கல்கிசை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையோரத்தில் நேற்று இரவு சிறிய குண்டொன்று வெடித்துள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்திற்கும் கல்கிசை ரயில் நிலையத்திற்குமிடையில் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரிக்கு சமீபமாக ரயில் பாதை அருகில் இரவு 7.05 மணியளவில் இந்தச் சிறிய குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடித்த போது ரயில் பாதையில் ரயில் எதுவும் செல்லாத அதேநேரம், குண்டு வெடிப்பால் ரயில் பாதைக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. குண்டு வெடித்ததையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு படையினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்ததுடன் கரையோரப் பகுதியூடான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தினர். இதையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களையும் நடத்தினர். சில மணிநேரத்தின் பின் ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது