புலிகளின் குரல் வானொலிக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். புலிகளின் குரல் வானொலிக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுமதி தர்மவர்தன இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு முன்னைய அரசு வானொலி அனுமதிப்பத்திரம் வழங்கியமை சட்ட விரோதமாதெனக் கூறி கலாநிதி பியசேன திஸாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், 2009 ஜனவரி 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால சட்ட விதிகள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலின் கீழ் இந்த அனுமதியை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். இந்நிலையில், இது சம்பந்தமான மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்