுதந்திரபுரம் மற்றும் தேவிபுரம் வரையிலான பகுதிகளிலே ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வந்து வீழ்ந்ததாகவும் அவர் B.B.C தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கும் வைத்தியசாலையிலும், நெட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் பலியான 26 பொதுமக்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் காயமடைந்த 76 பேர் அங்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர். சத்தியமூர்த்தி கூறியுள்ளார். மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த 10 பேர் காயமடைந்ததாகவும், 4 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.