March

March

ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !

ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !

 

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனலை நடாத்தி வருகின்ற யூரியுப்பர் கிருஷ்ணா என்பவர் நேற்றையதினம் பண்டத்தரிப்பு இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டார். கிருஷ்ணா இளைஞர்களால் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கப்பட்டார். அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை கொடுக்க முடியாது கிருஷ்ணா, ஏதேதோ சொல்லி சளாப்பினார். இறுதியில் கிருஷ்ணா இளைஞர்களின் முயற்சியில் யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.

கிருஷ்ணாவினால் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் காணொளியில் கிருஷ்ணா வீடியோ எடுக்க சம்மதிக்காத உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவி ஒருவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார். வழமையாகவே கிருஷ்ணா தனது உதவி வழங்கும் காணொளிகளில் தனிப்பட்ட குடும்பங்களின் மற்றும் தனிநபர்களின் அந்தரங்க மற்றும் பிரத்தியேக பிரச்சினைகளை எந்த வித தணிக்கையும் இன்றி வெளிப்படுத்தி வந்தார். இதனை ஏற்கனவே தேசம்நெற் தவிர பெரும்பாலும் யாரும் கண்டிக்கவில்லை.

சமீபத்தில் சர்ச்சையான வீடியோ குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்த விடயத்தில் இப்போதாவது எதிர்வினையாற்றியுள்ளார்கள் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்றக்கத்தக்கது.

இது ஒரு கிருஷ்ணா என்ற தனிப்பட்ட யுரீயூப்பர் ஒருவருக்கு எதிரான நடவடிக்கையுடன் முடிவடையக் கூடாது. கிருஷ்ணா போன்று இன்னும் பலர்பேர் இத்தகைய காணொளிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த விடயத்தில் என்பிபி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சைபர் கிரைம் பிரிவினூடாகவோ அல்லது புதிதாக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் சட்டத்தின் கீழோ சமூக வலைத்தளங்களுக்காக ஒழுங்கு விதிகளை உருவாக்க வேண்டும். தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் அவதூறுகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் தணிக்கையை கொண்டு வர வேண்டும்.

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !

ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !

 

அவுஸ்திரேலியாவில் வேலைக்கு விளம்பரம் போட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, 40 வயதான பிஜேபி அவுஸ்திரேலிய பிரதிநிதி பாலேஸ்; தன்கருக்கே இச்சிறைத்தண்டனையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ளது. 21 முதல் 27 வயதான கொரிய நாட்டுப்பெண்களை வேலைக்கான நேர்காணல்களுக்கு அழைத்து அவர்களுக்கு மயக்கமருத்து கொடுத்து அதன்பின் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

2018இல் 5வது பெண்ணை வன்புணர்வு செய்தது தொடர்பில் பொலிஸார் பாலேஸ் தன்கரின் வியாபார மையத்தைச் சோதணையிட்ட போது அங்கு அவர் பெண்களை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்திய மயக்க மருந்து கண்டெடுக்கப்பட்டது. அத்தோடு கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட வீடியோ கமராவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 2023இல் இவர் மீது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட 29 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் தண்டணை வழங்க்பட்டுள்ளது. இதில் முதல் 30 ஆண்டுகள் இவருக்கு பரோல் மறுக்கப்பட்டும் உள்ளது. இவர் தனது 83வது வயதிலேயே விடுதலை செய்யப்படுவார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு இவ்வாண்டு மே 17, 18, 19 என வெவ்வேறு தினங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. 2009 மே 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்த செய்தியை 2009 மே 24 அன்று அதன் அன்றைய தலைவர் செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் அறிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இச்செய்தியை அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான ரிரின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 பில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் , தங்களிடம் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் கேள்விக்கு உட்பட்டு விடும் என்பதால் வே பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்ற மாய விம்பத்தைக் கட்டினார்கள். இன்று ஈழத்தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தொழில் அதிபர்கள் என்று அறியப்படுகின்ற பெரும்பாலானவர்கள் உலகம் முழக்க கோடீஸ்வரர்களானது விடுதலைப் புலிகளின் பணத்தில் தான். இன்றும் தலைவர் வந்து கேட்டால் நாங்கள் கணக்குக் காட்டுவோம் எனச் சிலர் ரீல் விடுகின்றனர். பெரும்பாலனவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை அன்றே அறிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று முப்பதிற்கும் மேற்பட்ட பிளவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நிகழ்ந்த மோசமான தவறாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புலனாய்வுப் போராளி முல்லை மதி வருமாறு தெரிவிக்கின்றார்: “ப சிதம்பரத்தோடு கதைத்தபோது புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்றியிருக்க முடியும் அதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதாகவே சிதம்பரம் சொன்னார். சிவசங்கர் மேனனும் அதையே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்த சிலரும் விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் சிலரும் புலிகளை பரம விரோதிகளாக கருதிய இந்திய உளவுத்துறையின் ஒரு பகுதியினரும் விடுதலைப்புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உருத்திரகுமாரன் போன்றவர்களும் குழப்பியடித்தனர்.

ஒரு படி கீழிறங்கி இனத்தை காப்பாற்ற விடாத சுயகொளரவம் தன்மானம் இறுதியில் நான் நீ என்ற வறட்டு வாதமாகி அழிவில் முடிந்தது என்பதே உண்மை. சோனியாவின் பெயரை அநியாயமாக பயன்படுத்துகிறார்கள். கருணாநிதியை விட சம்மந்தன் என்ற கொடியனே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாட்டை முடக்கி வைத்திருந்தார்” எனக் குற்றம்சாட்டுகின்றார் முல்லை மதி.

 ‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இயக்கப் போராளிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் அவர்களுடைய வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளராகச் செயற்பட்ட முல்லைமதி தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

நீங்கள் எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் என உரிமைகோர முடியும் என தேசம்நெற் வினவிய போது “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக குமரன் பத்மநாதன் என்ற செல்வராஜா பத்மநாதன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாங்களே உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை மக்களுக்கு அறிவித்து, தலைமையையும் பொறுப்பேற்றோம். அதன் அடிப்படையில் நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான தலைமை” எனத் தெரிவித்தார். இந்நேர்காணலை இன்று முழுமையாக தேசம் ரியூப்பில் பார்க்கலாம்.

“தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் ஆரம்ப நாட்களில் பல்வேறு தவறுகளை விட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நாங்கள் எங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் துணிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள். அதனால், ஆயதங்களைக் கைவிட்ட பின்னும் இந்த ஜனநாயகப் போராட்டத்தையும் எங்களாலேயே முன்னெடுக்க முடியும். மக்களுக்காக ஒரு துளி வியர்வையும் சிந்தாத மதிவாதத் தலைவர்களின் பரம்பரை அரசியல் வாதிகளால் அதனை நேர்மையாகச் செய்ய முடியவில்லை என்பதை இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன், சி வி விக்கினேஸ்வரன், பொன் ஐங்கரநேசன் போன்றோர் காட்டிவிட்டனர். முன்னாள் இயக்கப் போராளிகள் – உங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறுகளை மன்னித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான முல்லை மதி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாங்கள் மற்றைய போராளிகளின் ஆயதங்களை அன்று களைந்தோம் அதற்கான சூழல் அன்று ஏற்பட்டது இன்று எல்லோரும் ஜனநாயக வழியில் போராடுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் உட்பட்ட முன்னால் இயக்கப் போராளிகளுக்கு ஆதரவளியுங்கள்” என வலியுறுத்தினார் முல்லை மதி.

யுரியூப்பர் கிருஷ்ணா வடக்கு கிழக்கின் பிரபல கேடி – கில்லாடி யானார் ! மனித உரிமை ஆணைக் குழுவும் அவரைத் தேடுகின்றது ! பா உ அர்ச்சுனாவின் முன்னாள் சட்டத்தரணியும் தேடுகின்றார் !

யுரியூப்பர் கிருஷ்ணா வடக்கு கிழக்கின் பிரபல கேடி – கில்லாடி யானார் ! மனித உரிமை ஆணைக் குழுவும் அவரைத் தேடுகின்றது ! பா உ அர்ச்சுனாவின் முன்னாள் சட்டத்தரணியும் தேடுகின்றார் !

யூரியூபில் உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் “SK vlog“ என்ற யூரியூப் பக்கத்தின் உரிமையாளரான கிருஷ்ணா என்பவர் ஒரு வீட்டினுள் நுழைந்து உதவி செய்வதற்காக வந்துள்ளேன் என கூறி பாடசாலை சிறுமி ஒருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், நீங்கள் நடிக்க கூடாது; நீர் என்ன பெரிய நடிகையோ; அழுதா தானே நிறைய உதவிகள் வரும் போன்ற வார்த்தைகளையும் பேசுகிறார்.

யூரியூபர் S K கிருஷ்ணா வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது யூரியூப் பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணம் பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார். அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது உதவி பெறுபவர்களின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்கு அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பில் தேசம்நெற் சில தடவைகள் எச்சரித்து காணொலிகளையும் வெளியிட்டு வந்திருந்தது. அண்மையில் எஸ் கே கிருஷ்ணாவையும் அம்பலப்படுத்தி இருந்தோம். தற்போது இச்செய்தி தற்போது பாராளுமன்ற உறுப்பினார் அர்ச்சுனாவால் பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களும் இப்பிரச்சினையை வேகமாகப் பரவி வருகின்றறது.

இதற்கிடையே மனித உரிமை ஆணைக்குழுவும் இவர் பற்றிய தகவலைக் கோரியுள்ளது. தற்போது இலங்கைத் தமிழரின் கேடி – கில்லாடியாகி விட்டார். எஸ் கே கிருஷ்ணாவின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த யூடியூப்பரின் மோசடி மற்றும் முகஞ்சுழிக்க வைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்றையதினம் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டி பேசியதுடன் இவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள யோகு அருணகிரி, இவரைப் போன்ற கேடி – கில்லாடிகளை புலம்பெயர் தமிழர்களே உருவாக்குவதாகக்தன்னுடைய முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்: “யுடீப்பர் என்னும் கழிசடைகள் உலகத்தை வளர்த்து விட்டது அதிகமாக புலம்பெயர் புடுங்கிகள் தான், தங்களின் வெட்டி பந்தாக்கும், பெயர், புகழுக்கும், நாலு பேருக்கு சோத்த போட்டுட்டு நாலாயிரம் பேர் லைக் பண்ணனும் என்ற தற்புகழ்ச்சி கோஷ்டிகளை முதலில் காயடிச்சு விடனும்….

அப்பத்தா சொல்லும் வலக்கை கொடுத்தா இடக்கைக்கு தெரியக்கூடாது என அப்படித்தான் தானம், தர்மம், புண்ணியத்தில் சேரும், ஏழு தலைமுறை வாழும் என… நம்ம பெயரும் ரீவியில் வரணும் நாலு பேர் நம்மையும் மனிதாபிமான ஆள், ஊருக்கு உதவுற மனம் வள வளா குறுப் தான் இப்படியான குறை பீடிக்கும் இல்லாமல் திரிச்சதுகளை தேடி பிடிச்சு அதுகளுக்கு சில்லறையை சிதற விட்டு வளர்த்து விட்டுட்டு இப்ப கதறி என்ன பயன்….” என்கிறார் யோகு அருணகிரி.

கல்வி: நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவேலை வழங்குவதை நிறுத்துங்கள் !

கல்வி: நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவேலை வழங்குவதை நிறுத்துங்கள் !

சில ஆசிரியர்கள் நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் மாணவர்களுக்கு வீட்டுவெலைகளை அனுப்பி பெற்றோரைத் தொந்தரவு செய்வதாக பரவலாக முறைப்பாடுகள் வந்தள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது. இவ்வாறு நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவெலைகளை அனுப்புவதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் ஸ்ராலின் ஜோசப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் பயிற்சிகள், விளக்கங்கள் மாணவர்களுக்கு நேரடியாக முகத்துக்கு முகம் பார்த்து வழங்கப்பட வேண்டும். இவ்வாறான காலநேரமற்ற வட்ஸ்அப்கள் அனுப்பப்பட்டால் அது பற்றிய முறைப்பாடுகளை பதிவுசெய்யுமாறு அவர் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வி அமைச்சு ஏற்கனவே நேரகாலம் பராது வட்ஸ்அப் மூலம் வீட்டுவெலைகள் அனுப்புவது தொடர்பில் ஆசிரியர்களுக்க அறிவுறுத்தல்களை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கிழக்கில் துறைமுக அதிகார சபையும் – வடக்கில் வன இலாகாவும் மக்களின் காணி அபகரிப்பில் !

கிழக்கில் துறைமுக அதிகார சபையும் – வடக்கில் வன இலாகாவும் மக்களின் காணி அபகரிப்பில் !

இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் 5226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது உள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி குகதாசன் மேலும் உரையாற்றிய போது திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மாகாண மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் வரும் முதன்மையான வீதிகள் உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே இதனை மறுசீரமைக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பாலங்களும் பழுதடைந்துள்ளன. இவை நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும்.இவற்றைப் புதிதாக அமைக்க வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவில் வன இலாகாவின் காணி அபகரிப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள எம்.பி ரவிகரன்இ முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 74.24 வீதமான நிரப்பரப்பு வன இலாகாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் காணிகளில் ஒரு துண்டு காணியேனும் விடுவிக்கப்படவில்லை. இந்த காணிகள் யாவும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களாகும்.

இது ஒரு புறமிருக்க வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் நீர்நிலைகளும் அதுசார்ந்த இடங்களுமாக 61 ஆயிரத்து 401 ஏக்கர் நிலம் உள்ளது எனக் கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 321 ஏக்கர் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுபோக படையினர் தொல்லியல் திணைக்களம் மகாவலி அதிகாரசபை உள்ளிட்டவையும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.

எமது அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள் வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கான பேருந்துக்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

எமது அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள் வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கான பேருந்துக்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

பாடசாலை மாணவர்களின் பொது போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு ‘சிசுசரிய’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 2000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டுமென சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நாடாளுமன்ற நேற்றைய அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு கல்வி அதிகாரிகள் தங்கள் பிரதேசங்களுக்கான தேவையை முன்வைத்தள்ளார்களா ? இது வரை எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு கிழக்கின் பின் தங்கிய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் பற்றி அதிகம் பேசியதில்லை. குறிப்பாக பரந்து விரிந்த வன்னி நிலப்பரப்பில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது. விக்கினேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபையின் பதவிக்காலத்திலும் முதலமைச்சரும் அமைச்சர்களும் ஊழல்மோசடி செய்து தங்களை வளர்த்துக்கொண்டனர். மாணவர்கள் பற்றி அவர்கள் கிஞ்சித்தும் கவனம் செலுத்தவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சர்வதேசமே பதில் சொல்லு ! செவிட்டு காதுகளில் ஊதும் சங்காகியது !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சர்வதேசமே பதில் சொல்லு ! செவிட்டு காதுகளில் ஊதும் சங்காகியது !

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

இதன் போது சர்வதேசமே பதில் சொல் சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன! பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியிருந்தனர்.