பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் மத்தியிலிருந்து இராணுவத்தின் மீது புலிகள் ஆட்லறி தாக்குதல்கள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படியான செயல்கள் சிவிலியன்களின் மரணத்தை மேலும் மேலும் அதிகரிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் நன்மைகருதி முல்லைத்தீவின் மேற்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் உருவாக்கியமைக்காக ஆயர் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பகுதியில் மேலும் சிறிய கவனம் செலுத்தி அதனை விஸ்தரிக்க வேண்டும். மாதலான் வளையார் மடம், முள்ளிவாய்க்கால், இரணைபளை மற்றும் புதுக்குடியிருப்பின் கிழக்கு ஆகிய பகுதிகளை சிவிலியன் பாதுகாப்பு வலயத்தினுள் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வலயத்தினை மேலும் விஸ்தரிக்குமாறும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார்.
பொதுமக்களின் நன்மைகருதி இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ‘நாங்கள் யுத்தத்திற்கு எதிரானவர்களல்ல. ஆனாலும் யுத்தப் பிரதேசங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமையாகும்’ எனவும் ஆயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த 25ம் திகதி எழுதிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, யுத்தம் நடைபெறும் பகுதியில் சிவிலியன்களின் நலனில் அக்கறை செலுத்துவதை நாங்கள் நன்றியுடன் நோக்குகிறோம். பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஒரு சிறிய பிரதேசத்தினுள் கூடுதலானோர் தங்கியுள்ளனர்.
ஏராளமான மக்கள் தேவாலயங்களுக்குள் வந்து சேர்வதாக சில பாதிரியார்களும், அருட்சகோதரிகளும் எனக்குத் தெரிவித்த வண்ணமுள்ளனர். இவைகள் அனை த்தும் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியிலாகும். இவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், ஐ.சி.ஆர்.சியும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் தஞ்சமடையும் அப்பாவிச் சிவிலியன்களைக் கருத்திற்கொண்டே அதிகெளரவத்திற்குரிய ஜனாதிபதியாகி உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். எங்களது பங்குத்தந்தையர்களும், கன்னியாஸ்திரிகளும் மக்கள் செல்லும் இடங்களெல்லாம் சென்று அவர்களின் துன்பங்களில் பங்கெடுக்கின்றனர். அவர்களைக் கைவிடவில்லை.
அதேநேரம், மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் புலிகள் தங்களது ஆட்லெறி நிலைகளை ஏற்படுத்தி அங்கிருந்து இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடாது. அப்படியான செயல் மேலும் மேலும் உயிரிழப்புக்களையே ஏற்படுத்தும். சிவிலியன்களின் பாது காப்பில் இரு தரப்பும் அக்கறைகொள்ள வேண்டும். ஆகவே அதிகெளரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, முல்லைத்தீவின் மேற்குப் பிரதேசத்தையும் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆயர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
palli
ஜயா இதைதான் 25வருடமா எல்லோரும் சொல்லுகிறோம். ஆனால் புலியோ தனக்கு பதுங்கினால்தான் (மக்கள் மத்தியில்) வீரம் வருமென அடம்பிடிக்கிறது.
பார்த்திபன்
ஆயரின் குரலோ, அரச அதிபரின் குரலோ அல்லது மனிதநேய அமைப்பக்களின் குரலோ புலிகளுக்கு முக்கியமல்ல. வெளிநாட்டு மக்களிடம் புரளிகளை தமதுஆட்கள் மூலம் பரப்பி விட்டு உசுப்பேற்றி, எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்பது தான் முக்கியம்.