March

March

அல்ஜசீராவின் நேர்காணலில் மகிந்த ராஜபக்சவை போட்டுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

அல்ஜசீராவின் நேர்காணலில் மகிந்த ராஜபக்சவை போட்டுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

 

இறுதிப்போரில் அகப்பட்டிருந்த தமிழ்மக்களுக்கு சர்வதேசத்தின் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடுத்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் யுத்தத்தில் மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என அல்ஜசீராவிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டில் முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா ?என அல்ஜசீரா பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க,

எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதிவழங்கப்படவில்லை என கூறியுள்ளார். அதேசமயம் யுத்தத்தின் இறுதி நேரத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் எவையும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவில்லை என வாக்காலத்து வாங்கினார். விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன. அப்போதெல்லாம் இந்த தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? என்றால் நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மேலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன், ஐக்கியநாடுகளின் குழு, இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார். மேலும் பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்விகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறித்த பேட்டியில் நிராகரித்துள்ளார்.

1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார்.

இதேவேளை இறுதி யுத்தத்தின் போது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அல்ஜசீரா நேர்காணல் நேற்று ஒளிபரப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே ஊடகங்களிடம் பேசிய ரணில், தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் புலிகளுக்கு ஆதரவான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் அல்ஜசீரா என்னை இரண்டு மணி நேரம் பேட்டி எடுத்திருந்தது. ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது. அதில் பெரும்பாலானவற்றை எடிட் செய்துள்ளதும் என்று ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீராவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடிக்கினார்.

வடக்கில் போதைப்பொருளை முடிவுக் கொண்டு வர என்பிபி திடசங்கற்பம் !

வடக்கில் போதைப்பொருளை முடிவுக் கொண்டு வர என்பிபி திடசங்கற்பம் !

 

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விசேட மத்திய நிலையமொன்றை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில்,

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது, இந்த ஆண்டில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ்ப் போதைப்பொருள், 650 கிராம் கேரள கஞ்சா, 26,915 போதைப்பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது என்றார். இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என சுனில் வட்டகல சூளுரைத்தார்.

புலம்பெயர்நாடுகளில் வீதி விபத்துக்களில் தொடரும் தமிழர்கள் மரணங்கள்

புலம்பெயர்நாடுகளில் வீதி விபத்துக்களில் தொடரும் தமிழர்கள் மரணங்கள்

பிரித்தானியாவில் சறே ( Surrey) சட்டனில் மார்ச் 3ம் திகதி நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் கடவையினூடாக வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த விபத்தானது றோஸ்கில் பகுதியில் கிரீன் வீதி சட்டனில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இறந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் என்ற 49 வயது குடும்பஸ்தர் எனத் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை மெட்ரோ பொலிரன் ( Metropolitan )பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !

நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !

 

இலங்கையில் நடைபெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்களை கண்டுங்காணாதது போல் கடந்து செல்கிறது என்.பி.பி அரசாங்கம். சுமந்திரன் குற்றச்சாட்டு. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையில் என்பிபி செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் எம். ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என்றார். மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்த சுமந்திரன் அப்போது இவ்விடையம் குறித்து காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என விமர்சனத்திற்குள்ளாகிறார்.

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

 

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கைநாட்டு; எழுத வாசிக்க தெரியாதவர் என எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவமாரியாதையாக நேற்றைய நாடாளுமன்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.

சமீபத்தில் அமைச்சர் கப்பலில் தோட்டத் தொழிலாளராக வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாங்கள் அதாவது அர்ச்சுனாவின் யாழ்ப்பாண வம்சாவளியினர் கப்பல் கட்டி விட்ட மேட்டுக்குடியினர் என மட்டம் தட்டி வலைத்தளத்தில் பேசி இருந்தார். அர்ச்சுனா கடற்தொழில் அமைச்சர் மீது காட்டும் வன்மம் தான் வெள்ளாள யாழ்ப்பாண மேட்டுக்குடியைச் சேர்ந்தவன் என்ற மேலாதிக்க மனோபாவத்தின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு எனவே கருதப்படுகிறது. இராமலிங்கம் சந்திரசேகர் கடற்தொழில் அமைச்சாராக வந்ததை அர்ச்சுனாவைப் போன்று குறுந் தமிழ்த்தேசிய வெள்ளாள மேட்டுக்குடியினரும் விரும்பவில்லை. ஒரு மலையகத் தமிழன் அதுவும் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தானை ஆளவா? என்ற காழ்ப்புணர்வை பலர் மனதில் வைத்துள்ளார்கள். எம்பி அர்ச்சுனா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டுகிறார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீதான தனது அதிருப்தியை அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தனது பங்கிற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நாய் என குறிப்பிட்டுள்ளார் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா.

மேலும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வடக்கின் சுகாதார நிலை தொடர்பில் பேசிய எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் நான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ள எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுங்கற்று காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல ! ஆய்வாளர் வி சிவலிங்கம்

பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !

ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்

 

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் ஏழை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் உபாலி !

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் ஏழை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் உபாலி !

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாகக் கிராமிய அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது, கிராமிய வறுமை இந்த நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நம் நாட்டில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் இருக்கிறார் . அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் வசிக்கின்றனர் . கிராமப்புற வறுமையை ஒழிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முக்கியமாகக் கவனம் செலுத்தியுள்ளது. கிராமப்புற, அரை நகர்ப்புறம், மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். மேலிருந்து கீழாகப் பாய்ந்து செல்லும் அபிவிருத்திக்குப் பதிலாக, கிராம மக்களின் தேவைகளை ஆராய்ந்து, கிராமப்புற அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்த மக்களுக்கு வசதிகளை வழங்குவோம் என்று அமைச்சர் கூறினார் .

உண்மையான கள்ளன் – பொலிஸ் விளையாட்டு !

உண்மையான கள்ளன் – பொலிஸ் விளையாட்டு !
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்தையும், செவ்வந்தியையும் காடு மேடெல்லாம் தேடியும் இலங்கை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பாக தேசபந்து தென்னக்கோன் தேடப்பட்டு வருகின்றார். தலைமறைவாகியுள்ள தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பயணத் தடை விதித்திருக்கின்றது. மேலும் இதுவரை ஐந்து வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் தேசபந்து தென்னகோனை  பொலாஸார் இன்னுமும் தேடி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை சுட்டுக் கொன்ற கொலையாளிக்கு உதவிய சந்தேக நபரான பெண் இஷாரா செவ்வந்தியையும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகியும்  பொலிஸார்  தேடிக் கொண்டிருக்கின்றனர்.
செவ்வந்தியின் இருப்பிடம் பற்றிய தகவல் வழங்குவோருக்கு பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 12 இலட்சம் ரூபா பரிசாக வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !

சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !’

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு எந்த ஏமாற்றத்தை தரவில்லையெனவும் தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டுச் செல்ல எவராலும் முடியாது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டுமென தாம் ஏற்கனவே தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாதது மட்டும் தான் குறை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

 

வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தவில்லை எனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எச்சரித்துள்ளார்.

அண்மையில் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் போதைப் பொருட்களையும் கொண்டுவரும் இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிறிதரன் யாழ் சிறையில் கென்று சந்தித்து வந்தார். வவுனியாவில் உள்ள சிறைக்கும் சென்று இ;ந்திய மீனவர்களைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் விடயத்தில் பா உ சிறிதரனோ தமிழ் தேசிய பா உ க்களோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

மாறாக தற்போது தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ தேசிய மக்கள் சக்தியின் வழியில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அத்துமீறும் இந்திய மீனவர்கள் கட்டுப்படுத்தப்படா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். பாராளுமன்ற சபைத் தலைவர் பீமல் ரத்நாயக்காவும் இதே கருத்தை நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய நடுவன் அரசும் தமிழக அரசும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போராட்டத்தில் குதித் வடக்கு மீனவர்கள் இதே கோரிக்கையை யாழில் உள்ள இந்திய துணைத்தூதுரகத்திடம் கையளித்தள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் வடக்கு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போதும் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கூறுகையில், “இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.அதேபோல், இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் சபையில் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த கால அரசாங்கத்தை போலே நீங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம். வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் கடற்றொழில் என்பது பொருளாதாரத்தின் மையம். அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம். எனவே, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் அதைக்கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தங்கள் நாட்டு கடற்றொழிலாளர்கள் மீது இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்போது பதிலளித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரும் போது, இலங்கை அரசு இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.