கிளிநொச்சி நகரம் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை அவசரமாக முன்வைக்குமாறு பிரிட்டன் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சகல சமூகங்களும் சுபிட்சமடைவதற்கு வலுவானதும் நிலையானதுமான சமாதானத்தை எட்டுவதற்கு இதுமட்டுமே வழிமுறை என்று பிரிட்டிஷ் தூதரகம் செவ்வாய்க் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக பிரதியமைச்சர் மல்லோபிரவுண் பிரபுவும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டரும் இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ச்சி கண்ட பின்னரான நிலைமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நெருக்கமாக அவதானித்து வருகிறது. சகல சமூகங்களினதும் நியாய பூர்வமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சகல தரப்பினரும் முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் அவசரமானதென்பதை தற்போதைய முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமான பாதிப்பு குறித்து நாம் கவலையுடன் இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளுக்கு அமைவான கட்டுப்பாடுகளுக்கேற்ப சகல தரப்பும் செயற்படவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.