March

March

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

 

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிவஞானம், “எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடனான சந்திப்பில் முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

படலந்த வதைமுகாம் உட்பட ஏனைய வதைமுகாம்கள் பற்றியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்

படலந்த வதைமுகாம் உட்பட ஏனைய வதைமுகாம்கள் பற்றியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்

பட்டலந்த வதை முகாம் போன்று பல வதைமுகாம்கள் இருந்தன. அவ்வாறான அனைத்து வதை முகாம்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க நேற்றைய தினம் மார்ச் 29 வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்த பின் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பிலும் கருத்து வெளியிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் காணிகள் விடுவிப்பு, வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் வடக்கின் கைத்தொழிற்ச்சாலைகளை மீள இயக்குதல் என படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அந்த நடைமுறைகளின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

அமைச்சர் பிமல் குறிப்பிடும் போது தெற்கில் ஜேவிபி, யுஎன்பி என்று பிரிந்து இருந்தது போன்று வடக்கு- கிழக்கில் எல்ரிரிஈ , புளொட் , ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், ரெலோ என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள். வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பூடகமாக தெரிவித்த வதைமுகாம்கள் விசாரணையில் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து இராணுவ துணைக்குழுக்களாக செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் நடத்திய வதைமுகாம்கள் தொடர்பான விசாரணகள் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக புளொட் மாணிக்க தாசன் தலைமையில் வவுனியாவில் வதைமுகாம் குறிப்பிடத்தக்கது.

ஆனையிறவு உப்பும் – உப்பு அரசியலும்: உப்பில்லா தமிழ் தேசியம் குப்பையில் !

 

நேற்றைய தினம் மார்ச் 29 ஆம் திகதி தேசிய உப்பு நிறுவனத்தின் அனுசரணையில் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்ச்சாலை திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்றைய தினம் மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்ச்சாலையில் 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்திற்கு 5 மெட்ரிக் தொன் மேசை உப்பை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டிலிருந்து ஆனையிறவு உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளதாகவும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் இவ் ஆரம்ப நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

 

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் , வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தனது உரையின் போது “ மன்னாரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை விட ஆனையிறவு உப்பே தரமானது “என குறிப்பிட்டார்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்தவகையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தேசிய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

 

மேலும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றும் போது “ எமது அரசாங்கம் பதவிக்கு வந்து 5 மாதங்களில் ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை விரைவாக திறந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்”. அவர் மேலும் குறிப்பிடும் போது “ கடந்த காலங்களில் ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பை வேறு தரப்புக்கள் கொள்வனவு செய்து, வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்தார்கள். ஆனால் இப்போது ஆனையிறவிலிருந்தே மக்களுக்கு உப்பை விற்பனை செய்யும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிட்டார்”.

 

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது உரையில், இன்றைய நாள் உங்களுகளும், எங்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். பல இன்னல்களைச் சந்தித்தாலும் எமது மண்ணின் வாசத்தை பரப்பியது ஆனையிறவு உப்புத்தான். பலரும் விரும்பிப் பயன்படுத்து ஆனையிறவு மேசை உப்பு மீண்டும் உங்கள் கைகளுக்கு வரப்போகின்றது. ஆனையிறவு உப்புக்கு தனியான ‘மவுசு’ உண்டு. விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் உலகம் எங்கும் இது விற்பனையாகும், என்று குறிப்பிட்டார்.

 

இதற்கிடையில் ஆனையிறவில் உற்பத்தி செய்யும் உப்பு “ ரஜலுணு” என்ற சிங்களப் பெயரில் சந்தைக்கு வருகிறது என சர்ச்சையை பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் கிளப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இந்த உப்பளம் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் கீழ் ஆனையிறவு உப்பு என்றே இயங்கியது. ஆனால் இப்போது ஏன் சிங்களப் பெயர். “ யாரோ பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதானால் அதை தமிழில் கூட வைக்க முடியாத நிலை” என சமூக வலைத்தளங்களில் உப்புக் காய்ச்சுகிறார்கள். உள்ளூராட்ச்சித் தேர்தல் சமீபத்தில் வர இருப்பதால் என்பிபி அதிரடியாக ஆனையிறவு உப்புத்தொழிற்ச்சாலையை திறந்து வடக்கின் வாக்குகளை அள்ளப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு “ உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தையே தொடங்குவார்கள் போலுள்ளது. காலனிய இந்தியாவில்ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்தி காலத்தில் கடல் நீரில் உப்புக் காய்ச்சுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

 

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ரஜ உப்பு என்ற பெயர் கடந்த கால ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டது. உடனடியாக அந்தப் பெயரை மாற்றமுடியாமையாலே தொடர்ந்தும் அதே பெயரில் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு “ ஆனையிறவு உப்பு “ என்ற பெயரிலேயே உலகெங்கும் விற்பனையாகும் என உறுதியளித்துள்ளார். இருந்தும் இந்த விடயம் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பெரிதாக்கப்படுகின்றது. இந்த பெயர் விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் போர்க் கொடி தூக்கியுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறிதரன் ஆனையிறவு உப்பளத்தை விரைவாக ஆரம்பிக்க கோரியதோடு , இந்தியாவுடன் தான் பேசியதாகவும் , ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை கையேற்க இந்தியா தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுக்கு உப்புத் தொழிற்ச்சாலையை தாரை வார்க்க விரும்பிய எம்பி சிறிதரன் பெயர் மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும் அமைச்சுக்கு கடிதம் எழுதியமை வேடிக்கையானது.

 

உப்புச் சத்தியாகிரகம் போல் ஒரு உப்பு எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வடக்கு கிழக்கை மீட்க வேண்டும் என சில சமூக ஊடகப்போராளிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருப்பதால் என்பிபி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வரும் போது உப்பைத் தெளித்து தமது எதிர்ப்பை காட்டும் படி அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் என்பிபி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளின் முன் உப்பு பைகளை வைக்கும்படியும் கோரியுள்ளனர். ஏனெனில் அவர்கள் உப்புப் போட்டு சாப்பிடாததால் ரோஷம் அற்று பெரும்பான்மை கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இப்படியாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வினோதமான போராட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

 

வடக்கு கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பாரிய பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, சட்டவிரோத மண் கடத்தல் , சுண்ணக்கல் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் தமிழ்ப் பாதாள உலக குழுக்களின் கொள்ளை மற்றும் கொலை அட்டகாசங்கள் என பல விடயங்கள் உள்ளன. ஆனால் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பெயரை வைத்து ‘ உப்பு அரசியல்’ ஒன்றை தொடங்கியுள்ளனர்.

 

“ஆனையிறவு உப்பு “ என்ற பெயரில் சுட்ட வேண்டியது ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கை. ஆனையிறவு உப்பளம் வடக்கின் அடையாளம். அது தன்னகத்தே பல வரலாற்று தடங்களை பதிவு செய்துள்ளது. ஆனையிறவு உப்பளம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான இடத்தினை வகித்துள்ளது. இந்த உப்புத் தொழிற்ச்சாலையை புனரமைக்க 2010 இல் 100 மில்லியனை அப்போதைய அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. பின்னர் 2015 இல் மேலதிகமாக 125 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டது. 2018 இல் 95 வீதமான புனரமைப்பு பணிகள் முடிவடைந்திருந்தாக கூறப்படுகின்றது. எம்பி சிறிதரன் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த போது ஏன் ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை திறக்க கோரவில்லை. 95 வீதமான வேலைகள் முடிவடைந்த நிலையில் இத் தொழிற்ச்சாலை 7 வருடங்களாக திறக்கப்படவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் என்பிபி உப்புத் தொழிற்ச்சாலையை இயங்க வைத்துள்ளது. ஆகவே வடக்கில் இயங்காதுள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளையும் மீண்டும் நல்ல நிலையில் இயங்க வைப்பதன் மூலம் வடக்கின் இளையோருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். “ யார் குத்தியும் அரிசியானால் சரி” . உசுப்பேத்தும் அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.

டொரெண்டோ கொலை சம்பவம் – இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் கனடாவில் கைது !

டொரெண்டோ கொலை சம்பவம் – இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் கனடாவில் கைது !

கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும் பல சொத்து திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு – தள்ளுபடி செய்தது கனேடிய உச்ச நீதிமன்றம் !

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு – தள்ளுபடி செய்தது கனேடிய உச்ச நீதிமன்றம் !

 

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் என்று அழைக்கப்படும் சட்டமூலம் 104 ஐ எதிர்த்து இலங்கை குழுக்கள் தாக்கல் செய்த வழக்கை கனேடிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்ராறியோ மாவட்ட சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியையும் ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கிழமையாக குறிப்பிடப்படுகிறது. மே 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் நேரமாக இது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஒன்ராறியோ சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த 104 சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் பல சிங்கள அமைப்புகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒன்ராறியோ நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, தொடர் தோல்வியடைந்த சட்ட முயற்சிகளைத் கருத்தில் கொண்டு, கனேடிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதீத போதை; இளைஞன் சாவு!

அதீத போதை; இளைஞன் சாவு!

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் அதீத போதை காரணமாக கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவுலும், உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட நீதிமன்றம் கட்டளை !

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட நீதிமன்றம் கட்டளை !

யாழ்.மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்காக தமிழ் மக்கள் கூட்டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உச்ச நீதிமன்றம் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

சட்டமா அதிபர் அலுவலகத்தில் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இலங்கை தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுக்கும் இடையில் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அக்கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக. ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறும். அவ்வாறு இணைக்கப்பாட்டுக்கு வராத மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அதேவேளை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 09 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !

தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !

பௌத்தத்துக்கு எதிரான தம்புத்தேகம வெள்ளையரே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில், “தேர்தல் நெருங்கும் போது விகாரைகளுக்கு சென்ற ஜனாதிபதி, தன்னை ஒரு பௌத்த ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால், மறுபுறம் தையிட்டி விகாரையை சுற்றியிருந்த இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாமையால் வெள்ளையர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தம்புத்தேகமவில் இருந்து வந்திருக்கும் வெள்ளையருக்கு எதிராகவும் அதுவே நடக்கும். நீங்கள் செய்த தவறுக்கு புத்த சாசனத்தின் முன் விழுந்து மன்னிப்பு கோருங்கள். நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோருங்கள். பௌத்தர்களின் புராண கால விகாரையான தையிட்டி விகாரை மீது கை வைக்க நினைக்க வேண்டாம். தையிட்டி திஸ்ஸ விகாரை மீது கை வைப்பதற்கு ஜனாதிபதி உட்பட யாருக்கும் உரிமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது !

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது !

மாணவி ஒருவரை தடியால் கையில் அடித்தமைக்காக பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வினாத்தாளை திருத்துவதற்காக மாணவர்களிடம் மாற்றிக் கொடுத்த ஆசிரியர், முறைகேடான வகையில் மதிப்பெண்களை தனக்கு அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றையதினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை ஒன்று கைதுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு வாகனம் செலுத்த வாழ்நாள் தடை !

மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு வாகனம் செலுத்த வாழ்நாள் தடை !

மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டு அவர், மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார்.