16,000 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆலோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தின் துரிதமான வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் அவசியத்தை கருத்திற் கொண்டு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளவும், சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக 16,000 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையூடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக ஏற்றுமதிக் கைத்தொழில், உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், விவசாய உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதி வழங்கப்படவுள்ளது. மேற்படி துறைகளின் உற்பத்திச் செலவினை குறைப்பதன் ஊடாக போட்டித் தன்மையை அபிவிருத்தி செய்தல், ஏற்றுமதி வருமானம் மேற்படி துறைகளின் பாதுகாப்புத் தன்மையை பலப்படுத்துதல், போன்றவற்றை உள்ளடக்கியதாக பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தையில் தேயிலையின் விலையை உறுதிப் படுத்துவதற்காக இலங்கைத் தேயிலைச் சபையின் மதிப்பீட்டின் கீழ் அரச நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தலுக்கும் ஏல விற்பனையில் தேயிலையின் விலையை கிலோ ஒன்றுக்கு 300 ரூபா வரை தக்க வைத்தலுக்குமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை தேயிலைச் சபைக்கு 1500 மில்லியன் ரூபாவை வழங்கவும். தேயிலை கைத்தொழில் தொழிற் சபைகளுக்கு ஒரு மாதத்திற்கான தொழில் மூலதனத்தினை சலுகை அடிப்படையிலான வட்டி விகிதாசாரம் ஒன்றின் கீழ் வழங்குவதற்காக நிதி திட்டமிடல் அமைச்சு, அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.
50 கிலோ எடைகொண்ட தேயிலைக்கான கலப்பு உரம் 1000 ரூபாவுக்கு வழங்குவதற்காக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சுக்கு 2500 மில்லியன் ரூபாவும், பஸ் வண்டிகள், டிரக் வண்டிகளுக்கு அவசியமான டயர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு 200 மில்லியன் ரூபாவும் இறப்பருக்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்துக்கு கடன் வழங்குவதற்காக மேற்படி அதே அமைச்சுக்கு 450 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.
கறுவாவிற்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்துக்காக நிதி திட்டமிடல் அமைச்சு அபிவிருத்தி நிதித் திணைக்களம் என்பவற்றுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்படும். 2008ம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் ஊழியர்க ளின் எண்ணிக்கை மற்றும் அத்துறைகளுடன் தொடர்பான பொருத்தமான பெறுமதிச் சேர்ப்பை பேணும் ஏற்றுமதியாளர்களுக்கு 5 சதவீத ஏற்றுமதி ஊக்குவிப்பை வழங்குவதற் காக 8000 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக் கப்படும்.
தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை பேணும் சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்துள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் மற்றும் கடனை மறு சீரமைத்தலுக்காக 200 மில்லியன் ரூபாவும் அரசினால் வழங்கப்படும் ஏனைய மானியங்களுக்காக நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 3000 மில்லியன் ரூபாவும் வழங்குவதற்கான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.