மும்பை தாக்குல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளையும், பிறரையும், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலையில் எந்த குழப்பமும், மாற்றமும், தொய்வும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், தீவிரவாதிகளை நாடு கடத்துவது பாகிஸ்தானால் இயலாத காரியம் என்றால், சிக்கல் இருப்பதாக கூறினால், அவர்களை பாகி்ஸ்தானிலேயே வைத்து விசாரிக்க இந்தியா சம்மதிக்கும். ஆனால் விசாரணையில் நேர்மை இருக்க வேண்டும்.
ஒப்புக்காக விசாரணை நடத்தப்பட்டால் அதனால் எந்த பயனும் கிடையாது. கேலிக்கூத்தாகி விடும். விசாரணை வெளிப்படையாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் அமைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால், இதுவரை தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வந்த இந்தியாவின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதப்பட்டது. அமெரிக்காவின் ‘அட்வைஸ்’படி இந்தியா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் பேச்சு எழுந்தது. இந்தியா தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகவும் பேச்சு எழுந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் எந்த தொய்வும், குழப்பமும் இல்லை என்று பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார்.
தனது டிவி பேட்டி குறித்து விளக்கி செய்தியாளர்களிடம் இன்று பேசினார் பிரணாப் முகர்ஜி. அப்போது அவர் கூறுகையில், மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை, இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட பாகிஸ்தானியர்களை, நம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
அவர்களை இந்திய சட்டத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற நிலையிலும் மாற்றம் இல்லை.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். அக்கறையுடன், ஒளிவுமறைவுற்ற வகையில், அது நடந்து கொள்ள வேண்டும். இந்த சதித் திட்டத்தை அது வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும்.
மும்பை சம்பவத்திற்குக் காரணமான பாகிஸ்தானியர்களை நம்மிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து அரசு மாறி விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.சதிகாரர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கி வரவில்லை. அந்தக் கோரிக்கையை நாம் இன்னும் கைவிடவில்லை. குற்றம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. எனவே இங்குதான் விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்குதான் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும் என்றார் பிரணாப்.
பிரணாப் முகர்ஜியின் இந்த முன்னுக்குப் பின் முரணான பேச்சு குழப்பத்தை அதிகரித்துள்ளது.