![]()
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன். அதை ஏற்றுத்தான் அவர் கொழும்பு வருகிறார் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்
அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்துவதற்காக தான் செல்லவில்லை என்றும், புலிகள் மீது இந்திய அரசுக்கு ஒருபோதும் இரக்கம் பிறக்காது என்று அறிவித்துவிட்டே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் பிரணாப்.
இந்நிலையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய இறுதித் தீர்மானத்தை மதித்துதான் பிரணாப் இலங்கை வருகிறார் என்று செய்திகள் பரப்பப்பட்டன. மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் கருணாநிதியிடமும் இதே தகவலைத்தான் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இதையே முதல்வரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.