பரந்துபட்ட அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் இலங்கையும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடானது பேச்சுவார்த்தைக்கு இடமற்றது என்ற அமெரிக்க அரசின் தலையாய நிலைப்பாட்டை இலங்கை மக்களும் அரசாங்கமும் மிகவும் பாராட்டுகின்றன.
ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதன் ஊடாகவும் இலங்கையில் சமாதானத்தை வென்றெடுக்க அமெரிக்கா ஆற்றிவரும் பங்களிப்பானது எம்மை கவர்ந்துள்ளதுடன் நன்றிக்கும் உரிய தோன்றாகும்.
ஜனாதிபதி பதவிக் காலத்தை வெற்றியுடன் நிறைவேற்ற எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் வாழ்த்துகிறேன். அத்துடன் தங்கள் பதவிக்காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் நெருக்கமடையுமென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். உலக சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் தங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிவது மகிழ்ச்சியானதாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்